Sunday, July 25, 2010

இந்தியா புரட்சி - 35 டொலரில் ஒரு கணினி.

  அனைவருக்கும் கணினி எனும் தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு உலகின் மிகவும் மலிவான கணினியைத் தாம் தயாரித்து வருவதாக இந்திய ஊடகத் தகவல் நிலையம் தெரிவிக்கின்றது.
இதன் விலை வெறும் 35 டொலர் மட்டுமே எனவும் மாணவர் நலன் கருதி இவ்விலை 20 டொலர் முதல் 10 டொலர் வரை குறையலாமெனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இக்கணினியானது தொடு திரையுடன் கூடியதாகக் காணப்படுமெனவும் இதனுள் பல மென்பொருட்கள் மற்றும் வசதிகள் உள்ளடங்கியிருக்குமெனவும் வெப் பிரவுசர், பிடிஎப் ரீடர், மீடியா பிளேயர், வீடியோ கொன்பிரன்ஸ் மற்றும் புகைப் படமெடுக்கும் வசதி என்பன இதில் முக்கியமாக உள்ளடக்கப்பட்டுள்ளன எனவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
இக்கணினி 2011ஆம் ஆண்டளவில் சந்தைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் முக்கிய நோக்கம் இந்திய கல்லூரி மாணவருக்கிடையில் பாடவிதான ரீதியில் ஒரு தொடர்பை ஏற்படுத்துவதாகும்.
2,127 டொலர் நாநோ கார், 2000 டொலர் திறந்த இதய சத்திர சிகிச்சை மற்றும் 16 டொலர் நீர் சுத்தப்படுத்தும் கருவி போன்ற மலிவான இந்திய உற்பத்தி வரிசையில் இதுவும் இந்திய வர்த்தகத்தில் புரட்சியை ஏற்படுத்துமென அவதானிகள் கருத்து தெரிவிகின்றனர்.
ச.கவிந்தன்

