Tuesday, June 1, 2010
விண்வெளி ஹோட்டல்!
பார்ஸிலோனாவைச் சேர்ந்த The Galactic Suite Space Resort எனும் நிறுவனம் பல பில்லியன் டாலர் செலவில் விண்வெளியில் ஹோட்டல் நிறுவும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 2012-ல் இது திறக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மூன்று இரவுகள் அந்த ஹோட்டலில் தங்க சுமார் 3 மில்லியன் யூரோ (4.4 மில்லியன் டாலர்கள்) செலுத்த வேண்டியிருக்கும். விண்வெளி ஹோட்டலுக்கு செல்லும் முன் வாடிக்கையாளருக்கு ஒரு தீவில் எட்டு வாரங்களுக்கு பிரத்யேக பயிற்சி அளிக்கப்படும். இதுவும் அந்தத் தொகையிலேயே அடங்கும்.
விண்வெளியில் தங்கும் நாட்களில் வாடிக்கையாளர்கள் ஒரு நாளில் 15 முறை சூரிய உதயத்தைக் காண முடியும். உலகத்தை 80 நிமிடத்திற்கு ஒருமுறை சுற்றி வருவர். ஒரு பிரத்யேக உடை அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும். அதன் உதவி கொண்டு ஸ்பைடர் மேன் போல் சுவற்றில் ஒட்டிக் கொண்டு அறைகளை அவர்கள் வலம் வருவர்.
இந்நிறுவனத்தின் CEO சேவியர் க்ளாராமன்ட் (CEO Xavier Claramunt) எதிர்காலத்தில் விண்வெளி பயணம் ஒரு யதார்த்த நிகழ்வாக அமைந்து விடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இன்னம் 15 வருடங்களில் வார விடுமுறையை உங்கள் குழந்தைகள் செலவழிக்கக் கூடும் என்று கூறியுள்ளார்.
இதற்கான விண்கலம் பூமியிலிருந்து 450 கி.மீ. உயரத்தில் நிறுவப்படுமென்றும் அது மணிக்கு 30,000 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் என்றும், அதில் நான்கு பேரும் இரு விண்வெளி விமானிகளும் அடங்குமளவு வசதியிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பூமியிலிருந்து கலனை அடைய ஒன்றரை நாட்கள் ஆகும். பூமியிலிருந்து பயணிகளை ஏற்றிச் செல்லும் ராக்கெட் அந்த 3 நாட்களும் விண்கலனுடன் இணைக்கப்பட்டிருக்கும். பிறகு அந்த ராக்கெட்டில் பயணிகள் பூமி திரும்புவர். 200க்கும் அதிகமான மக்கள் இப் பயணத்திற்கு ஆர்வம் தெரிவித்துள்ளனர். அதில் 43 பேர் வரை முற்கூட்டியே இடப்பதிவு செய்துள்ளனர்.
பிஜியோ ஏரோ ஸ்பேஸ்
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஓட்டல் அதிபர் ராபர்ட் பிஜியோ நிறுவியது தான் பிஜியோ ஏரோ ஸ்பேஸ். சுமார் மைல் நீளம் கொண்ட விண்வெளி விமானம் பூமியில் இருந்து புறப்பட்டு நிலவுக்கு பறந்து சென்று விட்டு பூமிக்கு திரும்பும். இந்த திட்டத்துக்கான செலவு சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய்களைத் தாண்டும் என்று கணக்கிடப்பட்டது.
ஸ்பேஸ் ஐலேண்ட் குரூப்
இந்நிறுவனம் மோதிர வடிவ, சுற்றிக் கொண்டேயிருக்கும் விண்வெளி ஓட்டலை கட்ட இருக்கிறது. இது '2001 ஸ்பேஸ் ஓடிசி" திரைப்படத்தில் இடம்பெற்ற விண்வெளி ஓடத்தைப் போல் இருக்கும். நாசா விண்வெளி ஓடத்தின் 12 எரிபொருள் அறைகளைக் கொண்டு கட்டப்போவதாக அறிவித்துள்ளனர். இந்த விண் ஓடம் பூமியிலிருந்து 644 கி.மீ. தொலைவில் 2006-ம் ஆண்டு நிறுவப்பட இருக்கிறது. இந்த விண்வெளி ஹோட்டல் ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை சுற்றுவதால் 3_ல் ஒரு பங்கு அளவு கொண்ட புவிஈர்ப்பு விசையை ஏற்படுத்தும்.
