Showing posts with label சாதனைப் பெண். Show all posts
Showing posts with label சாதனைப் பெண். Show all posts

Saturday, January 8, 2011

உலகிலேயே  மிகச்சிறிய பாதங்களையுடைய பெண்

சீனாவில் வசிக்கும் 90 வயதுடைய லியூ (Liu) என்ற வயோதிபப் பெண்மணி தான் "உலகிலேயே மிகச்சிறிய பாத"ங்களைக் கொண்டவர் என்ற உலக சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார்.
இது இவர்களுக்கு பிறப்பு முதல் இருப்பதில்லை. மாறாக, சிறுவயதிலேயே பாதங்களின் வளர்ச்சியை தடுத்து நிறுத்துவது இவர்களது பயங்கரமான பரம்பரை பழக்க வழக்கமாக உள்ளது.
அடிப்படையில், பிஞ்சு விரல்கள் வளைக்கப்படுவதனால், எந்த வித நோவுமின்றி வளைகின்றது. பின்னர், அதனைச்சுற்றி கட்டு இடப்பட்டு, மிகச்சிறிய காலணிகளை  அணிந்து கொள்கின்றனர்.
இதன் காரணமாக பாதங்களின் சாதாரண வளர்ச்சி குன்றி சிறிய பாதங்களாக வளர்கின்றது.





Wednesday, January 5, 2011

 69 வயது கொரிய பெண்ணின் சாதனை.

960 முறை பரீட்சைக்கு தோற்றி சாதனை.
69 வயதுடைய (Cha-Sa-Soon) சா-ச-சூன் என்ற கொரிய பெண்மணி நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக, தனக்கு வாகன செலுத்துவதற்கான அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக (4,000,000 Won) சுமார் 3500 அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளார்.இவர் தோற்றிய பரீட்சைகள் அனைத்திலும் பரிதாபகரமான முறையில் தேர்ச்சி பெற முடியவில்லை.

இறுதியாக, இவரது அயராத முயற்சியின் காரணமாக,கடந்த நவம்பர் 4, 2009ல் நடைபெற்ற பரீட்சையில் 960 வது முறையாக தோற்றி, 100 புள்ளிகளுக்கு 60 புள்ளிகளைப்பெற்று தேர்ச்சி பெற்று சாதனை படைத்து,  தனக்குரிய வாகன ஓட்டுவதற்கான அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

தான் தேர்ச்சி பெற்ற சந்தோஷத்தில் Yonhap செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்த (Cha-Sa-Soon), தனக்கென ஒரு காரை சொந்தமாக வாங்கி தனது பிள்ளைகளின்வீடுகளுக்கு செல்லவும், தனது மரக்கறி வியாபாரத்தை விரிவுபடுத்தவும் எண்ணி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Tuesday, August 17, 2010

வசதியில்லாதவர், ஆனால் இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்த பெண்

