Wednesday, April 11, 2012


தொழில்நுட்பத்தில் அப்பிளின் ஐ போன்கள் முன்னணி வகிக்கின்றன. அதன் ஐ பொட், ஐ போன், ஐ பேட் என அனைத்தும் உயர் தொழிநுட்பம் கொண்டவை. இவற்றில் அப்பிளின் ஐ போன்களின் பாதுகாப்பு குறித்து தற்போது பரவலாகப் பேசப்படுகின்றது. 

அதாவது கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் விமானத்திற்குள் ஐ போன் 4 ஒன்று தீப்பற்றி எரிந்ததுடன் வெடித்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பிரேசில் நாட்டிலும் ஐ போன் 4 ஒன்று தீப்பற்றிக் கொண்டமையானது அதன் பாதுகாப்புக் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்துத் தெரிய வருவதாவது, 

பிரேசிலில் பெண் ஒருவர் தனது ஐ போன் 4 வினை சார்ஜ் செய்ய சார்ஜருடன் இணைத்து விட்டு அதன் அருகில் நித்திரை செய்துள்ளார். சற்று நேரத்தில் அவரது ஐபோனில் இருந்து புகை கிளம்பியுள்ளதுடன், சற்று நேரத்தில் வெடித்துள்ளது. இதன்படி இவ்வாரத்தில் பதிவான 2 ஆவது ஐ போன் தீப்பற்றிக் கொண்ட சம்பவமாக இது பதிவானது. 

இரண்டு தினங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவிலும் ஐ போன் தீ பிடித்து வெடித்த சம்பவமொன்று குறித்து செய்திகள் வெளியாகியிருந்தது. இதன்போது விமானம் தரையிறங்கும் வேளையில் பயணி ஒருவரின் ஐ போனிலிருந்து புகை வெளியாகியிருந்ததுடன் சற்று நேரத்தில் வெடித்து தீப்பற்றியுள்ளது. எனினும் விமானப் பணியாள் ஒருவரால் அத் தீ அணைக்கப்பட்டுள்ளது. 
இதனைத் தொடர்ந்து அந்த ஐ போன் பரிசோதனைகளுக்கென விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனினும் இவ் வெடிப்பினால் யாருக்கும் காயமெதுவும் ஏற்படவில்லை. 

இதற்கு முன்னரும் பிரான்ஸில் இளைஞன் ஒருவன் தனது காதலியின் ஐ போன் வெடித்தமையினால் அதன் திரையின் சிறிய கிளாஸ் துகள் தனது கண்ணைத் தாக்கியதாக 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குற்றஞ்சாட்டியிருந்தார். இவ் வெடிப்புக்கான காரணங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இச்சம்பவங்கள் தற்போது அப்பிளுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. 

இதேவேளை இம்மாத ஆரம்பத்தில் அப்பிள் தனது 1 ஆம் தலைமுறை ஐ பொட் நெனோ எம்.பி 3 பிளேயர்களை மீளப்பெற்றுக்கொள்வதாக அறிவித்திருந்தது. 
இவ் ஐ பொட் நெனோ எம்.பி 3 பிளேயர்கள் 2005 மற்றும் 2006 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் அப்பிள் உற்பத்தி செய்தவை. இவற்றின் பெட்டரிகளில் குறைபாடு காணப்படுவதாகவும் அவை அதிக வெப்பம் அடைவதாகவும் கூறியே மீளப்பெற்றுக்கொள்வதாகவும் அதற்காக மாற்றீடு ஒன்றை வழங்குவதாகவும் அறிவித்துள்ளது. எது எவ்வாறு இருப்பினும் ஐ போன் வெடிப்புத் தொடர்பில் அப்பிள் பதிலெதுவும் இதுவரை கூறவில்லை.