Sunday, August 8, 2010

பொன் மொழிகள்.

* பணம், பேச்சு, செய்யும் செயல் எல்லாவற்றிலும் அளவுடன் இருக்க வேண்டும். ஆசையாய் இருக்கிறது என்பதற்காக அவசியமில்லாத அல்லது தீமைகளைத் தருகின்ற செயல்களைச் செய்யவே கூடாது.

* சத்தியம் என்றால் வாக்கும், மனசும் ஒன்றுபடுவது மட்டுமல்ல. நல்ல மனதில் தோன்றுகின்ற நல்ல எண்ணங்களை வாக்கில் சொல்வதே சத்தியம் ஆகும்.

* போட்டி பொறாமை இருக்கும் வரையில் யாருக்கும் மனநிறைவு உண்டாவதில்லை. தேவைகளை அதிகப்படுத்தி கொண்டே போவதால் வேண்டாத செயல்களைச் செய்து பின்னர் அவதிப்பட நேரிடும். 

* தர்மம், நீதி என்னும் இரண்டும் சேர்ந்து தான் பண்பு உண்டாகிறது. மனதில் உள்ள அசுத்தங்கள் நீங்கினால் அது தானாகவே பரமாத்மாவின் மீது திரும்பிவிடும். 

* பெரும்பாலும் நம்முடைய கோபத்தினால் நமக்கே தீங்கு செய்தவர்களாகிறோம். கோபத்தினால் நமக்கும் நன்மையில்லை; மற்றவர்களுக்கும் நன்மை இல்லை  

* பிதுர் காரியங்களுக்கு சிரத்தை வேண்டும். தெய்வகாரியங்களுக்கு பக்தி வேண்டும்.

* கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...

* நீ அனுபவி -- அது தான் ஞானம். பிறரை அனுபவிக்கச் செய்.அது தான் தர்மம். -பெர்சீன் பழ்மொழி. 

* உங்கள் நம்பிக்கையை பணத்தின் மீது வைக்காதீர்கள்; பணத்தை நம்பிக்கையான இடத்தில் வையுங்கள். 

* உப்பு விளைவதும் தண்ணீரிலே, கரைவதும் அதிலேயேதான். 

* ஜலதோஷத்திற்குச் சாப்பாடு போடுங்கள்; ஜுரத்திற்கு பட்டினி போடுங்கள். 

* கனவுகளை நேசியுங்கள். ஆனால்- நிஜத்தோடு நெருங்கி வாழுங்கள். 

* கந்தலானாலும் அதிகமாக கசக்காதீங்க, மேலும் கந்தலாகும். 

* வளமான் காலத்தில் நண்பர்கள் நம்மை தெரிந்து கொள்கிறார்கள். வறுமை காலத்தில் நாம் நண்பர்களைத் தெரிந்துகொள்கிறோம்.

* கனவுகளை நேசியுங்கள். ஆனால்- நிஜத்தோடு நெருங்கி வாழுங்கள்.

கண்ணாடியால் ஆன விமானம்-ஏர் பஸ் திட்டம்!