ஜெர்மனியில் நடந்த உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வினி சாவந்த், தங்கப் பதக்கம் பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். இதன்மூலம், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் தங்கப் பதக்கம் பெற்ற முதல் பெண் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த தேஜஸ்வினி, இந்த உயரிய சாதனையை பெறுவதற்காக பட்ட கஷ்டம் கொஞ்சமல்ல. தேஜஸ்வினியை விட அவரது தந்தை ரவீந்திர சாவந்த் பட்ட கஷ்டம் தான் அதிகம். ரவீந்திர சாவந்த் கடற்படையில் இன்ஜினியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தேஜஸ்வினிக்கு இளம் வயதிலேயே துப்பாக்கி சுடும் போட்டியில் ஆர்வம் அதிகம் இருந்ததை அவர், அடையாளம் கண்டு கொண்டார். இதற்கான பயிற்சியில் தேஜஸ்வினியை அவர் சேர்த்து விட்டார். துப்பாக்கி சுடும் போட்டிகளில் பங்கேற்பதற்கும், அதற்கு தேவையான துப்பாக்கிகளை வாங்குவதற்கும், நவீன பயிற்சிகளை பெறுவதற்கும் அதிகமான பணம் தேவைப்பட்டது. ரவீந்திர சாவந்தால் அந்த அளவுக்கு பணம் புரட்ட முடியவில்லை இருந்தாலும், பணம் இல்லை என்ற காரணத்தால், தன் மகளின் சாதனை தடைபட்டுவிடக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அதற்காக, தனக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் கடன் வாங்கினார்.  இறுதியில் தேஜஸ்வினியின் கனவு நனவானது. 2001ல் போட்டியில் பங்கேற்பதற்கான துப்பாக்கி அவருக்கு கிடைத்தது.
இதுகுறித்து ரவீந்திர சாவந்த் கூறுகையில்,"தேஜஸ்வினி மிகவும் திறமையானவள். எப்படியும் உலக சாம்பியன் ஆகி விடுவாள். ஆனால், அதற்கு பணம் தடையாக இருக்கக் கூடாது'என்றார். ஆரம்ப காலத்தில் பங்கேற்ற போட்டிகளில் தேஜஸ்வினிக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. தற்போது அவரது தந்தை கனவு பலித்து விட்டது. ஜெர்மனியின் முனீச் நகரில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில், 50 மீட்டர் "ரைபிள் புரோன்' பிரிவில் தேஜஸ்வினி தங்கப் பதக்கம் பெற்று விட்டார். இது மட்டுமல்லாமல், இந்த பிரிவில் ஏற்கனவே செய்யப்பட்ட உலக சாதனைøயும் அவர் சமன் செய்தார். ஆனால், இதைப் பார்ப்பதற்கு ரவீந்திர சாவந்த் தற்போது உயிருடன் இல்லை. கடந்த பிப்ரவரியில் அவர் இறந்து விட்டார். போட்டியில் வெற்றி பெற்றவுடன்,"இந்த வெற்றியை என் தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்'என, உணர்ச்சிப் பெருக்குடன் தேஜஸ்வினி கண்ணீர் வடித்தார்.
வெற்றியின் ரகசியம் குறித்து தேஜஸ்வினி கூறுகையில்,"போட்டியைப் பற்றியே எந்த நேரமும் சிந்திக்க வேண்டும். போட்டியில் பங்கேற்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னரே, அதற்கு தயாராகி விட வேண்டும். சீனாவில் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்பவர்கள், இளம் வயதிலேயே அதற்கு தயார் செய்யப்படுகின்றனர். அவர்களுடன் நெருங்கிப் பழகியதன் மூலம், சில முக்கியமான விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது'என்றார். இவர் பணக்கார குடும்பத்தில் பிறந்து எளிதாக வாழ்க்கைப் பாதையில் முன்னுக்கு வரவில்லை. மாறாக உழைப்பு அவருக்கு வெற்றியைத் தந்தது. டில்லியில் நடைபெறும் காமன் வெல்த் போட்டிகளில் தேஜஸ்வினி பங்கேற்றால், நமது நாட்டிற்கு நிச்சயம் விருது உண்டு என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார்.
நன்றி,தினமலர்.

Tuesday, June 8, 2010

சாதனைப் பெண் டேனியலா கார்சியா

  wheelchair-disabledஇறைவன் கொடுத்த உடல் உறுப்புக்கள் எல்லாம் நன்றாகவே இருந்தாலும், எதிர்மறைச் சிந்தனைகளை மனம் முழுதும் நிரப்பிக்கொண்டு எதையும் செய்யாமல் முடங்கிக்கிடப்பவர் பலர். சுண்டுவிரலில் சுளுக்கு ஏற்பட்டால்கூட உடன் இருப்பவர்களைக்கலங்க அடிப்பவர் பலர். இவர்களுக்கு மத்தியில் தனக்கு ஏற்பட்ட மிகக் கொடுமையான விபத்தில் இருந்து மீண்டெழுந்தது மட்டுமின்றி, தான் விபத்தில் அடிபட்டதையும் அதிலிருந்து மீண்டதையும் 'மகிழ்ச்சியான கதை' என்று கூறும் ஒரு வித்தியாசமான பெண் டேனியலா கார்சியா.