ஹில்டன் ஹோட்டல்ஸ்:
இந்த நட்சத்திர ஓட்டல் விண் வெளியில் சுற்றுலாத்துறையின் திட்டங்களுக்கு பங்குதாரராக இருக்க விருப்பம் தெரிவித்துள்ளது. இருந்தாலும் இந்த திட்டங்கள் நிறைவேற்ற இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம் என தெரிவித்துள்ளது.
விண்வெளி சுற்றுலாத்துறை முதலில் குறைவான எண்ணிக்கையில் தங்கும் இடங்களை ஏற்படுத்தும் அதேவேளையில் மிகவும் சிறப்புடையதாகவும் இருக்கும். சர்வதேச விண்வெளி நிலையம் முதலில் சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாக இருக்கும். இன்று நிலப் பரப்பில் அமைந்திருக்கும் ஹோட்டல்களைப் போல் வெளியில் சுற்றிப் பார்க்க எதுவும் இருக்காது. ஏனென்றால் இந்த விண்வெளி நிலையம் ஆராய்ச்சிக்காக அமைக்கப்பட்டது. பொழுதுபோக்கிற்காக அல்ல. இருந்தாலும் முதற்கட்ட விண்வெளி ஓட்டல்கள் விண்வெளி விருந்தாளிகளுக்கு சொகுசான தங்கும் வசதி மற்றும் சிறப்பான சேவைகளை அளிக்கத் தயாராக இருக்கும்.
ஸ்பேஸ் ஐலேண்ட் ஹோட்டல் சுற்றிக் கொண்டே இருப்பதால் மூன்றில் ஒரு பங்கு அளவுள்ள புவிஈர்ப்பு விசை இழுப்பு ஏற்படுத்தப்படுகிறது. இதனால் விருந்தாளிகள் நிலப்பரப்பைப்போல் நடப்பதற்கும் சுற்றி வருவதற்கும் வழிவகை செய்கிறது. இந்த ஓட்டலில் ஒரு நீரோடை, நீர் மறுசுழற்சி மையம், தோட்டம் மற்றும் மருத்துவ வசதிகள் உட்கொண்டதாக இருக்கும்.
இதைத் தவிர விருந்தாளிகள் விண் வெளியிலும் நடக்கும் வசதிகளையும் அளிக்கிறது. இந்த ஹோட்டல் நிமிடத்திற்கு ஒருமுறை சுற்றிவருவதால் இந்த ஹோட்டல்களில் ஜன்னல்கள் இருக்காது. ஏனென்றால் இவ்வாறு சுற்றும்பொழுது விருந்தாளிகள் விண்வெளியைப் பார்த் தால் உடல் கோளாறு ஏற்படும் என்பதால் ஜன்னல்கள் தவிர்க்கப்படுகிறது. இதை ஈடுசெய்வதற்காக அறையில் திரைகள் பொருத்தப்பட்டு விண்வெளிக் காட்சிகளின் படக்காட்சிகள் திரையிடும் எண்ணத்தில் உள்ளனர்.
புதுமணத் தம்பதிகள் தேனிலவுக்கு ஊட்டி, கொடைக்கானல், சுவிட்சர் லாந்து என்று செல்வது போல இனி வரும் காலத்தில் புதுமணத் தம்பதிகள் விண்வெளிக்கு தேனிலவு கொண்டாடப் போகும் நாள் வெகுதூரத்தில் இல்லை. சமீபத்தில் ரஷிய விண்வெளி வீரர் ஞ்ரிமெலன் சென்கோ விண்வெளியில் தங்கி இருந்தபடியே பூமியில் உள்ள தன் காதலி எக்கார்டினா டிமிட்ரேலை திருமணம் செய்து கொண்டார். இந்த 'விண்வெளி திருமணம்" புதுமையாக இருந்தாலும் இது போன்ற நிகழ்ச்சிகள் விண்வெளி பயணத்திற்கு ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.
விண்வெளி சுற்றுலா போட்டிகள் சூடு பிடித்து விட்டதால் திருவாளர் பொது ஜனம் 'ஜம்" என்று கால்மேல் கால் போட்டுக் கொண்டு விண்வெளிக்கு பறந்து செல்லும் காலம் வெகு தூரத்தில் இல்லை. தற்போது சென்னை - மதுரை இடையே சாதாரண விமான போக்கு வரத்து இருப்பது போல இன்னும் 20 ஆண்டுகளில் பூமிக்கும் விண்வெளிக்கும் விமானப் பயணம் இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
இதனிடையே இத்திட்டம் குறித்து சில மதிப்பீட்டாளர்கள் பலத்த கேள்வி எழுப்பியுள்ளனர்.
