Thursday, July 22, 2010

Congratulatios to Murali- 800 Test wickets World Record




இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி பெரும் சாதனையை ஈட்டியுள்ளார். இச்செய்தி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர் இந்த சாதனையை பெறுவதற்காக சற்று முன்னர் 800 வது விக்கெட்டாக இந்திய வீரர் பி.பி.ஓஜாவை வீழ்த்தி வெளியேற்றினார். இது அவர் விளையாடுகின்ற 133 வது டெஸ்ட் போட்டியாகும். இரண்டு இன்னிங்ஸ்களிலும் மொத்தம் எட்டு விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.
அவரது சாதனையை பற்றி ரசிகர்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் அவர் இன்றைய டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கு விடை கொடுப்பது அனைவரது மனதிலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
காலியில் நடைபெறும் இலங்கை-இந்தியா வீரர்களுக்கு இடையில் நடைபெற்று வருகின்ற டெஸ்ட் போட்டியின் 5வது நாளான இன்று முரளிதரன் பெற்றுள்ள சாதனை இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டும்.
அதேவேளை குறித்த டெஸ்ட் போட்டியுடன் விடைபெறும் முரளிதரனுக்கு இப்போட்டியில் வெற்றி பெற்று அதை பரிசாக வழங்குவோம் என இலங்கை அணித் தலைவர் சங்கக்கார தெரிவித்திருந்தார். அதன்பிரகாரம் தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இலகுவாக வெற்றிபெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 18ம் திகதி தொடங்கிய போட்டியின் 2ம் நாள் மழை காரணமாக விளையாட்டு நடைபெறாத போதிலும் 3ம் நாள் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 520-8 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.
அதையடுத்து இந்திய அணி துடுப்பெடுத்தாடி 276 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்த நிலையில் திரும்பவும் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இந்திய அணி போட்டியின் இறுதிநாளான இன்று சற்றுமுன்னர் 338 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
சற்று முன்னர் காலியில் நடைபெற்றுவந்த இலங்கை இந்திய டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று ஓய்வுபெறும் முரளிதரனுக்கு பரிசுப்பொருளாக இந்த வெற்றியை வழங்கியுள்ளனர்.
ஜனாதிபதி நினைவுப் பரிசில் ஒன்றை வழங்கி முரளியின் மகத்தான சாதனையை பாராட்டினார். போட்டி முடிந்த பின்னர் இன்று மாலை அவருக்கு மாபெரும் விழா காலியில் எடுக்கப்படுகின்றது.
முரளிதரன் இது வரை 132 டெஸ்ட் போட்டிகளை ஆடி உள்ளார். அதே போல் 334 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 512 விக்கெற்றுகளையும் வீழ்த்தி உள்ளார். முரளிதரன் இன்று மைதானத்தில் ஆடச் சென்றபோது அவருக்கு செங்கம்பள வரவேற்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




வாயில் வாழும் பாக்டீரியாக்கள்.