எதிர்காலத்தில் விமானங்கள் எப்படி இருக்கும் என்பது குறித்து ஏர்பஸ் நிறுவனம் முன் வைத்துள்ள ஒரு மாடல் பெரும் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் பான்பரோ நகரில் சமீபத்தில் நடந்து முடிந்த சர்வதேச விமானக் கண்காட்சியில் இந்த மாதிரி விமானம் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
தாவர நார்களால் ஆன இதன் இருக்கைகள் உட்காரும் நபரின் உருவத்துக்கேற்ப வடிவம் மாறுமாம். விமானத்தின் மேல் பகுதி உள்பட அதன் பெரும்பாலான பகுதிகள் கண்ணாடியிழையினால் ஆனதாக இருக்கும். இதனால் விமானத்தின் எந்தப் பகுதியில் இருந்தும் முழு அளவில் வெளியுலகைப் பார்த்தவாரே பயணிக்கலாம்.
பயணிகளின் உடல் வெப்பத்தை வீணாக்காமல் அதைப் பயன்படுத்தி விமானத்தின் உள் வெப்பத்தை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் கொண்டதாகவும் இந்த விமானம் இருக்கும் என்கிறது ஏர்பஸ்.
வழக்கத்தைவிட அதிக நீளம் கொண்ட இந்த விமானத்தின் இறக்கைகள் சிறியதாகவே இருக்கும். இந்த இறக்கைகளில் என்ஜின்கள் புதைத்திருக்கும். ம வடிவத்திலான இதன் வால் பகுதியால் விமானம் குறைந்த விட்டத்திலேயே திரும்ப முடியும்.
மேலும் ‘ஹோலோகிராம்’ மூலமான அலங்காரங்கள், ஸென் தோட்டம் என இந்த விமானம் நம்மை புதிய உலகுக்கே இட்டுச் செல்லும் என்கிறது ஏர் பஸ்.
இந்த விமானம் 2030ம் ஆண்டில் புழக்கத்துக்கு வரலாம் என்று ஏர்பஸ் நிறுவனம் கூறியுள்ளது.
இந்த விமானக் கண்காட்சியையொட்டி இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள ‘எதிர்கால விமானங்கள்’ என்ற ஆவணத்தி்ல் மேலும் பல ஆச்சரியமான சமாச்சாரங்களும் அடங்கியுள்ளன.
அதில் சில:
-எதிர்காலத்தில் பல சிறிய விமானங்கள் நாரைகள் போல சேர்ந்து இணையாகப் பறக்கலாம்.
-நீண்டதூரம் பயணிக்கும் விமானங்கள் வானிலேயே பெரிய விமானத்தில் தரையிறங்கி மீண்டும் பறக்கலாம்.
-காற்றில் உள்ள ஹைட்ரஜனையே எரிபொருளாக மாற்றிக் கொண்டு விமானங்கள் பறக்கலாம்.
-சொகுசு கப்பல்கள்  போல பொழுதைக் கழிக்க கோசினோக்கள் உள்ளிட்டவை அடங்கிய சொகுசு விமானங்கள் புழக்கத்துக்கு வரலாம் என்று போகிறது இந்த ஆவணம்.

பல்லினால் தேங்காய் உரித்து கின்னஸுக்கு முயற்சிக்கும் பெங்களூர் வாலிபர்!

உலகளவில் சாதனை செய்வதற்கு பலர் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக எப்படியான விஷப் பரீட்சையினை செய்யவும் தயங்குவதில்லை.
தங்களது உடலுறுப்புகளையே ஆயுதமாக பயன்படுத்தியும் பலர் சாதனை செய்து வருகின்றனர். அந்தவகையில் பெங்களூரை சேர்ந்த 32 வயதுடைய விஜய் குமார் என்ற வாலிபர், தனது பல்லினால் தேங்காய் உரித்து சாதனை படைத்துள்ளார்.
 கின்னஸ் புத்தகத்தில் தனது பெயரினை பதிவுசெய்ய நினைத்த விஜய் குமார் ஒரு நிமிடத்திற்குள் மூன்று தேங்காய்களை தனது பல்லினால் உரித்துக் காண்பித்தார். இவரது இச்சாதனை கின்னஸ் தெரிவுக் குழுவினரினால் பரிசீலிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புற்றுநோய்க்கு மருந்தாகிறது ஆக்டோபஸ் நஞ்சு .

வாஷிங்டன்: ஜோசியத்தால் பிரபலமடைந்த ஆக்டோபஸ் இப்போது மருத்துவத் துறையை கலக்கத் தொடங்கியிருக்கிறது. புற்றுநோய், உடல்வலி, ஒவ்வாமை போன்ற பிரச்னைகளில் இருந்து தப்பிக்க ஆக்டோபசின் நஞ்சை மருந்தாக பயன்படுத்தலாம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
மெல்பர்ன் பல்கலைக்கழகம், நார்வே அறிவியல் தொழில் நுட்பப் பல்கலைக்கழகம், மற்றும் ஹாம்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இணைந்து மருத்துவர் பிரையன் பிரை தலைமையில் கடல் வாழ் உயிரினமான ஆக்டோபஸ், கட்டில் பிஷ் எனப்படும் சிப்பி மீன் மற்றும் இதர ஆழ்கடல் மீன்கள் குறித்த ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
இந்த ஆராய்ச்சியின் போது ஆக்டோபசில் மேலும் 4 புதிய இனங்களைக் கண்டுபிடித்துள்ள விஞ்ஞானிகள் இதில் கண்டறியப்படாத மேலும் பல இனங்கள் இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும், அன்டார்ட்டிகா கடல் பகுதியில் வாழும் ஆக்டோபசின் நஞ்சு மனிதர்களுக்கு ஏற்படும் பல நோய்களுக்கு மருந்தாகப் பயன்படும் என்பதையும் இக்குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
பொதுவாக விலங்குகளின் நஞ்சு மனித இனத்துக்கு மருந்தாக பயன்படுவது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் மருத்துவம் சார்ந்த கடல் வாழ் உயிரினங்கள் குறித்த ஆய்வு மற்றும் பயன்கள் குறித்த ஆய்வு நடத்தப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக்டோபசின் நஞ்சில் மிகக் குறைந்த அளவில் சத்து மிக்க புரதச் சத்து இருப்பதும், அது மனிதனுக்கு மிகப் பயனுள்ள ஒன்றாக இருக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அன்டார்டிக் கடல் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட சுமார் 203 ஆக்டோபஸ்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது.
நன்றி,தமிழ்CNN.

