Thursday, July 7, 2011

பல் கூச்சம் ஏற்படுவது ஏன்?

பல் போனால் சொல் போகும் என்பது நாம் அறிந்ததே.
பல் பராமரிப்பு அனைத்து வயதினருக்கும் அவசியம் என்பதும் நாம்
அறிந்ததே. இருப்பினும் சில பழக்கவழக்கங்கள், உணவு முறைகள், பரம்பரை போன்ற காரணங்களினால் பல் பிரச்னை பெரிய அளவில் தொல்லை தருவதாக உள்ளது.
முக்கியமாக குளிர்ந்த ஐஸ்கிரீமோ, சூடான பானமோ குடிக்கும்போது உங்களுக்கு சுரீர் என வலி ஏற்படுகிறதா? நீங்கள் பற்கூச்சத்தால் அவதிப்படுகிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்.
பற்சிதைவு, பல் உடைதல், எனாமல் தேய்த்தல், முறையற்ற வகையில் கடுமையாகப் பற்களைத் தேய்ப்பதால் பல் வேர்கள் வெளியே தெரிவது, பற்களை விட்டு ஈறு விலகுதல் மற்றும் ஈறுகளில் தொற்று ஆகியவற்றால் பற்கூச்சம் ஏற்படுகிறது.
மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து கலந்த பற்பசை, ஃபில்லிங், "ரூட் கெனால்' போன்ற சிகிச்சை முறைகளை பற்கூச்சத்தின் தீவிரத்துக்கேற்ப மேற்கொள்ளலாம்.
அதிக நேரம் பல் தேய்த்தலையும், படுக்கைவசமாக தேய்த்தலையும், கடின குச்சங்கள் கொண்ட பிரஷ்ஷினால் தேய்ப்பதையும் தவிர்க்க வேண்டும்.
தூக்கத்தில் பல் கடிக்கும் பழக்கமுள்ளவர்கள், அதை தடுக்க ஸ்பிளிண்ட் அல்லது நைட்கார்டு பயன்படுத்தலாம்.
எனவே, ஆண்டுக்கு இரு முறை அல்லது குறைந்தது ஒரு முறையாவது தகுந்த பல் மருத்துவரை அணுகி பற்களுக்கான ஆலோசனை, சிகிச்சையைப் பெறுவது நல்லது.