Sunday, August 8, 2010

என்ன பாவம் செய்தாள்? இந்தச் சிறுமி கொல்லப் படுவதற்கு?

வளைகுடாவின் கத்தர், சவூதி ஆகிய நாடுகளில் உள்ள இரு இந்தியப் பள்ளிக்கூடங்களில், கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் பள்ளிப் பேருந்து ஓட்டுநரின் அசட்டையினால் நிகழ்ந்த அதிர்ச்சிகரமான சிறார் இருவரது மரணங்களைத் தொடர்ந்து, பெற்றோரின் மனதில் நிம்மதியை ஏற்படுத்தும் வகையிலும் அசம்பாவிதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியிலும் கத்தரில் உள்ள இந்தியப் பள்ளி ஒன்று ஹை-டெக் தீர்வைக் கையில் எடுத்துள்ளது. 
இப்புதியமுறை மூலம் வீட்டிலிருந்து பள்ளிவாகனத்தில் ஏறும் குழந்தைகள் வாகனத்திற்குள் நுழைவதையும் வெளியேறுவதையும் உடனுக்குடன் குறுஞ்செய்தி மூலம் பெற்றோர்கள் அறிந்து உறுதி செய்து கொள்ள முடியும். பள்ளிக்கு அனுப்பும் குழந்தைகள் பள்ளிக்குச் சென்று சேர்ந்தனரா இல்லையா? என்பதை வீட்டிலிருந்தே அறிந்து கொள்ள முடிவதால், இப்புதிய வசதி பெற்றோரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 
சாட்டிலைட் உதவியுடன் பல புதிய டெக்னாலஜிகளை உபயோகித்து, மிகுந்த பொருள் செலவில் இவ்வசதி செய்யப்படுவதற்கான கட்டாயத் தேவை யாது? எனும் வினாவுக்குப் பெட்டிச் செய்தியில் விளக்கமான விடை உள்ளது.
கடந்து போன ரணங்கள்

கடந்த இருமாதங்களுக்குமுன் கத்தர் நாட்டின் தலைநகரான தோஹாவில் உள்ள இந்தியப் பள்ளிக்கூடம் ஒன்றின் மாணவ-மாணவியரை அழைத்துக் கொண்டுவரும் மினிவேன் ஒன்றினுள் இருந்து நான்கரை வயதான சாரா என்ற KG-1 வகுப்பில் பயிலும் ஒரு சிறுமி இறங்காமல் தூங்கி விட்டாள். இதனை அறியாத மினி வேன் ட்ரைவர், எப்போதும்போல் திறந்த வெளியில் உள்ள வாகன நிறுத்தத்தில் மினிவேனை நிறுத்திவிட்டுச் சென்று விட்டார்.

வளைகுடா நாட்டின் வெப்பம் உலகறிந்தது. அதிகபட்சமாக 55 டிகிரி செண்ட்டிகிரேட்வரை திறந்த வெளியில் உள்ள வெப்பம், கதவுகளையும் கண்ணாடி ஜன்னல்களையும் இறுக மூடிய ஒரு வாகனத்திற்குள் 70 டிகிரி செண்ட்டிகிரேட்வரை உயரும். இத்தகைய கடுமையான அவஸ்தையில் துடித்து இறந்துபோன அந்த ரோஜா மலர்களின் மறுமை வாழ்வு சிறக்க, அடிமனதில் இருந்து உருக்கமாக பிரார்த்திக்கிறோம்.

