Wednesday, January 11, 2012

விளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம்

எப்போதும் துறுதுறுவென விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகமாக இருக்கும் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
விளையாடிக் கொண்டே இருக்கிறான், கொஞ்ச நேரம் கூட உட்கார மாட்டான் என்றும், எப்போதும் துறுதுறுவென எதையாவது செய்கிறான் என்று புலம்பும் பெற்றோரா நீங்கள். அப்படியானால் இந்த ஆராய்ச்சி முடிவு உங்களுக்கு சந்தோஷத்தை அளிக்கும்.
ஆம், நெதர்லாந்தில் உள்ள வ்யூ யூனிவர்சிட்டி மெடிக்கல் சென்டரின் எம்கோ சுகாதார ஆராய்ச்சி நிறுவனம், குழந்தைகளின் உடல் அசைவுகளுக்கும், அவர்களது கல்வித் திறனுக்கும் உள்ள தொடரபு குறித்து ஆய்வு செய்தனர்.
இவர்கள் நேரடியாக குழந்தைகளை இந்த ஆய்வில் பங்கேற்கவைக்காமல், ஏற்கனவே குழந்தைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட ஆய்வுகளை வைத்து இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.
அதாவது அமெரிக்கா, கனடா, தென்னாப்ரிக்கா போன்ற நாடுகளில் எடுக்கப்பட்ட சுமார் 12 ஆய்வுகளின் முடிவுகளைக் கொண்டு குழந்தைகளின் உடல் அசைவுக்கும், அவர்களது கல்வித் திறனுக்கும் நிச்சயம் தொடர்பு உள்ளது என்று கண்டறிந்துள்ளனர்.
இந்த ஆய்வின்படி, எப்போதும் ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள், விளையாட்டில் ஆர்வமே இல்லாமல் சோம்பி உட்கார்ந்திருக்கும் குழந்தைகளை விட கல்வித் திறனில் சிறந்து விளங்குவார்கள்.
ஏனெனில், விளையாடும் போது ஒரு குழந்தையின் உடல் உறுப்புகள் நன்றாக இயங்குகின்றன. இதனால் அவர்களது உடல் உறுப்புகளுக்கு ரத்தம் சீராக பாய்கிறது. இதனால் மூளைக்கு அதிகப்படியான ஆக்ஸிஜன் கிடைக்கிறது. மூளைக்கு அதிகப்படியான ஆக்ஸிஜன் கிடைப்பதால் புதிய நரம்பு செல்கள் உண்டாகின்றன. இதனால் ஓடியாடி விளையாடும் குழந்தையின் கல்வித் திறன் சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
குழந்தைகள் நன்கு ஓடியாடுவதுதான் அந்த குழந்தையின் கல்வித் திறனை அளவிடும் கருவியாகும் என்று இந்த ஆய்வு முடிவு கூறியுள்ளது.
உங்கள் குழந்தை இனி தாராளமாக ஓடியாடி மகிழ்ச்சியாக விளையாட நீங்கள் அனுமதிப்பீர்கள் அல்லவா?