Saturday, June 19, 2010

15 வருடங்களுக்கு முன் காணாமல்போன குழந்தைகளை பேஷ்புக்கில் கண்டுபிடித்த தாய்


15 வருடங்களுக்கு முன் தந்தையால் கடத்திச் செல்லப்பட்ட தனது குழந்தைகளை பேஷ்புக்கின் உதவியுடன் தாயார் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். பிரின்ஸ் செகாலா என்ற பெண்ணின் 2 வயது மகனும் 3 வயது மகளும் 1995ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தனது தந்தையால் கடத்திச்செல்லப்பட்டார்கள்.

எங்கு தேடியும் பிள்ளைகளைக் கண்டுபிடிக்க முடியாத செகாலா மிகவும் மன உளைச்சளுக்கு ஆளானார். சில மாதங்களுக்கு முன்னர் செகாலாவின் கணவர் குழந்தைகள் மெக்சிகோவில் இருப்பதாக தகவல் அளித்தார்.


இதையடுத்து செகாலா தனது குழந்தைகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினார். அவரால் முடியவில்லை. இந்நிலையில்தான் அவருக்கு இந்த யோசனை தோன்றியது, தனது குழந்தைகளின் பெயரை பேஷ்புக்கில் புகுந்து தேடத் தொடங்கினார்.

செகாலா நினைத்தது போல் அவரது மகளின் பெயரைக் கொண்ட ஒரு பெண் இருந்தார், முதலில் அவருடன் நண்பராகப் பழகினார் செகாலா. இந்த நட்பின் மூலம் அந்த பெண்ணின் குடும்பப் படத்தைப் பார்த்தார். பார்த்தவருக்கு பெரும் மகிழ்ச்சி. அந்த பெண்தான் தனதுமகள் என்பதை அறிந்துகொண்டார்.

ஆனால், இதையறிந்த செகாலாவின் மகள் இதற்காகச் சந்தோசப்படாமல் தனது தாயாருடனான உறவை முறித்துக் கொண்டார். பேஷ்புக்கின் பக்கங்களையும் பார்வையிடமுடியாதவாறு மறைத்துவிட்டார். எனினும் சோர்வடையாத செகாலா காவல்துறையில் புகார் செய்தார்.

இதனை விசாரித்த காவல்துறையினர் செகாலாவின் கணவரை கடந்த மாதம் 26ம் திகதி கைது செய்தனர். தற்போழுது செகாலாவின் 16 வயது மகனும், 17 வயது மகளும் மீட்கப்பட்டு புளோரிடாவில் உள்ள ஒரு குழந்தைகள் நலக் காப்பகத்தில் உள்ளனர். இந்த வழக்கு பற்றிய விசாரணை களிபோர்னியாவிலுள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

நன்றி,தமிழ்க்கதிர்

மனிதர்கள் உருவாக்கிய முதல் சாய்ந்த கோபுரம் கெபிட்டல் கேட்: கின்னஸ் சாதனையில் பதிவு


அபுதாபியில் கட்டப்பட்டுள்ள'கெபிட்டல் கேட்'என்ற 160 மீட்டர் உயரமுடைய கட்டடம், மனிதர்களால் உருவாக்கப்பட்ட உலகின் முதன்மையான சாய்ந்த நிலை கோபுரம் என்ற சாதனைக்காக, கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் தான், உலகிலேயே மிகவும் சாய்வாக உள்ள கோபுரம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்தச் சாதனையை முறியடிக்கும் வகையில், ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள அபுதாபியில், அபுதாபி நேஷனல் எக்ஸிபிஷன் நிறுவனம் சார்பில், சாய்ந்த நிலையிலான கட்டடத்தை கட்டும் பணி தொடங்கப்பட்டது.

இதற்கு 'கெபிட்டல் கேட்'எனப் பெயரிடப்பட்டது. 160 மீட்டர் உயரமுடைய இந்த கட்டடம், 35 மாடிகளை கொண்டது.

