Saturday, July 10, 2010

சூரிய சக்தியில் வானமே வசப்பட்டது.

புதிய சாதனை



சுவிட்சர்லாந்தில் சூரிய சக்தியில் இயங்கும் விமானம் ஒன்று சரித்திரத்தில் இல்லாத வகையில் இரவு நேரத்தில் பறந்து சாதனை படைத்துள்ளது.
பரிசோதனைகளுக்காக உருவாக்கப்பட்டிருந்த இந்த விமானம் சூரிய சக்தியை மட்டும் பயன்படுத்தி இடைவிடாது ஒரு நாள் முழுக்கப் பறந்துள்ளது.
ராட்சத பலூனில் பறந்து உலகை வலம் வந்த முதல் நபர் என்ற பெருமைக்குரிய சுவிட்சர்லாந்தின் சாகச ஆர்வலர் பெர்த்ராண்ட் பிக்கார்த்தின் சிந்தனையில் உருவானது சோலார் இம்பல்ஸ் என்ற இந்த விமானம்.
ஒரு ஆள் மட்டும் அமர்ந்து செல்லக்கூடிய ஒரு இலகுரக விமானம் இது.
கார்பன் ஃபைபர் எனப்படும் கரி இழைகளால் ஆன இந்த விமானத்தின் எடை என்னவோ ஒரு காருடைய எடைதான் என்றாலும், இதனுடைய இறக்கைகள் ஒரு ஜம்போ ஜெட் விமானத்தின் அளவுக்கு அறுபது மீட்டர்கள் நீளமுடையவை.
இந்த இறக்கைகளின் மேல் பக்கம் முழுக்க சூரிய சக்தியில் இருந்து மின்சாரத்தை உருவாக்குகின்ற சோலார் செல்கள் பன்னிரண்டாயிரம் அளவுக்கு பொருத்தப்பட்டிருந்தன.
இந்த விமானத்தில் ஒரேயொருவர் மட்டுமே செல்ல முடியும், இந்த விமானம் செல்லக்கூடிய அதிகபட்ச வேகம் மணிக்கு 70 கிலோமீட்டர்கள்தான், இந்த விமான இயந்திரத்தின் வலு ஒரு சிறிய ஸ்கூட்டருக்கு உரியதுதான் என்பதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, வர்த்தக ரீதியிலான விமானப் போக்குவரத்தில் இதனனைக் கொண்டு உடனடியாக பெரிய மாற்றம் ஏதும் வந்துவிடப் போவதில்லை எனத் தெரிகிறது.
ஆனால் சுற்றுச்சூழலுக்கு பங்கம் விளைவிக்காத சக்திகளைப் பயன்படுத்தி எந்த அளவுக்கு சாதிக்க முடியும் என்பதற்கு தன்னுடைய இந்த விமானம் ஒரு எட்டுத்துக்காட்டு என்று விமானத்தை உருவாக்கிய பெர்த்ராண்ட் பிக்கார்ட் பெருமிதம் வெளியிட்டுள்ளார்.
விமானங்கள் இயங்குசக்தியைப் பெறுவதில் எதிர்காலத்தில் மாபெரும் திருப்புமுனையை இந்த தொழில்நுட்பம் ஏற்படுத்தும், ஆகவே விமானங்களின் சரித்திரத்திலே ஒரு புதிய அத்தியாயத்தின் துவக்கம் இது என்று கூறப்படுகிறது. 
Thanks To.....BBC