கடந்த மே 17, 2010இல் கத்தர் தோஹாவில் உள்ள இந்தியப் பள்ளிக்கூடத்தில் இறந்துபோன சாரா முஹம்மத் குறித்த விரிவான செய்தி காண்க:
oOo
இச்சம்பவத்தின் தாக்கம் மனதைவிட்டு அகலும் முன்னரே அடுத்த 25 தினங்களில் சவூதியிலுள்ள இந்தியப் பள்ளிக்கூடம் ஒன்றில் அச்சாக இதேபோன்றதொரு நிகழ்வில் மற்றொரு பிஞ்சு துடிதுடிக்க பலியானது.
கடந்த ஜூன் 13, 2010இல் சவூதியின் தம்மாம் புறநகர் அல்ராக்கா பகுதியில் உள்ள இந்தியப் பள்ளிக்கூடத்தில் இறந்து போன ஃபிதா ஹாரிஸ் குறித்த விரிவான செய்தி காண்க:
எதிர் வரும் செப்டம்பர், 2010 கத்தர் நாட்டில் அறிமுகமாகவிருக்கும் பள்ளிச் சிறார்களுக்கான இந்தத் தானியங்கிக் கண்காணிக்கும் முறை(Automated Child Tracking System -ACTS)யின் மூலம் பெற்றோர்களோடு, பள்ளி நிர்வாகமும் மாணவர்களின் வருகைப் பதிவேட்டைத் தனித் தனியே அறிந்து கொள்ள இயலும்.
"இந்தப் புதிய ஏற்பாடு, வாகனங்கள் மூலம் தினமும் பள்ளிக்குச் சென்று வரும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு உத்திரவாதத்தினை அளிக்கும்" என்கிறார் DPS பள்ளியின்  முதல்வரான A.K ஸ்ரீவஸ்தவா.
இப்புதிய ஏற்பாட்டிற்குத் தேவையான கருவிகளைப் பொருத்தும் பணியினைக் கத்தரில் உள்ள கணினி நிறுவனமான iNet Middle East செய்து வருகிறது. பள்ளிப் பேருந்துகளை சாட்டிலைட் உதவி கொண்டு தொடர்ச்சியாகக் கண்காணிக்கும் வகையில் automated Radio Frequency Identification (RFID)-இதில் பயன்படுத்தப் படுகிறது. இதற்காக iNet RFID, GPS (Global Positioning System) மற்றும் GPRS (General Packet Radio Service)ஆகிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப் படும்.
RFID என்பது தானியங்கி முறையில் அடையாளம் கண்டுணரும் முறையாகும். இதற்காகவே  செய்தியின் தொடக்கத்தில் காண்பிக்கப்பட்டுள்ள RFID அட்டைகளில் உள்ளீடு செய்யப் பட்ட விபரங்களைப் படிக்க, ரீடர்ஸ் எனப்படும் படிப்பான்கள் பள்ளிப் பேருந்துகளில் பொருத்தப்படும். பள்ளியிலுள்ள அனைத்து மாணவ-மாணவியரும் இந்த CHIP இணைக்கப்பட்ட அட்டையைத் தவறாமல் கொண்டுவர வேண்டும் என்பது முக்கிய விதியாக்கப்பட்டுள்ளது. இந்த அட்டைகளுடன் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டியது பெற்றோர்களின் கட்டாயக் கடமை என அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இந்த முறைமூலம், ஒரு குழந்தை வீட்டிலிருந்து கிளம்பிப் பள்ளிப் பேருந்திற்குள் நுழையும்போதும் வெளியேறும்போதும் நொடிப்பொழுதில் SMS குறுஞ்செய்தி ஒன்று பெற்றோருக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் சென்றுவிடும்படி அமைக்கப் பட்டுள்ளது.
இம்முறையை மற்ற இந்தியப் பள்ளிகளும் கடைப்பிடிக்க ஆரம்பிக்கும் என்று தெரிகிறது.
இதற்கான கருவிகளைப் பேருந்தில் பொருத்தும் iNet நிறுவனத்தின் மேலாளர் சுனில் நாயர் செய்தியாளர்களிடையே பேசும்போது, "இப்புதிய வசதியின் உதவியால் பேருந்து சென்று கொண்டிருக்கும் இடத்தை ரியல் டைமில் உடனுக்குடன் அறிந்து கொள்வது மட்டுமின்றி, குறிப்பிட்ட மாணவரோ மாணவியோ அந்தப் பேருந்தில் பயணித்தவாறு உள்ளனரா? என்பதையும் அறிந்து கொள்ளலாம்" என்றார். 
"இம்முறை பெற்றோருக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் பெரும் நிம்மதியை ஏற்படுத்தும். இந்தமுறை பற்றிப் பெற்றோர்களுக்கு முறையான அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பெற்றோரிடையே பெரும் வரவேற்பும் கிடைத்துள்ளது" என்று மேலும் அவர் கூறினார். 
குறுஞ்செய்தி அனுப்பும் முறைகளில் பல்வேறு வசதிகளை பயனர் விரும்பியவாறு மாற்றம் செய்து கொள்ளலாம். பேருந்தின் இஞ்சின் நிறுத்திய பிறகும் ஒரு மாணவர் பேருந்திலிருந்து இறங்காமல் இருந்தால், அதைப் பள்ளி நிர்வாகிகள் சிலருக்குத் தகவலாக அறிவிக்கும் வசதியும் இதில் செய்யப்பட்டுள்ளது. 
இரு இளம் தளிர்களின் கொடூர மரணம், புதிய முறையில் சிந்திக்கவும் பள்ளி செல்லும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் குழந்தைகளின் பள்ளி வருகை உறுதிப் படுத்துவதற்கான வசதியினைச் செய்யவும் வழிகோலியுள்ளது. இறைவனடி சேர்ந்து விட்டத் தளிர்களின் அநியாயமான மரணத்திற்குக் காரணமானவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க, பெற்றோர்களிடமிருந்து பரவலான கோரிக்கை எழுந்திருந்த நேரத்தில், இனிமேலும் இதுபோன்ற கவனக்குறைவான மரணங்கள் நிகழ்வதைத் தவிர்ப்பதற்கான வழி என்ன? என்பது குறித்துச் சிந்தித்ததும் பொருட்செலவைப் பெரிய விஷயமாக நினைக்காமல் அதற்கான வழியை நடைமுறைபடுத்த முன்வந்ததும் பாராட்டத்தக்க செயல்பாடாகும். 
அதே சமயம், பள்ளி நிர்வாகம் இப்புதிய திட்டத்தில் பயன்படுத்தப்படும் மின்னணு சாதனங்களைச் சரியாகப் பராமரித்து வருவதும் குழந்தைகள் பள்ளி வாகனத்தில் ஏறி, இறங்கி விட்டதை உறுதிப்படுத்த, தமக்கு வரும் குறுஞ்செய்திகளில் கவனமாக இருக்க வேண்டியது பெற்றோர்களினதும் கடமையாகும். இழந்துவிட்ட இளந்தளிர்களின் பிரிவு இறுதியானதாக இருக்க பிரார்த்திப்போம்.