நன்றி,நீடூர்
உலகின் இரண்டாவது உயரமான கட்டடம்
உலகின் இரண்டாவது உயரமான கட்டடம் சவுதி அரேபியாவில் உள்ள முஸ்லிம்களின் புனித இடமான மக்கா நகரத்தில் கட்டப்படுகிறது. முஸ்லிம்களின் புனித இடமாக உள்ள மஸ்ஜித் ஹரம் ஷரீஃப் அருகில் 662 மீட்டர் (2717 அடி) உயரம் கொண்ட கட்டடம் அந்நாட்டு அரசால் கட்டப்பட்டு வருகிறது.
உலகின் மிக உயரமான கட்டடம் புர்ஜ் கலிஃபா துபாயில் கடந்த ஜனவரியில் திறக்கப்பட்டது. இதுவரை உலகின் இரண்டாவது மிக உயர்ந்த கட்டடமாக தைவானில் உள்ள தாய்பேயில் 101 மாடிகளைக் கொண்ட 508 மீட்டர்(1676 அடி) கொண்ட கட்டடமே கருதப்பட்டு வந்தது.
உலகின் மிகப்பெரிய கடிகாரம்
மக்கா அரசு கோபுரம் (Makkah Royal Tower) என்று பெயரிடப்பட்டுள்ள அந்த கோபுரத்தின் உச்சியில் ஆறு கோபுர கடிகாரங்கள் பொறுத்தப்பட இருக்கிறது. ஜெர்மனியில் தயாராகும் அந்த கடிகாரங்கள் உலகின் மிகப்பெரியதாக இருக்கும். 45 மீட்டர் அதாவது 147 அடி அகலமும், 43 மீட்டர் உயரமும் கொண்டதாக இருக்கும். இந்த கடிகாரங்களை இரவில் 17 கி.மீ தூரம் வரையிலும், பகலில் 12 முதல் 13 கி.மீ தூரம் வரையில் பார்க்க முடியும்.
சவுதி அரசால் கட்டப்பட்டுவரும் இந்தப் பிரமாண்டமான கட்டடத்திற்கான செலவு மூன்று பில்லியன் டாலர்களாகும். புனித பள்ளிகளின் கட்டுமானங்களைப் பராமரிக்கும் பொறுப்புகளை கொண்டிருக்கும் சவுதியின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனமான பின்லேடன் குழுமம் சவுதி அரசின் சார்பில் இக்கட்டடத்தையும் கட்டி வருகிறது.
இக்கட்டத்தில் ஏழு கோபுரங்களை கொண்ட விடுதிகளும் உண்டு. அதற்கு அப்ராஜ் அல் பேய்த் என்று பெயரிட்டப்பட்டுள்ளது. அந்த விடுதிகளில் 3000 அறைகள் உண்டு. முஸ்லிம்களின் தொழுகை திசையான ஹரம் ஷரீஃப் எனும் புனித பள்ளியை நோக்கிய வண்ணம் அதிகமான அறைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த வளாகத்தை பேர்மான்ட் விடுதி குழுமம் நிர்வகிக்கும். இஸ்லாமிய அறக்கட்டளை அல்லது வக்ஃப் இன் கீழ் இயங்கி இரண்டு புனித பள்ளிகளுக்கான பராமரிப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கு இதன் வருமானம் சென்றடையும்.
கட்டடத்தின் ஒரு பகுதி ஜூன் மாதத்தில் திறக்கப்படுகிறது. கோபுரக்கடிகாரம் புனித மாதமான ரமளான் மாதத்தில் திறக்கப்படும். மேற்கண்ட தகவலை துபாயில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதன் நிர்வாகி முஹம்மது அல் அற்கூபி தெரிவித்தார்.
வீடியோ
நன்றி,நீடூர்
பயங்கரவாதிகளை சுட கேமரா கண்டுபிடிப்பு
ஷில்லாங் : பயங்கரவாத தாக்குதல்களை எவ்வாறு எதிர் கொள்வது என பலரும் ஆய்வு நடத்தி வரும் சமயத்தில், சில இளம் மாணவர்கள், இத்தகைய தாக்குதல்களை முறியடிக்கும் நவீன ஆயுதங்களை கண்டு பிடித்துள்ளனர்.பயங்கரவாதிகள் பெரிய கட்டடங்களில் தாக்குதல் நடத்தும் போது, தொலைவில் இருந்தபடியே அவர்களை தாக்கும் தொழில் நுட்பத்தை, ஒரிசா மாநிலம், புவனேஸ்வரைச் சேர்ந்த துபான் குமார் சமால் என்னும் பிளஸ் 2 மாணவன் கண்டு பிடித்துள்ளார்.