பல் மருத்துவரான தாய்க்கும், சிலி நாட்டின் முக்கியமான நகரமான சாண்டியாகோ நகரத்தில் அமைந்துள்ள 'சிலி பாண்டிஃபிசியா கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில்' மருத்துவத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றும் தந்தைக்கும் மகளாகப் பிறந்த டேனியலா அழகு, அறிவு, ஆற்றல் இவை கலந்த அற்புதக்கலவை. படிப்பிலும் விளையாட்டிலும் சுட்டியாக விளங்கிய டேனியலா மிகக்கடுமையான நுழைவுத்தேர்வுகளைத் தாண்டி தன் தந்தை பணியாற்றும் பல்கலைக்கழகத்திலேயே மருத்துவ மாணவியாகச் சேர்ந்தாள். தனது நான்காவது வருடப்படிப்பில் இருந்த டேனியலா, தேர்வுகளுக்கு சிறிது தினங்களுக்கு முன், தன் கால்பந்துக்குழுவின் வற்புறுத்தலின் காரணமாக 2002ம் வருடம், அக்டோபர் முப்பதாம் நாள் 'டெம்யுகோ'நகரத்தில் நடக்கவிருந்த விளையாட்டுப்போட்டிகளுலில் கலந்துகொள்ள தனது கல்லூரி நண்பர்களுடன் புகைவண்டியில் புறப்பட்டாள். டெம்யுகோ நகரத்திற்கு ஏராளமான மாணவமாணவிகள் விளையாட்டுப்போட்டிகளுக்குச் செல்வதற்காக புகைவண்டியில் பழைய, அழுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன. மனதில் ஏதோ சொல்லத்தெரியாத ஒரு உறுத்தல் நிலவியபோதும், டேனியல்லா தன் பயணத்தைத் துவக்கினாள்.

சற்று நேரம் கழித்து, அந்தப்பெட்டியில் இருந்த இரு நண்பர்கள், அடுத்த பெட்டியில் தனது குழுவினர் இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு வரலாம் என்று அழைத்ததால் அவர்களுடன் சென்றாள் அவள். அவள் ஒரு பெட்டிக்கும் இன்னொரு பெட்டிக்கும் இருந்த பாதை வழியாகச் செல்ல முயல்வதற்கும், அந்தப் பழைய புகைவண்டிப்பெட்டியில் இருந்த இடைவெளி, வண்டி ஒரு வளைவில் திரும்பியபோது விரிவடைவதற்கும் சரியாக இருந்தது. டேனியல்லாவிற்கு மீண்டும் விழிப்பு வருகையில் அவள் தண்டவாளத்தின் நடுவில் கிடந்தாள். தனது கைகளையும் கால்களையும் அவள் அசைக்க முயல்கையில்...........பேரதிர்ச்சி. அவள் தனது கால்கள், கைகள் அனைத்துமே துண்டாகிக் கிடந்ததை உணர்ந்தாள். மருத்துவ மாணவியான அவள் தனது இரத்த இழப்பு மிகவும் அதிகம் என்பதையும், உடனடியாக மருத்துவ உதவி கிடைக்கவில்லை என்றால் தான் இறந்துவிடுவோம் என்பதையும் உணர்ந்துகொண்டாள். நட்ட நடு இரவில், இருப்புப்பாதையில் கிடக்கும் தான் இன்னொரு புகைவண்டி வந்தால் கண்டிப்பாகப் பிழைக்க மாட்டோம் என்று நினைத்த அவள் பீதியடைவதில் பலனில்லை என்று தன்னைத் தானே தேற்றிக்கொண்டு, தனது உடல் உறுப்புக்கள் துண்டாகியிருந்த பொழுதும், மனம் தளராமல் எப்படியோ ஊர்ந்து தண்டவாளத்தை விட்டு நகர்ந்தாள். பின் 'உதவி உதவி' என்று உரத்த குரலில் கத்தத் தொடங்கினாள்.