கூகுள் தனது சேவைகளை ஹொங்கொங்கில் தொடர தீர்மானம்.

பிரபல தேடுதள நிறுவனமான கூகுள் டொட் கொம், தனது பிரதான சீனமொழி தேடுதளம் மூலம் (Google.Cn) சேவைகள் வழங்குவதை நிறுத்திக் கொண்டது.எனினும், சீன மொழிக்கான தேடுதல் சேவைகளை ஹொங்கொங்கில் இருந்து தொடரப் போவதாக அது அறிவித்துள்ளது.
Google.cn எனும் சீன மொழியில் அமைந்திருந்த தேடு தளத்திற்கு வரும் பார்வையாளர்கள், Google.com.hk என்ற தளத்திற்கு திருப்பி விடப்படுவார்கள் என கூகுள் தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
இன்டர்நெட் கணக்குகள் அத்துமீறி ஹெக்கிங் செய்யப்பட்டது, தகவல்கள் திருடப்பட்டது என பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக சீனா பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது. இச்சூழலில் கூகுள் எந்நேரமும் வெளியேறலாம் என்ற சூழல் தான் கடந்த சில வாரங்களாகக் காணப்பட்டது. இந்த நிலையில், கூகுள் தனது அதிகாரப்பூர்வ முடிவை செயல்படுத்தி உள்ளதால், சீனாவில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் நிலையும், முதலீட்டாளர்களின் நிலையும் ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளது. உலக அளவில் 38 கோடி இணையத்தள பார்வையாளர்களை கொண்ட சீன சந்தையில் இருந்து கூகுள் வெளியேறுவது இணைய பொருளாதாரத்தில் மிக முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.

'டுவிட்டர்' இணையத்தளம் நெருக்கடியில்...!

உலகின் பிரபல்யமாக விளங்கிய சமூக இணையத்தளமான 'டுவிட்டர்' தற்போது நெருக்கடி ஒன்றைச் சந்தித்துள்ளது. 'டுவிட்டர்' இணையத்தளத்தில் கணக்குகளைப் பேணும் பலர் அவர்களைத் தொடர்வோர் மற்றும் நண்பர்களை இழந்துள்ளனர்.
அதிகமான பாவனையாளர்கள் தமது நண்பர்களுக்குப் 'பின்பற்று' (follow) என்ற வேண்டுகோளை பலவந்தமாக அனுப்புகின்றனர்.இதனை ஏற்றுக்கொள்ளும் நண்பர்களின் கணக்குகள் மூலமாக சமூக வலைப்பின்னலில் உள்ள ஏனையோரது கணக்குகளை 'ஹக்' (hack) செய்ய முடியும்.
இது தொடர்பில் 'டுவிட்டர்' இணையத்தளம் துரிதகெதியில் செயற்பட்டு வருவதுடன் நண்பர்களைத் தொடரும் இணைப்பை நிறுத்தியுள்ளது. தவறுகள் ஏற்பட்ட 'டுவிட்டர்' கணக்குகளை மீள ஒழுங்கமைக்கும் நடவடிக்கையிலும் 'டுவிட்டர்' தொழில்நுட்பப் பிரிவு ஈடுபட்டுள்ளது.
100 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்ட 'டுவிட்டர்' இணையத்தளத்தின் சேவைகளைப் பிரபல ஊடகங்கள் உட்பட பல நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புயலுக்கு பெயர் யார் வைத்தார்கள்?

