Sunday, April 25, 2010

நவீன செல்போன்

எங்கும் செல்போன்! எதற்கும் செல்போன்!!

சகல வசதிகளும் இனி செல்போனிலேயே என்று சொல்லும் அளவுக்கு நவீன செல்போன்கள் தயாரிக்கப்பட்டு விட்டன.

காரில் போய் கொண்டே போன் பேச முடியுமா? நடந்து கொண்டே போன் பேச முடியுமா? இது செல்போன் வந்த பொழுது ஆச்சரியமாக புருவங்களை உயர்த்தி நாம் அதிசயித்த காலம்.

அதெல்லாம் இப்பொழுது கடந்து எங்கு பார்த்தாலும் செல்போன் ரீங்காரம், சினிமா பாடல்களின் இசையில் செல்போன் சிணுங்கல்கள்.

காலுக்கு செருப்பு இல்லாமல் கூட வெளியில் சென்றுவிடுவார்கள் போலிருக்கிறது ஆனால் செல்போன் இல்லாமல் யாரும் செல்வதே இல்லை.

"ஊருக்கு போனதும் மறக்காமல் லட்டர் போடுங்கள்'' இது விடைபெறும் போது வழக்கமாக பயன்படுத்தும் சொல்.

ஆனால் இப்பொதெல்லாம் "செல்லில் காண்டாக்ட் பண்ணுங்கள், எஸ்.எம்.எஸ் அனுப்புங்கள்'' என்று இப்படி முன்னேறிவிட்டது.

இப்பொழுது அதையும் தாண்டி செல்போனிலேயே வியாபாரம், கிரிக்கெட் ஸ்கோர், பங்கு சந்தை நிலவரம், தேர்தல் நிலவரம், சந்தை நிலவரம், வங்கி கணக்கு இன்னும் என்னென்னவோ வசதிகள் எல்லாம் வந்துவிட்டன. ஜப்பானில் தற்பொழுது அதிநவீன வசதிகளுடன் செல்போன்கள் வந்துவிட்டன. வந்து கொண்டிருக்கின்றன.

நீங்கள் எதற்காகவும் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒரு நம்பரையும் பட்டனையும் தட்டினால் போதும், செய்திகள், விவரங்கள், உங்களுக்குத் தேவையான பொருட்கள் எல்லாம் சிறிது நேரத்திலேயே உங்கள் காலடியில் தரும். நவீன வசதிகளுடன் வந்திருக்கும் செல்போன்களை பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம்.

ஜப்பானில் ஆண்டிற்கு 4 கோடியே 50 லட்சம் பேர் செல்போன் வாங்குகிறார்கள். தற்பொழுது அனேக சிறப்பம்சங்களுடன் செல்போன்கள் வந்துவிட்டன. சமீபத்தில்கூட ஜப்பானின் சில நகரங்களில் அதிகபட்சமாக 7 சேனல்கள் வரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தங்களது செல்போன் உதவியுடன் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்பொழுது செல்போனின் மூலம் online வசதியும் நமக்கு கிடைக்கிறது. அதாவது கிரெடிட் கார்டு, பணம் போன்றவை எடுத்துச் செல்லவேண்டிய அவசியம் நமக்கு தேவை இல்லை. அதற்காக பர்சையும் சுமக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு உதவ ஜப்பானில் நவீன தொழில்நுட்பம் வாய்ந்த செல்போன்கள் வந்துக்கொண்டிருக்கின்றன.

உதாரணமாக ஒரு கச்சேரியின் சுவரொட்டி அல்லது விளம்பரப் பலகையை பார்த்தால் போதும். அதில் உள்ள பார் கோடு எண்ணை செல்போனில் தட்டிவிட்டால் போதும். உடனே உங்களை அந்தக் கச்சேரி சம்பந்தமான இணைய தளத்திற்கு அழைத்துச் சென்று எல்லா விபரங்களையும் கொடுத்துவிடும். எவ்வளவு இருக்கைகள் எந்தெந்த வகுப்பில் இருக்கிறது. கச்சேரி எத்தனை மணிக்கு? டிக்கெட் விலை எவ்வளவு? யார் யார் பங்கு கொள்கிறார்கள் என்ற விபரங்களையும் கொடுத்து விடும். மேலும் நீங்கள் அதற்கு டிக்கெட்டும் புக் செய்து விடலாம். இதெல்லாம் உங்கள் கைக்கடக்கமான செல்போனிலிருந்தே.


நீங்கள் காரில் சென்று கொண்டு இருக்கும் போது ரோடு ஓரத்தில் இருக்கும் ஒரு விளம்பரம் உங்கள் கண்ணில் படுகிறது. உடனே காரில் இருந்த படியே `இந்தப் பொருளை நான் வாங்க வேண்டும்' என்று விரும்பலாம். அங்கிருந்தே அதன் பார் கோடு எண்ணை மொபைலில் கொடுத்து அதை வாங்க முடியும்'' என்கிறார் ஜப்பானின் டோக்கியோவிலுள்ள ஹிட்டோட்சுபாஷி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜாப்ரே பங்க். சென்ற வாரம் செல்போனிலேயே குதிரைப் பந்தயத்திற்காக பணம் கட்டும் வசதியையும் ஒரு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

`நான் என்னுடைய அலுவலகத்தில் உள்ள நாற்காலியை விற்க எண்ணினால் உடனே அதை செல்போன் கேமராவிலேயே க்ளிக் செய்து என்னுடைய செல்போன் நம்பருடன் விலை விபரங்களை சேர்த்து?விளம்பரத்திற்கு கொடுத்தால் போதும் உடனே அதை விற்க முடியும்' என்கிறார் ஜப்பானின் நொமுரா ஆராய்ச்சி பல்கலைக் கழகத்தின் ஷூனிச்சி கிட்டா.