டென்னிஸ் உலக சாதனை

விம்பிள்டனில் உலக சாதனை
விம்பிள்டனில் உலக சாதனை
உலக டென்னிஸ் வரலாற்றில் மிக நீண்ட நேரம் விளையாடப்பட்ட போட்டி வியாழன் மாலை விம்பிள்டனில் முடிவடைந்தது.
மூன்று நாட்கள் இடம்பெற்ற இந்தப் போட்டியில் அமெரிக்காவின் ஜான் இஸ்நெர் பிரான்ஸின் நிக்கோலா மாஹூவை வென்றார்.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் கடந்த திங்கட்கிழமை தொடங்கிய நிலையில் முதல் சுற்றுப் போட்டி ஒன்றிலேயே இந்த இருவருக்கும் இடையேயான இந்த போட்டி இடம்பெற்றது.
இந்தப் போட்டி 11 மணி நேரத்துக்கும் அதிகமாக விளையாடப்பட்டது. போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை முடிவு செய்யும் ஐந்தாவது செட் நீண்டு கொண்டே போனதால் போட்டி மூன்று நாட்களுக்கு இடம்பெற்றது.
டென்னிஸ் விளையாட்டில் சாதனை படைத்துள்ள இந்தப் போட்டியில் இறுதியாக ஜான் ஐஸ்னர் 70-68 என்கிற கணக்கில் இறுதி செட்டை வென்று போட்டியின் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மிக நீண்ட நேரம் விளையாடப்பட்ட போட்டி என்பது மட்டுமல்லாமல், ஒரு போட்டியில் மிக அதிகமாக விளையாடப்பட்ட ஆட்டம் மற்றும், மிகக் கூடுதலான அளவில் ஏஸ்கள் சர்வ் செய்யப்பட்ட போட்டி என்ற பெருமையையும் இது பெற்றது.
பத்து மணி நேரம் விளையாடிய பிறகும் இந்தப் போட்டி முடிவுக்கு வராத நிலை ஏற்பட்டது. இந்த இருவருக்கும் இடையேயான போட்டியின் இறுதி செட்டில் 59-59 என்கிற புள்ளிகள் பெற்றிருந்த நிலையில் நேற்று புதன்கிழமை போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தினால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
விம்பிள்டன் மைதானம்
விம்பிள்டன் மைதானம்
இதற்கு முன்னர் நீண்ட நேரம் விளையாடப்பட்ட ஒரு டென்னிஸ் போட்டியானது 2004 ஆம் ஆண்டின் பிரெஞ்சு ஓபன் போட்டிகளின் போது ஃபார்ரைஸ் சண்டோரோ மற்றும் அர்ணௌட் கிளமெண்டுக்கு இடையே 6 மணி 35 நிமிடங்கள் இடம் பெற்ற ஆட்டமாகும். விம்பிள்டன் போட்டிகளை பொறுத்த வரை 1969 ஆம் ஆண்டு பான்ச்சோ கன்சால்வெஸ் மற்றும் சார்லி பஸரேல் ஆகியோரிடையே இடம் பெற்ற போட்டியே நீண்ட நேரம் ஆடப்பட்ட போட்டியாக இருந்தது.
Thanks To....BBC

கண்ணிவெடிகள் கண்டறிய புதிய தொழில்நுட்பம்

நிலக்கண்ணிவெடி
நிலக்கண்ணிவெடி
நிலக்கண்ணிவெடிகளை அகற்றுவதில் தற்போது கண்டறியப்பட்டுள்ள புதிய தொழிநுட்பத்தை பயன்படுத்தினால் ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களை பாதுகாக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஹோலோகிரபிக் ராடார் முறை மூலம் நிலக்கண்ணிவெடிகளை மிக துல்லியமாக கண்டறிந்துவிடமுடியும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
ஐ.நாவின் புள்ளிவிபரங்களின் படி உலகில் எண்பதுக்கும் அதிகமான நாடுகளில் புதைக்கப்பட்டுள்ள சுமார் 100 மில்லியன் வரையிலான நிலக்கண்ணிவெடிகளை கண்டறிந்து அவற்றை அகற்றும் முயற்சிகளில் மெட்டல் டிடெக்டர் எனப்படும் உலோகங்களை கண்டறியும் கருவிகளே பயன்படுத்தப்படுகின்றன.
நிலக்கண்ணிவெடிகளில் சிக்கி ஒவ்வொரு மாதமும் சுமார் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் ஒன்றில் கொல்லப்படுகின்றனர் அல்லது உடல் அவயங்களை இழந்து ஊனமடைகின்றனர் எனவும் கூறப்படுகின்றது.
உலோகங்களை கண்டறியும் கருவிகள், பொதுவாக எந்தவொரு உலோகத் துண்டுகளையும் கண்டறியக்கூடியவை என்பதால், பாதிப்புகளை ஏற்படுத்தாத உலோகத்துண்டுகளை கண்டறிவதிலேயே சுமார் 90 வீதமான வளங்களையும் நேரத்தையும் பொதுவாக அவை வீணடித்து விடுகின்றன.
ஆனால் தற்போது லேசர் கதிர்களைப் பாய்த்து பொருளொன்றின் முப்பரிமான பிம்பத்தை கண்டிறியும் ஹோலோகிரபிக் ராடார் என்ற முறையை பயன்படுத்தி பிளாஸ்டிக் உள்ளிட்ட எந்தவகையான பொருட்களால் ஆன நிலக்கண்ணிவெடிகளையும் மிக இலகுவாக கண்டிறிந்துவிடமுடியும் என சர்வதேச விஞ்ஞானிகள் குழுவொன்று தெரிவித்துள்ளது.
வழமையான ராடார் கருவிகள் நிலத்தினுள்ளே கதிரை அனுப்பி அது தரும் சமிக்ஞைகளை பெறுகின்றன.
ஆனால் பத்தாயிரம் யூரோக்கள் பெறுமதியான ராஸ்கான் ரக ராடார் கருவிகள் கதிர்களை தொடர்ச்சியாக அனுப்புவதன் மூலம் நிலத்தில் புதைந்துள்ள பொருட்களின் தெளிவான நிழற்படத்தை நாம் காண வகை செய்கின்றன.
பேராசிரியர் கொலின் வின்ட்ஸர், தனது ஒய்வு நேரத்தில் சுமார் 12 வருடகாலத்தை இந்த கருவியை கண்டுபிடிக்கும் முயற்சியில் செலவிட்டு வந்துள்ளார்.
இந்தக் கருவியுடன் ஏனைய தொழிநுட்பத்தையும் சேர்த்துக்கொள்வதன் மூலம் கண்ணிவெடி அகற்றும் பணியில் மனிதர் ஈடுபட தேவையில்லாத தானியங்கி முறையையும் கைக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறுகிறார்.
Thanks To..BBC