இந்த கட்டடம், 18 டிகிரி அளவுக்கு சாய்ந்த நிலையில் கட்டப்பட்டுள்ளது. இது, பைசா கோபுரத்தின் சாய்மானத்தை விட நான்கு மடங்கு அதிகம். (பைசா கோபுரத்தின் சாய்மானம் 3.99 டிகிரி). இந்த கட்டடத்தின் 12 மாடிகள் செங்குத்தாக உள்ளன.

அதற்கு அடுத்த நிலையில் உள்ள மாடிகள், படிப்படியாக சிறிய அளவில், சாய்ந்த அளவில் கட்டப்பட்டுள்ளன. கடந்த ஜனவரியில் இந்த கட்டடத்தின் வெளிப்புறத் தோற்றம் கட்டி முடிக்கப்பட்டபோது, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.

இதைக் கட்டுவதற்கு, 10 ஆயிரம் தொன் இரும்பு பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஐந்து நட்சத்திர ஓட்டல் மற்றும் அலுவலகங்கள் இதில் இயங்கவுள்ளன. இந்தாண்டு இறுதிக்குள், இந்த கட்டடத்தின் பணிகள் முழுமையாக நிறைவு பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி,வீரகேசரி

உயிர் குடிக்கும் அழகுப் பொருள்கள்..!

மனிதர்கள் மத்தியில் அழகாக இருந்தாலே, தனிப் பெருமைதான். நாம் அழகை மதிக்கிறோம், ரசிக்கிறோம், பாரட்டுகிறோம். எல்லாம் இந்த செவத்த தோலுக்குத்தாங்க.. அழகாகத் திகழ, பல முயற்சிகள் எடுக்கிறோம். அதனால் இயற்கை, செயற்கையாக மூலிகைப் பொருட்கள் என்ற பெயரில் பல வேடங்களில் நம்மிடையே உலவி வருகின்றன. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாய் அழகுபடுத்த பல பொருள்களை முன்னோர்கள் பயன்படுத்தி இருக்கின்றனர்.

எகிப்தியர்கள், கி.மு. 4,000 ஆண்டுகளுக்கு முன்பே முகப்பூச்சில் காரியபொடி கலந்தும், உடல், தலை, கை, கால் என பல்வேறு உறுப்புகளில் பல வகை வாசனைப்பொடி, வாசனை திரவியங்கள், வாசனை எண்ணெய் பயன்படுத்தியும் இருக்கின்றனர். ஐரோப்பியர்கள் கி.பி.1100களிலிருந்து அழகுப்பொருட்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால், 1900லிருந்துதான் ஷாம்புவும், முகப்பவுடரும் அதிகமாக புழக்கத்திற்கு வந்தன. அமெரிக்க சுற்றுச்சூழல் நிறுவனம் ஒன்று சுமார் 8,000 அழகு சாதனப் பொருட்களில் உள்ள 10,500 மூலப்பொருட்களை மட்டும், சுமார் 6 மாத ஆய்வும், மதிப்பீடும் செய்தன. அவைகளில் மூழ்கியுள்ள உண்மைகள் நம் நெஞ்சை பதற வைக்கின்றன.

நாம் அதிர்ச்சியில் உறைந்து போகிறோம். அவைகளில் பல்வேறு தனிமங்கள் உள்ளன. எந்தத் தீங்கும் விளைவிக்காது என நாம் எண்ணும் சோடியம் குளோரைடு முதல் அதாங்க, நம்ம சோத்து உப்பு.. புற்றுநோயை உண்டுபண்ணும் காரணிகள் வரை ஏராளமான வேதிப்பொருட்கள் உள்ளன. ஆண்டுக்கு, சுமார் 35,000,000 டாலர் (16,450 கோடி ரூ) சம்பாதிக்கும் அழகுப் பொருட்கள் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனங்கள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி இயங்குகின்றன. ஒட்டுமொத்தமாய் வெறும் 28 பொருட்கள் மட்டுமே முழுமையாய் மதிப்பீடு செய்யப்படுகின்றன.