  1970க்கு முன்பு வரை புயல்களுக்கு பெயர் வைக்கும் நடைமுறை கிடையாது. இந்தியாவில் வானிலை ஆய்வு மையங்கள் 1ஏ, 1பி என்று ஆங்கில எழுத்து அகர வரிசைப்படி புயலுக்கு பெயர் வைத்து வந்தன. சாதாரண மக்கள், ஏதோ புயல் வருகிறது; போகிறது’ என்று இருப்பார்கள்.
புயல்களுக்கு பெயர் வைத்து அழைக்கப்பட்ட பிறகுதான் பாமர மக்களும் அதை எளிதாக நினைவில் வைத்துக் கொள்வதுடன், அந்த புயல் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளும் நிலையும் உருவானது.
1970ல் ஜெனிவாவில் நடைபெற்ற மாநாட்டின்போது, பசிபிக் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும்படி அந்த பகுதியை சேர்ந்த நாடுகளை உலக வானிலை அமைப்பு முதல் முறையாக கேட்டுக் கொண்டது.
அதேபோல், வடக்கு இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும்படி, 2000ல் நடைபெற்ற உலக வானிலை அமைப்பு & ஆசிய, பசிபிக் நாடுகளுக்கான ஐக்கிய சபை பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் மாநாட்டில் இந்த பகுதியில் அமைந்துள்ள நாடுகள் கேட்டுக் கொள்ளப்பட்டன.
அதன்படி, வடக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள இந்தியா, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய 8 நாடுகளும் சேர்ந்து 64 பெயர்களை கொண்ட பட்டியலை தயாரித்தன. வடக்கு இந்திய பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு இந்த பட்டியலில் இருந்து ஒவ்வொரு பெயராக வைக்கப்பட்டு வருகின்றன.
ஒருமுறை ஒரு நாடு தேர்வு செய்த பெயர் வைக்கப்பட்டால், அடுத்த முறை வேறு நாடு தேர்வு செய்த பெயரில் புயல் அழைக்கப்படுகிறது. இதுபோல், 8 நாடுகளின் பெயர்களும் சுழற்சி முறையில் வைக்கப்படுகின்றன. அதன்படி, கடந்த காலங்களில்  கரை கடந்த புயலுக்கு பாகிஸ்தானின் ‘லைலா’ பெயர் வைக்கப்பட்டது. இதற்கு முன்பாக, ஓமன் பரிந்துரை செய்த பெயரான ‘வார்டு’ வைக்கப்பட்டது.
புயல் உருவாகி கரை கடந்ததும், பட்டியலில் இருந்து அந்த பெயர் நீக்கப்படுகிறது. பிறகு, அந்த நாட்டின் சார்பில் புதிய பெயர் பரிந்துரை செய்யப்படுகிறது. கடைசியாக, 8 நாடுகளின் சார்பில் புயல்களுக்கு வைக்கப்பட்ட பெயர்களின் விவரம் வருமாறு:
நர்கீஸ் (பாகிஸ்தான்), ரஷ்மி (இலங்கை), காய்&முக் (தாய்லாந்து), நிஷா (வங்கதேசம்), பிஜ்லி (இந்தியா), அய்லா (மாலத்தீவு), பியான் (மியான்மர்), வார்டு (ஓமன்).
அடுத்த புயல் பெயர் ‘பண்டு’
வடக்கு இந்தியப் பெருங்கடலில் அடுத்து எப்போது புயல் ஏற்படும் என்பது தெரியாது. ஆனால், அப்படி ஒரு புயல் உருவானால் அதற்கு வைக்கப்பட உள்ள பெயர் இப்போதே தயாராக இருக்கிறது. அதன் பெயர் ‘பண்டு’. புயலுக்கு பெயர் வைக்கும் சுழற்சியில், பாகிஸ்தானுக்கு அடுத்தப்படியாக இலங்கைக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்த நாடு பரிந்துரை செய்துள்ள பெயர்தான் ‘பண்டு.
நன்றி,வீரகேசரி.

என்ன பாவம் செய்தாள்? இந்தச் சிறுமி கொல்லப் படுவதற்கு?

வளைகுடாவின் கத்தர், சவூதி ஆகிய நாடுகளில் உள்ள இரு இந்தியப் பள்ளிக்கூடங்களில், கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் பள்ளிப் பேருந்து ஓட்டுநரின் அசட்டையினால் நிகழ்ந்த அதிர்ச்சிகரமான சிறார் இருவரது மரணங்களைத் தொடர்ந்து, பெற்றோரின் மனதில் நிம்மதியை ஏற்படுத்தும் வகையிலும் அசம்பாவிதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியிலும் கத்தரில் உள்ள இந்தியப் பள்ளி ஒன்று ஹை-டெக் தீர்வைக் கையில் எடுத்துள்ளது. 
இப்புதியமுறை மூலம் வீட்டிலிருந்து பள்ளிவாகனத்தில் ஏறும் குழந்தைகள் வாகனத்திற்குள் நுழைவதையும் வெளியேறுவதையும் உடனுக்குடன் குறுஞ்செய்தி மூலம் பெற்றோர்கள் அறிந்து உறுதி செய்து கொள்ள முடியும். பள்ளிக்கு அனுப்பும் குழந்தைகள் பள்ளிக்குச் சென்று சேர்ந்தனரா இல்லையா? என்பதை வீட்டிலிருந்தே அறிந்து கொள்ள முடிவதால், இப்புதிய வசதி பெற்றோரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 
சாட்டிலைட் உதவியுடன் பல புதிய டெக்னாலஜிகளை உபயோகித்து, மிகுந்த பொருள் செலவில் இவ்வசதி செய்யப்படுவதற்கான கட்டாயத் தேவை யாது? எனும் வினாவுக்குப் பெட்டிச் செய்தியில் விளக்கமான விடை உள்ளது.
கடந்து போன ரணங்கள்