பண்ணைப் பணியாளரான ரிகார்டோ தனது மனைவிக்குத் தெரியாமல் புகை பிடிப்பதற்காக தன் வீட்டின் அருகில் இருந்த இரயில் தண்டவாளத்தின் பக்கம் வந்தபொழுது ஒரு பெண் உதவிகேட்டு அலறும் குரல் கேட்டது. அருகில் சென்று அவளைப்பார்த்த அவர் பதறிப்போனார். 'பொறு, நான் உதவியுடன் வருகிறேன்' என்று சொல்லிவிட்டு ஓடி, பக்கத்தில் இருந்த பெட்ரோல் நிலையம் சென்று ரான்குவா நகர அவசர உதவி மையத்தைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

அவசர உதவி மையத்தினர் அதிசயப்படும் அளவு உணர்வுடனும் தெளிவுடனும் இருந்த டேனியலா, தனது பெயர், தாய்தந்தையர் பெயர், முகவரி, தொலைபேசி எண் அனைத்தையும் கூறினாள். மருத்துவமனைக்கு அவசரமாக எடுத்துச் செல்லப்பட்டு, அறுவை சிகிச்சை அறைக்குள் நுழையுமுன், 'நான் மீண்டும் நன்றாக ஆகிவிடுவேனில்லையா?' என்று அவள் கேட்டபொழுது அன்பு நிறைந்த பார்வையும் ஆறுதல் அளிக்கும் குரலும் உடைய மருத்துவர் ஒருவர் 'நீ கண்டிப்பாக குணமாகிவிடுவாய்' என்று கூறியபின்தான் 'இனி தான் செய்வதற்கு ஒன்றுமில்லை, மருத்துவர்கள் தன்னைக் கவனித்துக்கொள்வார்கள்' என்ற நம்பிக்கையுடன் கண்களை மூடிக்கொண்டாள் அவள்.

ஆறு வாரங்கள் ரான்குவா மருத்துவமனையில் தங்கியிருந்த டேனியல்லா, உறுப்புகளைச் சீரமைப்பதற்கும், செயற்கை உறுப்புகள் பொருத்துவதற்கும் புகழ்பெற்ற பிலடெல்பியா நகரத்தில் அமைந்திருந்த, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மோஸ் சீரமைப்பு நிலையத்தில் அவள் தந்தையால் சேர்க்கப்பட்டாள். காலை ஒன்பது மணி முதல் மாலை ஆறு மணிவரை அவளுக்குப் பல்வேறு விதமான பயிற்சிகள் நடப்பதற்கும், உணவு உண்பதற்கும், உடையணிவதற்கும் பற்பல மருத்துவக்குழுக்களால் தொடர்ந்து கொடுக்கப்பட்டன. பிளாஸ்டிக்கினால் ஆன செயற்கை உறுப்புகள் அவளுக்குப் பொருத்தப்பட்டு, மருத்துவரின் உதவியோடு எழுந்து நின்ற பொழுது அவள் அனுபவித்த மகிழ்ச்சி அவளுக்கே அதிசயமாக இருந்தது. விபத்துக்கு முன்பு கூட இத்தகைய ஒரு பெரிய மகிழ்ச்சி தனக்குக் கிடைத்ததில்லை. ஒரு துயரமான நிகழ்வு இத்தனை இன்பத்தைத் தனக்கு அளிக்க முடியும் என்பது தனக்கு வினோதமாக இருக்கிறது என்று தன் தாயிடம் கூறினாள் டேனியல்லா.