மீதமுள்ள 99.9 % பொருட்களின் மூலப்பொருட்கள் பற்றி உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பவையா என்று எவ்வித பரிசோதனையும் செய்வதில்லை. இவை உடல் நலப் பொருட்களின் கீழும் வருவதில்லை, உண்ணும் பொருட்களின் கீழும் வருவதில்லை என்பதே இதன் காரணம். உங்கள் கைகளில் தவழும் பொருட்களில் 100 பொருட்களுக்கு ஒன்றிலாவது, புற்றுநோய் உருவாக்கும் காரணிகள் இருப்பதை தரச் சான்றுகள் நிரூபித்து உள்ளன.

இருந்தும் அரசுகளும் பாராமுகமாக உள்ளதுதானே வேதனை..! அழகு சாதனப்பொருட்களில் காணப்படும் நிலக்கரிதார், பென்சைல் ஊதா, பார்மால்டிஹைடு, காரிய அசிடேட், புரோஜெஸ்டிரான், செலினியம் சல்ஃபைடு, நைட்ரோஃப்ளூரோசான் சிலிகா போன்றவை புற்றுநோய்க் காரணிகளாகும். நம் உடல் மேல் தடவும் பொருட்களில் 51% தோலுக்குள் நுழைந்து, இரத்தில் கலந்து உடலுக்கு தீங்கு விளைவிப்பவை. நகப்பூச்சில் உள்ள டை பியூடைல் ஃப்தாலேட் என்ற வேதிப்பொருள் ஆண் இனப்பெருக்க உறுப்புகளைத தாக்குகிறது. ஐரோப்பியா இதனை தடை செய்துள்ளது.

ஹேர் டை, முகம் வழுவழுப்பாக்கும் மாஸ்டரைசர், வயதானவர்களுக்கு சுருக்கம் நீக்கும் கிரீம் , பரு சிகிச்சைப் பொருள், முகச் சவரப் பொருள், நக சிகிச்சை, ஷாம்பூ, முடி உதிர்வு கிரீம், ஒப்பனைக்கு அடியில் தடவும் பொருள், முக சுத்திகரிப்புப் பொருள் என 10 பொருட்கள், டாப் 10 உயிர் குடிக்கும் பொருட்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. பருவமடைந்த ஒவ்வொருவரும், மேலே குறிப்பிட்ட பொருட்களில் குறைந்தது 5 பொருட்களையாவது பயன்படுத்துகின்றனர்.

மேலே சொல்லப்பட்டது, புற்றுநோய்க் காரணிகள் மட்டுமே. மற்ற ஒவ்வாமை, கண் குருடு, கொப்புளம், எரிச்சல், வீக்கம் பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை. இந்தியாவில் அழகுப் பொருட்கள் பற்றிய மதிப்பீடோ, கணக்கெடுப்போ காணப்படவில்லை என்பது வெட்கக்கேடான விஷயம்தான். அரசுக்கு அம்புட்டுதான், வோட்டுப்போடும் குடிமகன்கள் மீது அக்கறை..!

நன்றி,தமிழ் CNN

மூன்று சிம் போன்

3ஜி இணைந்த நெட்புக் கம்ப்யூட்டர் மற்றும் ஆலிவ் பார் எவர் ஆன் என்ற இருவகை சிம்களை ஏற்றுக் கொள்ளக் கூடிய மொபைல் போனையும் விற்பனைக்கு அறிமுகப்படுத்திய ஆலிவ் டெலிகம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ஆலிவ் விஸ் (Olive Wiz) என்ற சோஷியல் நெட்வொர்க் மொபைல் போன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மூன்று (2 ஜி.எஸ்.எம். + ஒரு சி.டி.எம்.ஏ) சிம்களை இணைத்துப் பயன்படுத்தலாம்.