கடந்த இருமாதங்களுக்குமுன் கத்தர் நாட்டின் தலைநகரான தோஹாவில் உள்ள இந்தியப் பள்ளிக்கூடம் ஒன்றின் மாணவ-மாணவியரை அழைத்துக் கொண்டுவரும் மினிவேன் ஒன்றினுள் இருந்து நான்கரை வயதான சாரா என்ற KG-1 வகுப்பில் பயிலும் ஒரு சிறுமி இறங்காமல் தூங்கி விட்டாள். இதனை அறியாத மினி வேன் ட்ரைவர், எப்போதும்போல் திறந்த வெளியில் உள்ள வாகன நிறுத்தத்தில் மினிவேனை நிறுத்திவிட்டுச் சென்று விட்டார்.

வளைகுடா நாட்டின் வெப்பம் உலகறிந்தது. அதிகபட்சமாக 55 டிகிரி செண்ட்டிகிரேட்வரை திறந்த வெளியில் உள்ள வெப்பம், கதவுகளையும் கண்ணாடி ஜன்னல்களையும் இறுக மூடிய ஒரு வாகனத்திற்குள் 70 டிகிரி செண்ட்டிகிரேட்வரை உயரும். இத்தகைய கடுமையான அவஸ்தையில் துடித்து இறந்துபோன அந்த ரோஜா மலர்களின் மறுமை வாழ்வு சிறக்க, அடிமனதில் இருந்து உருக்கமாக பிரார்த்திக்கிறோம்.