விஷப் பாம்புகள் குறித்த ஐ நா வின் இணைய தளம் அறிமுகம்



உலகளவில் பாம்புக் கடியால் பலர் இறந்து வரும் நிலையில், அப்படியான இறப்புகளளை குறைக்கும் நோக்கிலும், பாம்புக் கடியின் விஷத்தால் கை கால்கள் பாதிக்கப்பட்டு செயற்பட முடியாத நிலையில்
இருப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கிலும் உலக சுகாதார நிறுவனம் ஒரு இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் சுமார் 25 லட்சம் பேர் பாம்புக் கடிக்கு ஆளாகிறார்கள். அவற்றில் சுமார் 2,500 பேர் இறக்கவும் நேரிடுகிறது என்று உலக சுகாதார நிறுவனம் கணக்கிட்டுள்ளது.
கடுமையான விஷம் கொண்ட பல பாம்புகள் மேலோட்டமாக பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருக்கும்.
ஆனால் எல்லா பாம்புகளுக்கும் ஒரே மாதிரியான விஷமுறிவு மருந்துகள் செயற்படாது.
இந்த மாதிரியான சிக்கலான நேரங்களில், பாம்புக் கடிகள் தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த இணையதளம் உதவியாக இருக்கும்.
பல நேரங்களில் இந்த இணையதளம் உயிர்காக்கவும் உதவும்.
இந்த இணையதளத்தில் உலகிலுள்ள அனைத்து விஷப் பாம்புகள் குறித்த தகவல்களும் புகைப்படங்களுடன் இடம்பெற்றுள்ளது.
சரியான விஷமுறிவு மருந்து மரணத்தை தடுக்கும்
எந்தப் பாம்புகள் எந்த நாட்டில் இருக்கின்றன, அவை கடித்தால் என்ன வகையான விஷமுறிவு மருந்துகள் தேவைப்படும் என்பது தொடர்பான அறிவுரைகளும் அந்த இணையதளத்தில் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன.
எந்தப் பாம்பையும் பார்த்தவுடன் அது விஷமுடையதா என்பதை அறிவது கடினம்
பாம்புக்கடி ஏற்பட்டவுடன் உடனடியாக சரியான விஷமுறிவு மருந்துகளை எடுத்துக் கொண்டால், அப்படியான கடிகளினால் ஏற்படும் மரணங்கள் மற்றும் கடுமையான உடல்நலக் பாதிப்புகளை பெருமளவில் குறைக்க முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
பொதுமக்கள் மற்றும் மருத்துவர்களுக்கு இந்த இணையதளம் உதவியாக இருக்கும் என்பதற்கு அப்பாற்பட்டு அரசுகளுக்கும் இது உதவியாக இருக்கும் என்றும் அந்த பன்னாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த இணையதளத்திலுள்ள தகவல்களின் அடிப்படையில், தமது நாடுகளின் எந்த வகையான விஷ பாம்புகள் இருக்கின்றன, அவற்றுக்கு என்ன வகையான விஷமுறிவு வகைகள் தேவை என்பதை அறிந்து அந்நாட்டு அரசுகள் அந்த மருந்துகளை போதிய அளவில் சேமித்து வைத்துக் கொள்ள முடியும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகின் பல பாகங்களில் பாம்புக் கடியால் ஏற்படும் பிரச்சினைகள் சுகாதாரத்துறையால் புறக்கணிப்பட்ட ஒன்றாகவே இருக்கின்றது என்றும் உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது.
பல நாடுகளில் தரமற்ற மற்றும் சரியான நோய் எதிர்ப்பு மருந்துகள் இல்லாது இருக்கும் நிலையில், சுகாதாரப் பணியாளர்கள் அதன் செயற்திறனை நம்பாத நிலையும் உள்ளது எனவும் அந்த அமைப்பு கூறுகிறது.
புள்ளி விபரங்கள் இல்லை
பல நாடுகளில் பாம்புக்கடிகள் குறித்து சரியான புள்ளி விபரங்கள் இல்லாத நிலையும் காணப்படுகிறது.
பல்வகை விஷப் பாம்புகள்
இதன் காரணமாக தேவையான அளவுக்கு விஷமுறிவு மருந்துகளை அந்தந்த நாடுகள் திட்டமிட்டு வாங்கமுடியாத நிலை ஏற்படுகிறது எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் பல சந்தர்ப்பங்களில் விஷமுறிவு மருந்துகளை தயாரிப்பவர்கள் அதன் விலையை ஏற்றுவதற்கும் வழிவகுக்கிறது. சில நேரங்களில் மருந்து தயாரிப்பையே அந்த நிறுவனங்கள் நிறுத்தியும் விடுகின்றன.
இந்தப் பிரச்சினைகளால் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியப் பகுதிகளுக்கான விஷமுறிவு மருந்துகளின் விநியோகத்தையே பாதிக்கும் நிலையை ஏற்படுத்துகிறது என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
பாம்புக் கடியால் பெரிதும் ஆளாவது கிராமப்புறங்களில் இருக்கும் ஏழை விவசாயிகளும் பெண்களும் சிறார்களுமே என்றும் அந்த நிறுவனம் கூறுகிறது.
இப்படியான மக்களுக்கு இணைய வசதியோ, அல்லது கௌரவமான மருத்துவ வசதிகளோ, அல்லது அவர்களை காப்பாற்றும் விஷமுறிவு மருந்துகளோ கிடைக்காத நிலையுமே உள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமான உலக சுகாதார நிறுவனம் கவலை வெளியிட்டுள்ளது.
1. ஐ நா வின் இணைய தளம்
http://apps.who.int/bloodproducts/snakeantivenoms/database/

சிகரெட் புகைத்தால் அறிவுத் திறனும் குறையும் :இஸ்ரேல் ஆய்வில் தகவல் _

சிகரெட் புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. சிகரெட் பிடிப்பதால் உடல் நலம் மட்டுமின்றி அறிவுத்திறனும் குறையும் என புதிய ஆய்வு இப்போது தெரிவிக்கிறது.
இந்த ஆய்வு இஸ்ரேலில் உள்ள டெல் ஹஸ்கோமரில் உள்ள ஷெபா மருத்துவ மையத்தில் டாக்டர் மார்க் வெய்கர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுக்கு இஸ்ரேல் இராணுவ வீரர்கள் 20, 211 பேர் பயன்படுத்தப்பட்டனர்.
அவர்களில் சிகரெட் பிடித்தவர்களுக்கு மற்றவர்களைவிட 7.5 புள்ளிகள் அறிவுத்திறன் குறைந்திருப்பது ஆய்வில் தெரிய வந்தது.
இதன் மூலமான பாதிப்பு பெரிய அளவில் இல்லாவிட்டாலும், ஆய்வுக்குட்பட்ட, அறிவுத் திறன் குறைந்த இராணுவத்தினர் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர். 