இதில் ஆப்பரா மினி பிரவுசர் தரப்பட்டுள்ளது. ஒரு கிளிக் மூலம் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களுகுச் செல்லலாம்; பிரவுசிங் மேற்கொள்ளலாம். குவெர்ட்டி கீ போர்டு உள்ளது. எளிதாக இமெயில்களைக் கையாள இது உதவுகிறது. ஒரு மொபைல் போனில் காணப்படும் அனைத்து அடிப்படை வசதிகளுடன், 2 மெகா பிக்ஸெல் கேமரா, 4 ஜிபி வரை அதிகப்படுத்தக்கூடிய எஸ்.டி.கார்ட் ஸ்லாட்,2.2 அங்குல வண்ணத் திரை, இமெயில் பிரவுசிங், WAP/MMS/GPRS தொழில் நுட்ப வசதிகள், ஸ்டீரியோ ஹெட்செட், ஸ்பீக்கர் போன்,எப்.எம். ரேடியோ ஆகியவை உள்ளன. இதன் விலை இந்திய ரூ.6,000க்கும் குறைவாகத்தான் இருக்கும் என இதனைத் தயாரித்த நிறுவனம் அறிவித்துள்ளது.

நன்றி,தமிழ் CNN

மனித உருவில் ஆட்டுக்குட்டி

ஆத்தூர் அருகே, மனித உருவில் இறந்தே பிறந்த ஆட்டுக்குட்டியை ஏராளமானோர் பார்த்து வியந்தனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சி பைத்தூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல். 50க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார்.

நிறைமாத சினையாக இருந்த ஆடு, நேற்று அதிகாலை 5 மணியளவில் கடும் சிரமத்துடன் குட்டியை ஈன்றது. பிறந்த ஆட்டுக் குட்டி மனித உருவத்தில் இறந்தே பிறந்ததை கண்ட வெற்றிவேல் அதிர்ச்சியடைந்தார். ஆட்டுக் குட்டியின் உடலில் முடிகள் இல்லை. ரப்பர் பொம்மை குழந்தை போல காணப்பட்டது.

தகவலறிந்த அப்பகுதியினர், அதிசய ஆட்டுக் குட்டியை வியப்புடன் பார்த்துச் சென்றனர். கால்நடை மருத்துவ ஆய்வாளர் சேகரன், ஆட்டுக்குட்டியின் உடலை ஆத்தூர் கால்நடை மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு எடுத்து சென்றார். கால்நடை மருத்துவர் தேவேந்திரன் கூறியதாவது: ஒரே வகையான கிடா ஆடு மூலம் பெட்டை ஆடுகளுக்கு இனவிருத்திக்காக கருவூட்டல் செய்கின்றனர். மரபணு கோளாறு காரணமாக உடல் முழுவதும் நீர் நிரம்பி, ரப்பர் போன்ற குட்டி பிறந்துள்ளது.

ஆடு சினை பிடிப்புக்கு வேறு கலப்பின கிடாவை பயன்படுத்த வேண்டும். மனித இனத்தில் நெருங்கிய உறவு முறையில் திருமணம் செய்தால் குறைபாடு உள்ள குழந்தைகள் பிறப்பது போல, ஆடுகளுக்கும் இனவிருத்தியில் குறைபாடு ஏற்படும். ஆத்தூரில் பிறந்த ஆட்டுக் குட்டி மனித உருவத்தில், ரப்பர் குழந்தை போல் உள்ளதால் பரிசோதனை செய்யவுள்ளோம். இவ்வாறு தேவேந்திரன் கூறினார்.

நன்றி,தினமலர்

உலகின் மிக குளிர்ந்த, மிக வறண்ட இடம் கண்டுபிடிப்பு!

உலகின் மிகச் சிறந்த வான் ஆராய்ச்சி மையத்திற்கான தேடலில் கிடைத்ததென்னவோ உலகின் மிக குளிர்ந்த, மிக வறண்ட, மிக அமைதியான, இதுவரை எந்த மனிதனின் காலடியும் படாத ஒரு இடம். வான் ஆராய்ச்சிக்கான மிக கச்சிதமான இடத்தினை தேர்வு செய்ய புறப்பட்ட அமெரிக்க- ஆஸ்திரேலிய ஆராய்ச்சி குழு ஒன்று இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது.