கடந்த மே 17, 2010இல் கத்தர் தோஹாவில் உள்ள இந்தியப் பள்ளிக்கூடத்தில் இறந்துபோன சாரா முஹம்மத் குறித்த விரிவான செய்தி காண்க:
oOo
இச்சம்பவத்தின் தாக்கம் மனதைவிட்டு அகலும் முன்னரே அடுத்த 25 தினங்களில் சவூதியிலுள்ள இந்தியப் பள்ளிக்கூடம் ஒன்றில் அச்சாக இதேபோன்றதொரு நிகழ்வில் மற்றொரு பிஞ்சு துடிதுடிக்க பலியானது.
கடந்த ஜூன் 13, 2010இல் சவூதியின் தம்மாம் புறநகர் அல்ராக்கா பகுதியில் உள்ள இந்தியப் பள்ளிக்கூடத்தில் இறந்து போன ஃபிதா ஹாரிஸ் குறித்த விரிவான செய்தி காண்க:
எதிர் வரும் செப்டம்பர், 2010 கத்தர் நாட்டில் அறிமுகமாகவிருக்கும் பள்ளிச் சிறார்களுக்கான இந்தத் தானியங்கிக் கண்காணிக்கும் முறை(Automated Child Tracking System -ACTS)யின் மூலம் பெற்றோர்களோடு, பள்ளி நிர்வாகமும் மாணவர்களின் வருகைப் பதிவேட்டைத் தனித் தனியே அறிந்து கொள்ள இயலும்.
"இந்தப் புதிய ஏற்பாடு, வாகனங்கள் மூலம் தினமும் பள்ளிக்குச் சென்று வரும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு உத்திரவாதத்தினை அளிக்கும்" என்கிறார் DPS பள்ளியின்  முதல்வரான A.K ஸ்ரீவஸ்தவா.
இப்புதிய ஏற்பாட்டிற்குத் தேவையான கருவிகளைப் பொருத்தும் பணியினைக் கத்தரில் உள்ள கணினி நிறுவனமான iNet Middle East செய்து வருகிறது. பள்ளிப் பேருந்துகளை சாட்டிலைட் உதவி கொண்டு தொடர்ச்சியாகக் கண்காணிக்கும் வகையில் automated Radio Frequency Identification (RFID)-இதில் பயன்படுத்தப் படுகிறது. இதற்காக iNet RFID, GPS (Global Positioning System) மற்றும் GPRS (General Packet Radio Service)ஆகிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப் படும்.
RFID என்பது தானியங்கி முறையில் அடையாளம் கண்டுணரும் முறையாகும். இதற்காகவே  செய்தியின் தொடக்கத்தில் காண்பிக்கப்பட்டுள்ள RFID அட்டைகளில் உள்ளீடு செய்யப் பட்ட விபரங்களைப் படிக்க, ரீடர்ஸ் எனப்படும் படிப்பான்கள் பள்ளிப் பேருந்துகளில் பொருத்தப்படும். பள்ளியிலுள்ள அனைத்து மாணவ-மாணவியரும் இந்த CHIP இணைக்கப்பட்ட அட்டையைத் தவறாமல் கொண்டுவர வேண்டும் என்பது முக்கிய விதியாக்கப்பட்டுள்ளது. இந்த அட்டைகளுடன் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டியது பெற்றோர்களின் கட்டாயக் கடமை என அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இந்த முறைமூலம், ஒரு குழந்தை வீட்டிலிருந்து கிளம்பிப் பள்ளிப் பேருந்திற்குள் நுழையும்போதும் வெளியேறும்போதும் நொடிப்பொழுதில் SMS குறுஞ்செய்தி ஒன்று பெற்றோருக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் சென்றுவிடும்படி அமைக்கப் பட்டுள்ளது.
இம்முறையை மற்ற இந்தியப் பள்ளிகளும் கடைப்பிடிக்க ஆரம்பிக்கும் என்று தெரிகிறது.
இதற்கான கருவிகளைப் பேருந்தில் பொருத்தும் iNet நிறுவனத்தின் மேலாளர் சுனில் நாயர் செய்தியாளர்களிடையே பேசும்போது, "இப்புதிய வசதியின் உதவியால் பேருந்து சென்று கொண்டிருக்கும் இடத்தை ரியல் டைமில் உடனுக்குடன் அறிந்து கொள்வது மட்டுமின்றி, குறிப்பிட்ட மாணவரோ மாணவியோ அந்தப் பேருந்தில் பயணித்தவாறு உள்ளனரா? என்பதையும் அறிந்து கொள்ளலாம்" என்றார். 
"இம்முறை பெற்றோருக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் பெரும் நிம்மதியை ஏற்படுத்தும். இந்தமுறை பற்றிப் பெற்றோர்களுக்கு முறையான அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பெற்றோரிடையே பெரும் வரவேற்பும் கிடைத்துள்ளது" என்று மேலும் அவர் கூறினார். 
குறுஞ்செய்தி அனுப்பும் முறைகளில் பல்வேறு வசதிகளை பயனர் விரும்பியவாறு மாற்றம் செய்து கொள்ளலாம். பேருந்தின் இஞ்சின் நிறுத்திய பிறகும் ஒரு மாணவர் பேருந்திலிருந்து இறங்காமல் இருந்தால், அதைப் பள்ளி நிர்வாகிகள் சிலருக்குத் தகவலாக அறிவிக்கும் வசதியும் இதில் செய்யப்பட்டுள்ளது. 
இரு இளம் தளிர்களின் கொடூர மரணம், புதிய முறையில் சிந்திக்கவும் பள்ளி செல்லும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் குழந்தைகளின் பள்ளி வருகை உறுதிப் படுத்துவதற்கான வசதியினைச் செய்யவும் வழிகோலியுள்ளது. இறைவனடி சேர்ந்து விட்டத் தளிர்களின் அநியாயமான மரணத்திற்குக் காரணமானவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க, பெற்றோர்களிடமிருந்து பரவலான கோரிக்கை எழுந்திருந்த நேரத்தில், இனிமேலும் இதுபோன்ற கவனக்குறைவான மரணங்கள் நிகழ்வதைத் தவிர்ப்பதற்கான வழி என்ன? என்பது குறித்துச் சிந்தித்ததும் பொருட்செலவைப் பெரிய விஷயமாக நினைக்காமல் அதற்கான வழியை நடைமுறைபடுத்த முன்வந்ததும் பாராட்டத்தக்க செயல்பாடாகும். 
அதே சமயம், பள்ளி நிர்வாகம் இப்புதிய திட்டத்தில் பயன்படுத்தப்படும் மின்னணு சாதனங்களைச் சரியாகப் பராமரித்து வருவதும் குழந்தைகள் பள்ளி வாகனத்தில் ஏறி, இறங்கி விட்டதை உறுதிப்படுத்த, தமக்கு வரும் குறுஞ்செய்திகளில் கவனமாக இருக்க வேண்டியது பெற்றோர்களினதும் கடமையாகும். இழந்துவிட்ட இளந்தளிர்களின் பிரிவு இறுதியானதாக இருக்க பிரார்த்திப்போம்.