செல்போன் மூலம் பங்கு சந்தை மற்றும் ஏலங்களில் கலந்து கொள்ள முடியும். ஏலம் மற்றும் பங்கு விற்ற கமிஷன் செல்போனிலேயே வந்துவிடும். ஜப்பானின் ஒரு பிரபல செல்போன் கம்பெனியின் மூத்த துணைத் தலைவர் டேக்கேஷி நாட்சுனோ கூறுகையில், "இனி பணம், கிரெடிக் கார்டு, அடையாள அட்டை முதலானவைகளை சுமக்க வேண்டிய கட்டாயம் இருக்காது. எல்லாம் ஒரே ஒரு செல்போன் மட்டுமே போதும்'', என்கிறார்.

தற்பொழுது ஜப்பானில் அதிகமானோர் செல்போனையே தொலைக்காட்சி ரிமோட் கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள். 50 லட்சம் ஜப்பானியர்கள் தங்களது செல்போனிலேயே தொலைக்காட்சி சேனல்களூக்கான சந்தாக்களை பெற்று விரும்பிய சேனல்களை ரசிக்கிறார்கள். மேலும் இந்த செல்போனையே தொலைக்காட்சி, டி.வி.டி பிளேயர்களை இயக்கும் `ரிமோட் கண்ட்ரோல்' ஆகவும் பயன்படுத்துகிறார்கள்.
நீங்கள் ஒரு மீட்டிங்கில் இருக்கும்போது போரடித்தால் உடனே உங்கள் செல்போனின் மூலம் எந்தெந்தச் சேனலில் எந்தெந்த நிகழ்ச்சிகள் என்று பார்த்து தெரிந்து கொள்ளலாம்' என்கிறார் டேக்கேஷி நாட்சுனோ.
       மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் பெரிய நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் உள்ளே செல்வதற்கு அடையாள அட்டையோ அல்லது சாவியோ பயன்படுத்த தேவையில்லை. செல்போன் மூலமாகவே உள்ளே நுழைவதற்கு முடியும். மேலும் நீங்கள் வெளியில் இருக்கின்றீர்கள். உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் உங்கள் செல்போனில் தகவல் வந்துவிடும். நீங்கள் உடனே உங்கள் செல்போன் மூலமாகவே வீட்டின் கதவைத் திறந்துவிட முடியும். குழந்தைகள் பாதுகாப்பாக வீட்டை அடைந்த தகவலும் செல்போனில் வந்துவிடும்.


மின்சார கட்டணம், டெலிபோன் கட்டணம், ரெயில் பாஸ், பஸ் பாஸ், வங்கியில் பணம் எடுக்க வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து நேரத்தை விரயமாக்கத்? தேவையில்லை.? செல்போனை எடுக்க வேண்டியது. அதற்குண்டான விபர அட்டவணைக்கோ அல்லது சம்பந்தப்பட்ட இணைய தளத்திற்கோ சென்று உங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளலாம். ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு பல மைல் தூரத்தை பல மணி நேரம் செலவழித்து சென்று வரிசையில் நின்று கடைசியில் டிக்கெட் கொடுப்பவரை அணுகும் சமயத்தில் அப்பொழுதுதான் நீங்கள் செல்லவேண்டிய ரெயிலில் எல்லா டிக்கெட்களும் முன்பதிவு செய்யப்பட்டிருக்கும். இவ்வாறு ஏமாற வேண்டிய அவசியமில்லை. ரெயில்வே இணையதளத்திற்கு சென்று நீங்கள் செல்ல வேண்டிய ரெயிலைப் பிடித்து எந்த தேதியில் எத்தனை மணிக்கு எத்தனை இருக்கைகள் இருக்கின்றன என்றெல்லாம் பார்த்து வீட்டில் காபி குடித்துக்கொண்டே முன்பதிவு செய்துவிடலாம்.

திருக்குறளை புகழ்ந்த அவ்வையார் `அணுவைப் பிளந்து கடல் நீரை புகுத்தியிருக்கிறார்'' என்று சொன்னார். அவ்வளவு விஷயங்களை இரண்டே வரிகளில் வள்ளுவர் சொல்லியிருப்பதை இப்படி சொல்லியிருக்கிறார்.

இது செல்போனுக்கும் பொருந்தும் என்றே சொல்லலாம். அவ்வளவு விபரங்கள் மற்றும் வசதிகள் செல்போனில் வந்துவிட்டன.

உலகம் உங்கள் கையில். வணிக உலகம், பொழுதுபோக்கு உலகம், அரசியல் உலகம் இப்படி எல்லாவற்றையுமே உங்கள் விரல் நுனியில் கொண்டுவந்து சேர்த்துவிட்டது விஞ்ஞான உலகம்.

இனி `கையிலே காசு வாயிலே தோசை' என்பது கிடையாது. `கையிலே செல், உங்கள் வீட்டிலே உலகம்' தான்.
நன்றி, சகோதரர்-எம்ஜேஎம் இக்பால்(சித்தார்கோட்டை)