Saturday, February 25, 2012

குப்பை அள்ள ஒரு செயற்கைக்கோள்

விண்ணில் பரவிக்கிடக்கும் ரொக்கெட், செயற்கைகோள் சிதறல்கள் மற்றும் கழிவுகளை அகற்ற சுவிட்சர்லாந்து புதிய செயற்கைகோள் ஒன்றை உருவாக்கி வருகிறது. ‘ஜனிடர்’ என ( “janitor satellite”  ) பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைகோள் 11மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் லவுசான் மாநிலத்தில் உள்ள சமஷ்டி தொழில்நுட்ப நிலையத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த செயற்கைகோள் இன்னும் 3 அல்லது 5 ஆண்டுகளில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ரொக்கெட் மற்றும் செயற்கைகோளின் உடைந்த 5 லட்சம் சிறு துண்டுகள் விண்ணில் சிதறிக் கிடப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது.


விண்வெளியை துப்பரவு செய்வதற்கான இந்த இயந்திரம் ஒரு வேக்கூம் கிளீனர் மாதிரி செயற்படும். வான் குப்பைகளை அள்ள வேக்கூம் கிளீனருடன் சுவிஸ் வருவது குறித்து நிச்சயமாக பல நகைச்சுவை கருத்துக்கள் வரலாம்.
ஆனால் இந்த விசயம் ஒன்றும் அவ்வளவு நகைச்சுவையான விசயம் அல்ல. இது மிகவும் முக்கியமான ஒரு விசயம். பூமியையும் எமது நாட்டையும் நாம் சுத்தமாக வைத்திருப்பது போல விண்வெளியையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்கிறார்கள் சுவிஸ் விஞ்ஞானிகள்.
பல்லாயிரக் கணக்கான கைவிடப்பட்ட பொருட்கள் பூமியை சுற்றி வந்துகொண்டிருக்கின்றன. சரியாக எவ்வளவு பொருட்கள் அவ்வாறு இருக்கின்றன என்று எவருக்கும் கணக்கு எதுவும் இதுவரை தெரியாது. இவற்றில் பழைய செய்மதிகள், சர்வதேச வெண்வெளி ஆய்வு கூடத்தில் இருந்து வீசப்பட்ட பொருட்கள், விண் ஓடங்கள் ஆகியவை அடங்கும். இவை ஒரு மணி நேரத்துக்கு இருபத்தெட்டாயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் சுற்றிக்கொண்டிருக்கின்றன.

இந்த குப்பைகளும், துண்டுகளும் பூமியைச் சுற்றவரும் செய்மதிகளுக்கும், ஆட்கள் பயணிக்கும் விண் ஓடங்களுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தலாம்.
தற்போது இவற்றை அகற்றுவதற்காக சுவிஸ் லௌசான் மாநிலத்தில் உள்ள விண்வெளி மையம் தன்னியங்க கருவி  மூலம் இயக்கக் கூடிய ஒரு இயந்திரத்தை அறிவித்திருக்கிறது. அந்த குப்பைகளை அங்கே பெருக்கியெடுத்து அவற்றை பூமிக்கு கொண்டுவரும் போதே எரியச் செல்வது ஒரு வழி. அல்லது அவற்றை அங்கிருந்து பூமிக்கு கொண்டு வந்து இங்கே அவற்றை எரிப்பது இரண்டாவது வழி. இவை இரண்டு குறித்தும் தாம் ஆராய்வதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

பத்து மில்லியன் டொலர்கள் பெறுமதியான இந்த விண்வெளியை சுத்தம் செய்யும் திட்டம் இன்னமும் மூன்று முதல் ஐந்து வருடங்களில் ஆரம்பமாகும் என்று அந்த மையத்தின் இயக்குனர் வோல்க்கர் காஸ் கூறியுள்ளார்.
Thanks To Lankanow.