Friday, July 23, 2010

விமான 'கறுப்பு பெட்டி'யின் தந்தை மரணம்

  விமான விபத்துக்களின் போது அதற்கான காரணத்தைக் கண்டறிய உதவும் கறுப்பு பெட்டியைக் கண்டுபிடித்தவரும் பிரபல அவுஸ்திரேலிய விஞ்ஞானியுமான டேவிட் வொரென் தனது 85ஆவது வயதில் நேற்று முன்தினம் காலமானார்.
வொரென் அவுஸ்திரேலியாவின் வடகிழக்கில் உள்ள பின்தங்கிய கிராமமொன்றில் 1925ஆம் ஆண்டு பிறந்தார். அவரது தந்தை 1934ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற விபத்தொன்றில் உயிரிழந்தார்.
அந்நாட்டின் இராணுவ அறிவியல் தொழில்நுட்ப அமைப்பில் 1952 முதல் 1983 வரை விஞ்ஞானியாக இவர் செயற்பட்டார்
விமான கறுப்பு பெட்டி 1956ஆம் ஆண்டு கண்டுபிடிக்கபட்டது. இவர் 1953ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகின் முதலாவது 'ஜெட்' விமான விபத்துக்கான காரணத்தைக் கண்டறியும் பொருட்டு நியமிக்கப்பட்டிருந்த குழுவில் அங்கம் வகித்தார்.
விமானத்தின் முன்பகுதியில் அமர்ந்திருக்கும் விமானிகளின் உரையாடலை ஒலிப்பதிவு செய்வதினூடாக மட்டுமே விபத்துக்கான காரணத்தை கண்டறிய முடியுமென உணர்ந்த அவர் இதனைக் கண்டுபிடித்தார்.
1960ஆம் ஆண்டுக்கு பின்னரே இதன் முக்கியத்துவம் உணரப்பட்டு, அனைத்து விமானங்களுக்கும் 'கறுப்புப் பெட்டி' பொருத்தப்பட்டது.
அவுஸ்திரேலிய அரசாங்கம் 2002 ஆம் ஆண்டு இவருக்கு விருது வழங்கி கெளரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Thanks To......Virakesari.

'அடோப் பிளாஷ்' அறிமுகப்படுத்தும் புதிய முப்பரிமாண புரட்சி.

  'அடோப் பிளாஷ்', இணையத் தள பாவனையாளர்கள் பரவலாகப் பயன்படுத்திவரும் ஒரு மென்பொருளாகும். உலகளாவிய ரீதியில் 20 கோடிக்கும் மேற்பட்டவர்கள் இதனை பாவித்து வருகின்றனர்.
'அடோப்' நிறுவனத்தின் அனைத்து மென் பொருட்களும் வெளியீடுகளும் வரைக்கலையில் (graphics) தனித்துவம் பெற்றவை. இந்த வரிசையில் அடுத்த வெளியீடாக முப்பரிமாண 'அடோப் பிளாஷ்' வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கென சிறப்பு முப்பரிமாண (3D) கண்ணாடியையும் அது வெளியிடவுள்ளது. இவ்வெளியீடானது 'அடோப்' தனது அடுத்தக்கட்ட தொழில்நுட்பப் புரட்சிக்கு ஆயத்தமாக எடுத்துக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத்தொழில்நுட்பமானது இணையத்தளங்களை வடிவமைக்கவுள்ள முப்பரிமாண தோற்றத்தில் பிரமாண்டமாக வடிவமைக்க உதவும். பாவனையாளர்கள் இதனைப் பார்வையிடும் போது, எழுத்து வரைகலை, காணொளிகள் மற்றும் கணினி விளையாட்டுக்கள் போன்றவற்றில் முப்பரிமாண அனுபவங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இது தொடர்பான அந்நிறுவத்தின் சிறப்பு மாநாடு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி நடைபெறவுள்ளது.
Thanks To.....Virakesari.