நன்றி,சத்தியமார்க்கம் 

புற்றுநோயை விரட்டும் மாம்பழம்!

பழங்களின் அரசனான மாம்பழத்திற்குப் புற்றுநோயைக் குறைக்கும் ஆற்றல் இருப்பதாக லக்னோவிலிருக்கும் தொழில் நச்சியல் ஆராய்ச்சி மையம் ITRC (Industrial Toxicology Research Center) நிபுணர்கள் அறிவித்துள்ளனர். மருத்துவத்துறையில் மாங்காய் /  மாம்பழத்தின் உபயோகத்தைக் குறித்து பல்வேறு ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு வழிவகுக்கும் இப்புதிய கண்டுபிடிப்பு நடந்துள்ளது.
ITRC-யில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நிபுணர்கள் புற்றுநோய் பாதித்த சுண்டெலிகளுக்கு மாங்காய் கொடுத்து ஆய்ந்த பொழுது மிகப்பெரிய மாற்றங்கள் அவைகளில் நிகழ்ந்ததை கண்டறிந்தனர். மாங்காய் / மாம்பழம் சாப்பிட்டபின் சுண்டெலிகளின் புற்றுநோய் பாதித்த கட்டி(Tumour)கள் பெருமளவில் குறையத் தொடங்கின.
பின்னர் நடத்திய ஆய்வில் மாங்காய் / மாம்பழத்தில் அடங்கியுள்ள லூபியோல்(Lupeol) என்ற ரசாயனப்பொருள் புற்றுநோய்க்கு எதிராக செயல்படுவதாக நிபுணர்கள் கண்டுபிடித்தனர். புற்றுநோய்க் கட்டிகளைக் குறைப்பதோடு மட்டுமின்றி பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளுக்கும் லூபியோல் நிவாரணமாகும் எனவும் அவர்கள் கண்டறிந்துள்ளனர். லூபியோலில் அடங்கியுள்ள தனிப்பட்ட ரக விட்டமின்கள், ஆர்கானிக் அமிலங்கள், கார்போ ஹைட்ரேட்டுகள் போன்றவை ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு எதிராக செயல்படுகின்றன.
வேதிச்சிகிச்சை (Chemotherapy), அறுவை சிகிச்சை (Surgery), கதிரியக்கச் சிகிச்சை (Radiotherapy) முதலான பல்வேறு சிகிச்சை முறைகள் புற்றுநோய்க்குப் பரிகாரமாக இருந்தாலும் நாட்டில் புற்றுநோயை அடியோடு இல்லாமல் ஆக்க அவைகளால் இயலாது என சந்தேகத்திற்கிடமின்றி தெளிந்து புற்றுநோய் தாக்கப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை நாட்டில் அதிகரித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் மாங்காய் / மாம்பழத்தின் மூலம் நோய் குணமளிக்க  இயலும் என்ற இப்புதிய கண்டுபிடிப்பு மருத்துவ நிபுணர்களுக்கு புத்துணர்ச்சியை நல்கியுள்ளது.
லூபியோல் என்பது தாவரங்களில் காணப்படும் ட்ரைடெர்பீன் (Triterpene) ஆகும். இது கணையப் புற்றுநோய்க்கு எதிராக எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பது குறித்து அறிய இச்சுட்டியைச் சொடுக்கவும்.
எங்கள் இறைவா! நீ எதையும் வீணுக்காகப் படைக்கவில்லை! உன் புறத்திலிருந்து தகுந்த நிவாரணம் இல்லாமல் எந்த நோயும் மனிதனைப் பீடிப்பதில்லை!
நன்றி-சத்தியமார்க்கம்.
தகவல்-Farook Ashaar-Saudi Arabia. 

4 கை, 4 கால்களுடன் பிறந்த பெண் குழந்தை!