வான் ஆராய்ச்சியை பாதிக்கும் மேகமூட்டம், சீதோஷ்ணம், நீராவி, வெளிர்ந்த வானம், வேக காற்று மற்றும் வளிமண்டல சுருள்கள் போன்றவற்றினை பற்றி ஆராய இந்த குழு திட்டமிட்டிருந்தது. பூமி உருண்டையின் அடிமட்டத்தில் அண்டார்டிகா கண்டத்தின் ஓர் பீடபூமியில் 13297 அடி (4053 மீட்டர்) உயரத்தில் அமைந்த அப்படியான ஒரு இடத்திற்கு அவர்கள் ரிட்ஜ் எ (Ridge A ) என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த இடத்தில் சராசரி குளிர்கால வெப்பநிலை மைனஸ் 70 டிகிரி செண்டிக்ரட் எனவும்காற்றின் ஈரப்பதம் மிகவும் குறைவு எனவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. "இங்கே மிகவும் அமைதியாக இருக்கிறது. காற்று வீசுதல் மற்றும் சீதோஷ்ண மாற்றம் என்பதே கிட்டத்தட்ட கிடையாது" என்று இந்த ஆராய்ச்சி குழுவின் தலைவர் வில் சான்டேர்ஸ் தெரிவித்தார்.

இந்த கூறுகள் அனைத்தும் மிகச்சிறந்த ஒரு வான் ஆராய்ச்சி மையம் ஒன்றிற்கான அடித்தளத்தினை அமைக்கிறது. இங்கிருந்து எடுக்கப்படும் வான் ஆராய்ச்சிப் புகைப்படங்கள் உலகின் சிறந்த ஆராய்ச்சியாளர்களால் எடுக்கப்படும் வான் ஆராய்ச்சி புகைப்படங்களை விடவும் குறைந்த பட்சம் மூன்று மடங்கு துல்லியமாக இருக்கும் என்றும், இங்கு வானம் மிகவும் தனது இயல்பு கரு நிறத்திலும், வறண்டும் இருப்பதால் ஒரு சாதாரண தொலைநோக்கி (telescope) என்பது இங்கே உலகின் மிகச்சிறந்த ஒரு தொலைநோக்கியை போன்ற வீச்சுடன் இருக்கும் என்றும் சாண்டர்ஸ் மேலும் தெரிவித்தார்.

நன்றி,இந்நேரம்

கூகுள் காலண்டர்

கிளவுட் கம்ப்யூட்டிங் குறித்து இப்போது அதிகம் பேசப்படுகிறது. இணைய தளம் மூலமாக, நாம் இணையத் தொடர்பில் இருந்தவாறே, புரோகிராம்களைப் பயன்படுத்தி, நம் செயல்பாடுகளை மேற்கொள்வதே கிளவுட் கம்ப்யூட்டிங். இந்த வசதிகளை நமக்குத் தருவதற்கு, சர்வர்களை நிறுவி சேவை செய்திடும் நிறுவனங்கள், நம்மிடம் கட்டணம் பெறுகின்றன. சிறிய சில உதவிகளை, சேவைகளைத் தருவதற்குப் பல நிறுவனங்கள் நம்மிடம் கட்டணம் வாங்காமலேயே இயங்குகின்றன. ஆன்லைன் ஸ்டோரேஜ், ஆன்லைன் கன்வர்டர்கள் போன்றவை இந்த கிளவுட் கம்ப்யூட்டிங் வகையைச் சேர்ந்தவை தான்.

Google Calendar

இந்த வகையில் கூகுள் வெகு நாட்களாக பல சேவையினைத் தந்து வருகிறது. அவற்றில் மிகவும் பயனுடையதும், இன்றைய காலத்திற்குத் தேவையானதுமான ஒன்று, கூகுள் காலண்டர். இது வெறும் நிகழ்வுகளைக் குறித்து வைத்துச் செயல்படும் காலண்டர் மட்டுமின்றி, இதன் சேவை இப்போது மொபைல் போனையும் இணைத்து நமக்குக் கிடைக்கிறது என்பது பலருக்குத் தெரிவதில்லை. இந்த இலவச சேவையை எப்படிப் பெறுவது என்று பார்க்கலாம்.

1. இதற்கு முதல் தேவை ஜிமெயிலில் ஒரு அக்கவுண்ட். பின் இதனைப் பயன்படுத்தி கூகுள் காலண்டர் தளத்திற்குச் செல்லவும். அதில் செட்டிங்ஸ் (Settings) என்பதில் கிளிக் செய்திடவும்.