நமது அனுமதி இல்லாமலேயே நம்முடைய வாயில் 600 விதமான பாக்டீரியாக்கள் உயிர்வாழ்கின்றன என்றால் நம்பமுடிகிறதா? நமது உடலில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கை உடல் செல்களின் எண்ணிக்கையைப்போல் பத்துமடங்கு அதிகம் என்பது இன்னும் வியப்பானது இல்லையா?
ஆம். அதுதான் உண்மை. உங்களுடைய வாயில் உள்ள பாக்டீரியா குடும்பமும் உலகின் வேறொருபகுதியில் வாழும் இன்னொருவரின் வாயில் வாழும் பாக்டீரியா குடும்பமும் ஒன்றுபோல் இருப்பது என்பது அதைவிட வியப்பானது. உலகம் முழுவதிலுமிருந்து மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தபிறகு இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.
மனிதனின் சிறுகுடலிலும், தோலிலும் குடியிருக்கும் பாக்டீரியாக்கள் பற்றியே இதுவரை ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு வந்தன. இப்போது மனிதனின் வாயில் வாழும் பாக்டீரியாக்களைப்பற்றி ஆய்வாளர்களின் கவனம் திரும்பியிருக்கிறது. நோய்களின் நுழைவுப்பாதை வாய் என்பதால் இந்த ஆய்வு இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது.
ஜெர்மனியின் மாக்ஸ்ப்ளங்க் இன்ஸ்டிடியூட் பேராசிரியர் டாக்டர் மார்க் ஸ்டோன்கிங் என்பவரும் அவரது குழுவினரும் உலகம் முழுவதிலும் இருந்து உமிழ்நீர் மாதிரிகளை சேகரித்து வகைப்படுத்தி ஆராய்ந்து வருகின்றனர். ஆரோக்கியமான 120 நபர்கள் புவிப்பரப்பின் ஆறு வேறுபட்ட இடங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களிடமிருந்து உமிழ்நீர் மாதிரிகள் திரட்டப்பட்டன. செல்லின் முக்கியமான பகுதிப்பொருளாகிய ரிபோசோம்களில் உள்ள 16S rRNA ஜீன்களில் புதைந்துள்ள ரகசியங்களை வெளிக்கொணரும் ஆய்வுகளை ஸ்டோன்கிங் குழுவினர் தற்போது நடத்திவருகின்றனர். வாயில் வாழும் பாக்டீரியாக்களிடையே உள்ள வேறுபாடுகளையும் உணவுப் பழக்கம், சுற்றுச்சூழல், உடல்நலம் மற்றும் நோய்கள் இவற்றுடன் உள்ள தொடர்பையும் இன்னும் ஆராய வேண்டியுள்ளது. உணவு, கலாச்சாரம் இவற்றிடையே மனிதர்களிடம் வேறுபாடு இருந்தாலும் அவர்களுடைய வாயில் வாழும் பாக்டீரியாக்களிடையே ஒத்தகுணம் இருப்பதைக் கண்டு ஸ்டோன்கிங் வியக்கிறார்.
உமிழ்நீரை ஆராய்தல் என்பது முகம் சுளிக்கவைக்கும் செயல் என்றாலும், நம்முடைய வாயில் யார் குடியிருக்கிறார்கள் என்பதும் அவர்களுடைய குணாதிசயங்கள் என்ன என்பதையும் நாம் தெரிந்துகொள்வது முக்கியமில்லையா? நம்முடைய பிள்ளைகள் கைசுத்தமாகவும், வாய்சுத்தமாகவும் வாழவேண்டியது அதைவிட முக்கியமில்லையா?

பேஸ்புக்கின் இலக்கு.

  பிரபல சமூகவலைப்பின்னல் தளமான பேஸ்புக் 500 மில்லியன் பாவனையாளர்கள் என்ற இலக்கினை அடையவுள்ளதாகவும் அவ்வறிவிப்பை பெரும்பாலும் இந்த வாரம் மேற்கொள்ளுமெனவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இத் தொகையானது உலக சனத்தொகையின் 8% வீதமாகும்.
இம் மைல்கல்லை கொண்டாடும் வகையில் ” பேஸ்புக் கதைகள் ” எனும் விசேட கதைத் தொகுப்பையும் அவ் வலையமைப்பு வெளியிடவுள்ளது. மேற்படி தொகுப்பானது பாவனையாளர்களின் வாழ்க்கையை பேஸ்புக் எவ்வாறு மாற்றியுள்ளது என்பது தொடர்பிலான விடயங்களை உள்ளடக்கியுள்ளது.
அனைத்து பாவனையாளர்களும் தங்கள் கதைகளை சமர்ப்பிக்கமுடியும். பாவனையாளர்களால் விரும்பப்படும் அதிகமான கதைகள் இத்தொகுப்பினுள் உள்ளடக்கப்படும். பேஸ்புக் தனது வலையமைப்பினை 150 மில்லியன் பேர் கையடக்கதொலைபேசிகள் மூலம் உபயோகிப்பதாக சமீபத்தில்அறிவித்திருந்தது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பேஸ்புக் வலையமைப்பின் சந்தைப்படுதல் இயக்குனர், இது தாம் ஏற்கனவே எதிர்பார்த்தவொன்றெனவும் , இதை வேறு வேறுவிதமாக கொண்டாட எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
பேஸ்புக் சமூகவலைப்பின்னல் தளமானது 2004ம் ஆண்டு மார்க் ஸுக்கர்பேர்க் என்பவரினால் அவரது சக மாணவர்களான எடுயுரடொ சவெரின் , டஷ்டின் மொஸ்கொவிட்ஷ் மற்றும் கிரிஷ் ஹக்ஷ் ஆகியோரின் உதவியுடன் உருவாக்கப்பட்டதாகும்.
Thanks To.....KKY.