மதுரை அரசு மருத்துவமனையில் ஒரு தலை, இரு உடல், நான்கு கை, நான்கு கால்களுடன் வினோத குழந்தை பிறந்தது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணிப் பெண் ஒருவர், கடந்த வாரம் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று காலையில் அவருக்கு பிரசவம் நிகழ்ந்தது. அவருக்கு நான்கு கை, நான்கு கால்களுடன் வினோதமான பெண் குழந்தை பிறந்தது; இது அவருக்கு மூன்றாவது பிரசவம்.
அக்குழந்தைக்கு ஒரு முகமும், அதேசமயம் தலையில் மற்றொரு தலை ஒட்டியது போல சற்றே பெரியதாகவும் இருந்தது. அக்குழந்தையின் வலது பக்கவாட்டு மார்பில் மற்றொரு உடல் இணைந்திருந்தது. குழந்தை பிறந்த ஓரிரு நிமிடங்களில் இறந்துவிட்டது. அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவு தலைமை டாக்டர் தில்ஷாத் தலைமையில் டாக்டர்கள் லலிதா, ஹெலன் சிகிச்சை அளித்தனர். தலைமை டாக்டர் கூறியதாவது: லட்சத்தில் ஒருவருக்கு இது போன்ற குழந்தைகள் பிறப்பதுண்டு.
கருத்தரித்து 13 நாட்களுக்குப் பின் கரு பிரிந்தால் இது போன்று நிகழ்வதுண்டு. அதற்கு முன் பிரிந்தால் அது முழுமையான இரட்டைக் குழந்தையாக இருக்கும். பிரசவத்தின் போது ரத்தசோகையாக இருந்ததால், தீவிர சிகிச்சை அளித்து சிசேரியன் மூலம் குழந்தை பிறந்தது. தற்போது தாய் நலமுடன் உள்ளார். இவ்வாறு டாக்டர் கூறினார்.
Thanks To..........Farook Ashaar

பயணத்தை நிறைவு செய்தது பிளாஸ்டிக் பாட்டில் கப்பல்!

பிளாஸ்டிக் பொருள்களை மறுசுழற்சி செய்து உபயோகிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, முழுவதும் பிளாஸ்டிக் பாட்டில்களால் தயாரிக்கப்பட்ட கப்பல் தனது பயணத்தை நிறைவு செய்து சிட்னி வந்தடைந்தது. "பிளாஸ்டிகி' என்ற பெயருடைய இந்தக் கப்பல் 12,500 பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 18 மீட்டர் நீளம் கொண்டது. நாளுக்கு நாள் பிளாஸ்டிக் பொருள்களின் உபயோகம் அதிகரித்து வருகிறது. இதனால் பிளாஸ்டிக் கழிவுகளும் அதிகரித்து வருகின்றன. நிலம், நீர், காற்று என அனைத்து வாழ்வாதாரங்களையும் பாதிக்கக்கூடிய இந்த பிளாஸ்டிக்கை மறுசுழற்சி முறையில் மீண்டும் உபயோகமான பொருள்களாக மாற்றுவதன் மூலமே பிளாஸ்டிக் பொருள்கள் அதிகரிப்பைத் தடுக்க முடியும். மக்களிடையே இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கடந்த மார்ச் 20-ம் தேதி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கியது பிளாஸ்டிகி.கப்பலில் 6 மாலுமிகள் பயணித்தனர். 130 நாள்கள் பயணத்தின் முடிவில் 14,800 கி.மீ. தூரத்தைக் கடந்து இந்தக் கப்பல் திங்கள்கிழமை சிட்னி துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது. இங்குள்ள கடற்படை அருங்காட்சியகத்தில் அடுத்த ஒரு மாத காலத்துக்கு பிளாஸ்டிகி காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 60 ஆயிரம் டன் பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. பயன்பாட்டுக்குப் பிறகு தூக்கி எறியப்படும் இந்தப் பிளாஸ்டிக்குகள் மக்குவதற்கு பல நூற்றாண்டுகள் ஆகும். நிலப்பகுதி முழுவதும் பிளாஸ்டிக்கால் மூடப்படுவதால், நிலத்தடி நீர் மட்டம் குறைவு, வெள்ளப் பெருக்கு, விளைநிலங்கள் பாதிக்கப்படுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.இதே போன்று, நீர் நிலைகளும் பாதிக்கப்படுகின்றன. ஒவ்வொரு சதுர கி.மீ. கடல் பரப்பிலும் 13,000-க்கும் அதிகமான பிளாஸ்டிக் மாசுகள் கலந்திருப்பதாக ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அழகிய கிரேக்கம் - படங்கள்

மேலும் அழகிய கிரேக்கத்தைக் காண Click Here