நன்றி,சத்தியமார்க்கம் 

புற்றுநோயை விரட்டும் மாம்பழம்!

பழங்களின் அரசனான மாம்பழத்திற்குப் புற்றுநோயைக் குறைக்கும் ஆற்றல் இருப்பதாக லக்னோவிலிருக்கும் தொழில் நச்சியல் ஆராய்ச்சி மையம் ITRC (Industrial Toxicology Research Center) நிபுணர்கள் அறிவித்துள்ளனர். மருத்துவத்துறையில் மாங்காய் /  மாம்பழத்தின் உபயோகத்தைக் குறித்து பல்வேறு ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு வழிவகுக்கும் இப்புதிய கண்டுபிடிப்பு நடந்துள்ளது.
ITRC-யில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நிபுணர்கள் புற்றுநோய் பாதித்த சுண்டெலிகளுக்கு மாங்காய் கொடுத்து ஆய்ந்த பொழுது மிகப்பெரிய மாற்றங்கள் அவைகளில் நிகழ்ந்ததை கண்டறிந்தனர். மாங்காய் / மாம்பழம் சாப்பிட்டபின் சுண்டெலிகளின் புற்றுநோய் பாதித்த கட்டி(Tumour)கள் பெருமளவில் குறையத் தொடங்கின.
பின்னர் நடத்திய ஆய்வில் மாங்காய் / மாம்பழத்தில் அடங்கியுள்ள லூபியோல்(Lupeol) என்ற ரசாயனப்பொருள் புற்றுநோய்க்கு எதிராக செயல்படுவதாக நிபுணர்கள் கண்டுபிடித்தனர். புற்றுநோய்க் கட்டிகளைக் குறைப்பதோடு மட்டுமின்றி பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளுக்கும் லூபியோல் நிவாரணமாகும் எனவும் அவர்கள் கண்டறிந்துள்ளனர். லூபியோலில் அடங்கியுள்ள தனிப்பட்ட ரக விட்டமின்கள், ஆர்கானிக் அமிலங்கள், கார்போ ஹைட்ரேட்டுகள் போன்றவை ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு எதிராக செயல்படுகின்றன.
வேதிச்சிகிச்சை (Chemotherapy), அறுவை சிகிச்சை (Surgery), கதிரியக்கச் சிகிச்சை (Radiotherapy) முதலான பல்வேறு சிகிச்சை முறைகள் புற்றுநோய்க்குப் பரிகாரமாக இருந்தாலும் நாட்டில் புற்றுநோயை அடியோடு இல்லாமல் ஆக்க அவைகளால் இயலாது என சந்தேகத்திற்கிடமின்றி தெளிந்து புற்றுநோய் தாக்கப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை நாட்டில் அதிகரித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் மாங்காய் / மாம்பழத்தின் மூலம் நோய் குணமளிக்க  இயலும் என்ற இப்புதிய கண்டுபிடிப்பு மருத்துவ நிபுணர்களுக்கு புத்துணர்ச்சியை நல்கியுள்ளது.
லூபியோல் என்பது தாவரங்களில் காணப்படும் ட்ரைடெர்பீன் (Triterpene) ஆகும். இது கணையப் புற்றுநோய்க்கு எதிராக எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பது குறித்து அறிய இச்சுட்டியைச் சொடுக்கவும்.
எங்கள் இறைவா! நீ எதையும் வீணுக்காகப் படைக்கவில்லை! உன் புறத்திலிருந்து தகுந்த நிவாரணம் இல்லாமல் எந்த நோயும் மனிதனைப் பீடிப்பதில்லை!
நன்றி-சத்தியமார்க்கம்.
தகவல்-Farook Ashaar-Saudi Arabia. 