2. அதன்பின் அங்கு கிடைக்கும் டேப்களில் மொபைல் செட் அப் டேப்பில் (Setup) கிளிக் செய்திடவும்.

3. இதில் உங்கள் மொபைல் எண்ணை என்டர் செய்திட வேண்டும். அதன் பின் Send Verification Code என்பதில் கிளிக் செய்து காத்திருங்கள். உங்கள் மொபைல் போன் எண் சோதனை செய்யப்பட்டு அந்த போனுக்கு ஒரு மெசேஜ் அனுப்பப்படும். சில நொடிகளில் கிடைக்கும் இந்த செய்தியில் Your Google calendar verification code is என ஒரு எண் தரப்படும். இதுதான் உங்கள் கூகுள் காலண்டர் அக்கவுண்ட்டுக்கான பாஸ்வேர்ட்.

Google Calendar

அடுத்து கூகுள் காலண்டரில் வரும் நாட்களுக்கான நிகழ்வுகளை முன் கூட்டியே குறித்து வைக்கலாம். எடுத்துக் காட்டாக மே மாதம் 22 அன்று, மாலை 5 மணிக்கு ஒரு திருமண வரவேற்பில் கலந்து கொள்ள வேண்டும் என்றால், அதனைச் சுருக்கமாக எழுதி வைக்கலாம். இது குறித்த செய்தி உங்களுக்கு அந்த நாளில், நிகழ்ச்சிக்கு எவ்வளவு நேரம் முன்னால் உங்கள் போனுக்கு எஸ்.எம்.எஸ். ஆகவும், இமெயிலுக்கு செய்தியாகவும் அனுப்பப்பட வேண்டும் என்பதனைக் குறிக்கலாம். 30 நிமிடத்திற்கு முன் அல்லது ஒரு நாளுக்கு முன் எனக் குறித்தால், சரியான அந்த நேரத்திற்கு உங்களுக்கு எஸ்.எம்.எஸ். செய்தி கிடைக்கும். ஜிமெயிலுக்கு இமெயில் செய்தி அனுப்பப்படும்.

உங்கள் கூகுள் காலண்டரில் குறித்து வைத்த தகவல்களை நீங்கள் மட்டும் பார்க்குமாறு வைக்கலாம். அல்லது உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தெரிந்துகொள்ளுமாறும் செட் செய்திடலாம்.
இதனால் உங்கள் நாட்குறிப்பினை நீங்கள் எங்கிருந்தாலும், இணையத்தில் மூலம் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கு ஒன்றும், வர்த்தக மற்றும் அலுவலக நடவடிக்கைகளுக்கு ஒன்றும், நண்பர்களுக்காக ஒன்றும் என எத்தனை காலண்டர்களை வேண்டுமானாலும் வடிவமைத்து வைத்துக் கொள்ளலாம். இந்த காலண்டரிலேயே தேடல் வசதி தரப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி என்று நடைபெற உள்ளது என மறந்து விட்டால், இதன் மூலம் தேடி அறியலாம்.

இது ஒரு இணைய வழிச் செயல்பாடு என்பதால், எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டரிலும் இதனைக் காணலாம். அதே போல எந்த பிரவுசர் வழியாகவும் பெறலாம்.

இந்த சேவை முழுவதும் இலவசமே. கட்டணம் இல்லை என்பது இதன் சிறப்பு. இதனை ஒரு முறை பயன்படுத்தினால், தொடர்ந்து உங்கள் அன்றாட வாழ்க்கையில், உங்களை வழி நடத்தும் நம்பிக்கையான நண்பனாக கூகுள் காலண்டர் மாறுவதனைக் காணலாம். கூகுள் காலண்டர் செட்டிங்ஸ் அமைப்பில் லேப்ஸ் என்பதைக் கிளிக் செய்து, இன்னும் என்ன வழிகளில், கூகுள் காலண்டரை நம் உற்ற வழிகாட்டியாக மாற்றலாம் என்பதனைத் தெரிந்து கொள்ளலாம்.

நன்றி,www.delfttamil.com