வறட்சியால் அழிந்த நகரம்

மழை பெய்யாததால் ஒரு நகரமே அழிந்து விடும் என்பதற்கு, கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் நகரம் ஓர் உதாரணமாகும். கோயில் நகரமான அங்கோர் வாட் நகரின் அழிவுக்கு பல்வேறு அரசியல், பொருளாதார, சமூக காரணங்கள் கூறப்படுகின்றன.
கடந்த 600 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கடுமையான வறட்சியின் காரணமாகவே, அங்கோர் வாட் நகரம் அழிந்தது என சமீபத்தில் நடந்த ஆய்வுகளின் மூலமாக தெரிய வந்துள்ளது.
மரத்தில் காணப்படும் மர வளையங்கள், அந்த மரம் உள்ள இடத்தில் பெய்யும் மழையின் அளவைக் காட்டுகின்றன. அங்கோர் வாட் நகரில் உள்ள மரங்களின், மர வளையங்களை வைத்து நடத்திய ஆய்வில், மழைப்பொழிவு இல்லாததே, அங்கோர் வாட் நகரின் அழிவுக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.
Thanks To....Dhinamalar

ஒரே நாளில் 75 தீர்ப்பு:கின்னஸ் சாதனை

புதுடில்லி:சுப்ரீம் கோர்ட்டில் நேற்று ஒரே நாளில், 75 தீர்ப்புகளை வழங்கி நீதிபதி சுதந்திரகுமார், உலக சாதனை படைத்துள்ளார்.மும்பை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்து சுப்ரீம் கோர்ட் நீதிபதியானவர் சுதந்திரகுமார். இவர், மும்பை ஐகோர்ட்டில் பணியாற்றிய போது, ஒரே நாளில் 80க்கும் அதிகமான தீர்ப்புகளை கூறி ஏற்கனவே சாதனை படைத்துள்ளார். சுப்ரீம் கோர்ட் நீதிபதியான பின்பும் இந்த சாதனையை அவர் தொடர்ந்துள்ளார்.
நேற்று இவரிடம் 77 வழக்குகள் வந்தன. இதில், 75 வழக்குகளில் தீர்ப்பு கூறி, உலக சாதனை படைத்துள்ளார். விரைவில் இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற உள்ளது. மீதமுள்ள இரண்டு வழக்குகளில் நீதிபதி பி.எஸ்.சவுகான் தீர்ப்பு கூறினார்.உலகில் வேறெந்த சுப்ரீம் கோர்ட்டும் ஒரே நாளில் 75 தீர்ப்புகளை வழங்கியதில்லை.சமீபத்தில் ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி அர்ஜித் பசாயத், தான் ஓய்வு பெறும் கடைசி பணி நாளில், 25 தீர்ப்புகளை கூறி சாதனை செய்தார். தற்போது இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
Thanks To.......Dhinamalar