சிறுவர்களின் அறிவியல் கண்காட்சியில் இந்த படைப்பு இடம் பெற்றுள்ளது.கண்காணிப்பு கேமராவுடன் இணைந்துள்ள துப்பாக்கியை, கன்ட்ரோல் ரூமில் இருந்தவாறு இயக்கி எதிரிகளைத் தாக்கலாம். சுழன்று கொண்டிருக்கும் கண்காணிப்பு கேமரா மூலம் எதிரிகளை அடையாளம் கண்டு, கேமராவை எதிரிகளை நோக்கி திருப்பி, அதிலிருக்கும் துப்பாக்கி மூலம் சுட்டுத் தள்ளலாம். இந்த சாதனை மாணவன், தென் ஆப்ரிக்காவில் பைலட் டிரைனிங் படிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.இந்த மாணவன், எடை குறைந்த “ஏர் கிராப்ட்’ ஒன்றையும் கண்டு பிடித்துள்ளார்.
“இதன் மூலம் குறிப்பிட்ட இலக்கை அடைவது மட்டுமல்லாமல், வெள்ள நிவாரணத்தின் போது மீட்புப் பொருட்களை எடுத்துச் செல்லவும் உதவும்’ என்றும் விளக்கினார்.போரில் காயம்பட்ட வீரர்களுக்கு உதவும் வகையில், புதிய வகை பாசியை, உ.பி., பெரேலி பப்ளிக் ஸ்கூல் மாணவி பாரதி சிங் கண்டுபிடித்துள்ளார். “காயம் பட்ட இடத்தில் இந்த பாசியை வைக்கும் போது, பாசியில் இருந்து ஒரு வகை ஊட்டச்சத்து வெளியேறும். இது, வீரர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்’ என மாணவி பாரதி சிங் கூறினார்
Source & Thanks : dinamalar.com
தென் கிழக்காசியாவில் கையடக்கதொலைபேசி பாவனையில் இலங்கை முதலிடம்
கையடக்க தொலைபேசி பாவனையில் இலங்கை தென்கிழக்காசிய வலயத்தில் முன்னணியில் உள்ளதாக ஆய்வுகளில் இருந்து தெரிய வந்துள்ளது. |
இந்திய இணையத்தளம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, இலங்கையின் ஜனத்தொகையில் 81.35 சத வீதமானோர் கையடக்கத்தொலைபேசியினை உபயோகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், 1 கோடி 60 லட்சத்து 27 ஆயிரம் பேர் கையடக்க தொலைபேசியினை பாவனைக்கு உட்படுத்தி வருகின்றனர். தெற்காசிய நாடான பாக்கிஸ்தானில் 9 கோடியே 7 லட்சத்து 58 ஆயிரம் பேர் கையடக்க தொலைபேசியினைப் பயன்படுத்துகின்றனர். இது பாக்கிஸ்தானின் சனத்தொகையில் 59.6 சத வீதம் என தெரிவிக்கப்பட்டுள்ள, இதேவேளை, 58 கோடி 4 லட்சம் கையடக்க தொலைபேசி பாவனையாளர்களைக் கொண்ட இந்தியாவில், சனத்தொகையில் 50 சத வீதமானவர்களே, பாவனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பூட்டானில் 47.8 சத வீதமானவர்களும், மாலைதீவில் 46 சதவீதமானவர்களும், ஆப்கானிஸ்தானில் 35 சத வீதமானவர்களும் கையடக்க தொலை பேசிகளை நடத்துகின்றனர். இதனிடையே பங்களாதேஷில் 34 சத வீதமானவர்கள் கையடக்க தொலைபேசியினை பயன்படுத்தும் அதேவேளை, நேபாளத்தில் மிகக் குறைந்த அளவான 23 சத வீதமானவர்களே பயன்படுத்துவதாக இந்திய இணையதள ஆய்வு ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கையடக்க தொலைபேசியின் பாவனை அதிகரித்துச் செல்வது, தொலைத் தொடர்பு ரீதியான சமூக அபிவிருத்தியே காரணம் என அந்த இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளது. நன்றி,தமிழ்வின் |