பிலடெல்பியா மோஸ் மருத்துவமனையில் ஆறு வாரங்கள் தங்கியிருந்த பின் தனது ஊர் திரும்பிய டேனியல்லா, சில மாதங்களுக்குப் பின் மீண்டும் அங்கு சென்று தனது செயற்கை உறுப்புகளில் சில நுட்பமான மாறுதல்களைச் செய்துகொண்டாள். ஒரு வருட இடைவெளிக்குப் பின் மீண்டும் தனது மருத்துவப்படிப்பைத் தொடர்ந்த அவள், விபத்துக்கு முன்பை விட அதிக மதிப்பெண் பெற்று இப்பொழுது தன்னைப்போலவே விபத்தினால் உறுப்புக்களை இழந்தவர்களுக்கான மருத்துவராகத் திகழ்கிறாள்.

இருபத்தேழு வயதாகும் டேனியல்லா, தனக்குப் பிடித்த பொழுதுபோக்கான மோட்டார்பைக் சவாரி செய்வது முதல், தனது நோயாளிகளைப் பரிசோதனை செய்வது வரை, தனக்குத் தானே அலங்காரம் செய்து கொள்வது, சமைப்பது, எழுதுவது எல்லாம் தனது செயற்கைக் கையில் பொருத்தப்பட்டுள்ள கொக்கி போன்ற அமைப்பின் உதவியால்தான். 'இந்தக் கொக்கியைக்கொண்டு தொடும்பொழுதுகூட என்னால் நோயாளியின் உடலில் உள்ள வேறுபாடுகளை உணரமுடிகிறது. ஆனால் அந்த உணர்ச்சியை என்னால் விளக்க முடியாது' என்று சொல்லும் டேனியல்லா, தான் காதலித்த 'ரிகார்டோ ஸ்ட்ர'பை மணந்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறாள். 'அந்த விபத்துக்குப் பின் தனது இழப்பை எண்ணி அழுதுகொண்டு இருந்திருந்தால் ஒருவேளை எங்கள் காதல் முறிந்திருக்கலாம். ஆனால் டேனியல்லாவின் அசாதாரணமான தைரியம், அந்த விபத்து அவளது வாழ்க்கையைக் குலைக்கவிடாமல் செய்து விட்டது. இப்பொழுது என் வாழ்நாள் முழுவதும் நான் டேனியல்லாவுடன்தான் வாழ விரும்புகிறேன்' என்கிறார் ரிகார்டோ.

தனது அனுபவத்தை எழுதி டேனியல்லா வெளியிட்ட வாழ்க்கை வரலாறு, ஏராளமான பதிப்புகள் விற்று, சாதனை படைத்துள்ளது. தினமும் பலரிடமிருந்தும் அவளது வாழ்க்கை தங்களை எப்படி ஊக்குவித்தது என்று எழுதும் கடிதங்களும் தொலைபேசி அழைப்புகளும் குவிகின்றன. 'என் கதை இத்தனை பேருக்கு ஊக்கமளிக்கும் என்று நான் நினைக்கவேயில்லை.' என்று ஆச்சர்யமடைகிறாள் டேனியல்லா.

தான் இழந்தது குறித்த வேதனையில் மூழ்காமல் தன் மருத்துவர் எஸ்க்வெனாசி கூறிய வரிகளான 'நீ உன் வாழ்க்கையை எப்படி அமைக்கிறாயோ அப்படித்தான் உன் வாழ்க்கை இருக்கும்' என்ற வரிகளை மனதில் கொண்டு, தனது விபத்தைக்கூட ஒரு வியக்கத்தக்க பரிசு என்று கருதி ஆனந்தமாக வாழும் டேனியல்லா கார்சியாவைப் பார்த்து, நாம் அனைவரும் வாழ்க்கையை நிறைவுடன் வாழக் கற்றுக்கொள்ளவேண்டும்.
Thanks to Eezhanesan