4 கை, 4 கால்களுடன் பிறந்த பெண் குழந்தை!

மதுரை அரசு மருத்துவமனையில் ஒரு தலை, இரு உடல், நான்கு கை, நான்கு கால்களுடன் வினோத குழந்தை பிறந்தது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணிப் பெண் ஒருவர், கடந்த வாரம் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று காலையில் அவருக்கு பிரசவம் நிகழ்ந்தது. அவருக்கு நான்கு கை, நான்கு கால்களுடன் வினோதமான பெண் குழந்தை பிறந்தது; இது அவருக்கு மூன்றாவது பிரசவம்.
அக்குழந்தைக்கு ஒரு முகமும், அதேசமயம் தலையில் மற்றொரு தலை ஒட்டியது போல சற்றே பெரியதாகவும் இருந்தது. அக்குழந்தையின் வலது பக்கவாட்டு மார்பில் மற்றொரு உடல் இணைந்திருந்தது. குழந்தை பிறந்த ஓரிரு நிமிடங்களில் இறந்துவிட்டது. அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவு தலைமை டாக்டர் தில்ஷாத் தலைமையில் டாக்டர்கள் லலிதா, ஹெலன் சிகிச்சை அளித்தனர். தலைமை டாக்டர் கூறியதாவது: லட்சத்தில் ஒருவருக்கு இது போன்ற குழந்தைகள் பிறப்பதுண்டு.
கருத்தரித்து 13 நாட்களுக்குப் பின் கரு பிரிந்தால் இது போன்று நிகழ்வதுண்டு. அதற்கு முன் பிரிந்தால் அது முழுமையான இரட்டைக் குழந்தையாக இருக்கும். பிரசவத்தின் போது ரத்தசோகையாக இருந்ததால், தீவிர சிகிச்சை அளித்து சிசேரியன் மூலம் குழந்தை பிறந்தது. தற்போது தாய் நலமுடன் உள்ளார். இவ்வாறு டாக்டர் கூறினார்.
Thanks To..........Farook Ashaar

பயணத்தை நிறைவு செய்தது பிளாஸ்டிக் பாட்டில் கப்பல்!

பிளாஸ்டிக் பொருள்களை மறுசுழற்சி செய்து உபயோகிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, முழுவதும் பிளாஸ்டிக் பாட்டில்களால் தயாரிக்கப்பட்ட கப்பல் தனது பயணத்தை நிறைவு செய்து சிட்னி வந்தடைந்தது. "பிளாஸ்டிகி' என்ற பெயருடைய இந்தக் கப்பல் 12,500 பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 18 மீட்டர் நீளம் கொண்டது. நாளுக்கு நாள் பிளாஸ்டிக் பொருள்களின் உபயோகம் அதிகரித்து வருகிறது. இதனால் பிளாஸ்டிக் கழிவுகளும் அதிகரித்து வருகின்றன. நிலம், நீர், காற்று என அனைத்து வாழ்வாதாரங்களையும் பாதிக்கக்கூடிய இந்த பிளாஸ்டிக்கை மறுசுழற்சி முறையில் மீண்டும் உபயோகமான பொருள்களாக மாற்றுவதன் மூலமே பிளாஸ்டிக் பொருள்கள் அதிகரிப்பைத் தடுக்க முடியும். மக்களிடையே இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கடந்த மார்ச் 20-ம் தேதி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கியது பிளாஸ்டிகி.கப்பலில் 6 மாலுமிகள் பயணித்தனர். 130 நாள்கள் பயணத்தின் முடிவில் 14,800 கி.மீ. தூரத்தைக் கடந்து இந்தக் கப்பல் திங்கள்கிழமை சிட்னி துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது. இங்குள்ள கடற்படை அருங்காட்சியகத்தில் அடுத்த ஒரு மாத காலத்துக்கு பிளாஸ்டிகி காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 60 ஆயிரம் டன் பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. பயன்பாட்டுக்குப் பிறகு தூக்கி எறியப்படும் இந்தப் பிளாஸ்டிக்குகள் மக்குவதற்கு பல நூற்றாண்டுகள் ஆகும். நிலப்பகுதி முழுவதும் பிளாஸ்டிக்கால் மூடப்படுவதால், நிலத்தடி நீர் மட்டம் குறைவு, வெள்ளப் பெருக்கு, விளைநிலங்கள் பாதிக்கப்படுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.இதே போன்று, நீர் நிலைகளும் பாதிக்கப்படுகின்றன. ஒவ்வொரு சதுர கி.மீ. கடல் பரப்பிலும் 13,000-க்கும் அதிகமான பிளாஸ்டிக் மாசுகள் கலந்திருப்பதாக ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அழகிய கிரேக்கம் - படங்கள்

மேலும் அழகிய கிரேக்கத்தைக் காண Click Here