Thursday, July 29, 2010

ஜோர்ஜ் வோஷிங்டன் அணு குண்டு தாங்கிய கப்பல்.

இளைஞர்கள் தற்கொலை எண்ணிக்கை தென்னிந்தியாவில் அதிகம்!



உலகிலேயே இளம் வயதில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை தென்னிந்தியாவில் அதிகம் என்று ஊடகவியாளருக்கான மனநல விழிப்புணர்வு கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டு‌ள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு லட்சம் பேருக்கு 11 பேர் என்ற விகிதத்தில் தற்கொலை செய்து கொள்கின்றனர். நாட்டின் மொத்த எண்ணிக்கையில் சென்னை 3ஆ‌ம் இடத்தில் இருப்பதாகவும், இங்கு தற்கொலை செய்துகொள்வோரின் விகிதம் 11 விழுக்காடு எனவும் மனநல மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஊடகவியாளருக்கான மனநல விழிப்புணர்வு கருத்தரங்கு நே‌ற்று சென்னையில் நடைபெற்றது. மத்திய அரசின் பத்திரிகைத் தகவல் அலுவலகமும், மனச்சிதைவு நோய் ஆராய்ச்சி நிறுவனமும் (ஸ்கார்ஃப்) இணைந்து ஏற்பாடு செய்திருந்த இக்கருத்தரங்கில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற மனநல மருத்துவரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான டாக்டர் சாரதா மேனன் சிறப்புரையாற்றினார்.
மனநலம் குறித்த சரியான புரிதலுடன் ஊடகங்கள் செய்திகளை வெளியிட வேண்டும் என்ற கேட்டுக்கொண்ட அவர், பொது மக்களிடம் மனநலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஊடகங்கள் முக்கிய பங்காற்ற இயலும் என்று தெரிவித்தார். மனச்சிதைவு உள்ளிட்ட மனநோய்களை முற்றிலும் குணப்படுத்த முடியும் என்று கூறிய டாக்டர் சாரதா மூட நம்பிக்கைகளை கைவிட்டு அறிவியல் பூர்வமாக இதனை அணுக வேண்டும் என்று கூறினார்.
உரிய மருத்துவரின் ஆலோசனைகளுடன் சரியான மருந்துகளை உட்கொண்டால் மனநலம் பாதித்தவர்களை குணப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார். மனநோய்களால் பாதிக்கப்பட்டவர்களை திரைப்படங்கள் சரியான கோணத்தில் சித்தரிக்க வேண்டும், ஆக்கபூர்வமாக அணுக வேண்டும் என்றும் டாக்டர் சாரதா தெரிவித்தார்.
கருத்தரங்கில் துவக்க உரையாற்றிய அபிராமி ராமநாதன், மனச்சிதைவு நோயால் ஒருவருக்கு ஏற்படும் பாதிப்புகளை நேரடியாக பார்த்த அனுபவம் தனக்கு உண்டு என்றும் சரியான மருத்துவ சிகிச்சையும், குடும்பத்தினரின் அன்பும் அரவணைப்பும் மனநோயாளிகளுக்கு தேவை என்றும் எடுத்துரைத்தார்.
கருத்தரங்கில் உரையாற்றிய பத்திரிகைத் தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் க.மா.ரவீந்திரன், இன்றைய அவசர உலகில் மக்களை பெரிதும் பாதிப்பது மன அழுத்தமும், அதன் விளைவுகளும் தான் என்று கூறினார். மனநலம் தொடர்பான விழிப்புணர்வு செய்திகளை ஊடகங்கள் தொடர்ந்து வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஸ்கார்ப் அமைப்பு வருடம் தோறும் “ஃப்ரேம் ஆஃப் மைன்ட்” என்ற மனநலம் தொடர்பான விழிப்புணர்வு திரைப்பட விழாவை நடத்தி வருவதாகவும், ஐந்து நிமிடங்களுக்குள் மனநலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் குறும்படங்களுக்கு பரிசுகள் வழங்கப்படுவதாகவும் இந்த அமைப்பின் இயக்குனர் டாக்டர் தாரா தெரிவித்தார். ‘மனநல குறைபாடு மற்றும் நோய்களை தீர்ப்பதில் குடும்பத்தின் பங்கு’ என்பது இந்த ஆண்டு குறும்பட போட்டிக்கான தலைப்பு. போட்டிக்கான குறும்படங்களை இந்த ஆண்டு திரைப்பட விழாவிற்கு ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று அவர் கூறினார்.
மன அழுத்தமும், தற்கொலையும் என்ற தலைப்பில் சினேகா தற்கொலை தடுப்பு மையத்தின் இயக்குனர் டாக்டர் லட்சுமி விஜயகுமார், சிறுவர் மற்றும் வளர் இளம் பருவத்தினரின் மனநலம் என்ற தலைப்பில் குழந்தைகள் நல மருத்துவமனையின் மனநலத்துறை தலைவர் டாக்டர் ஜெயந்தினி, மனச்சிதைவு நோய், மனநலம் மற்றும் ஊடகங்கள் என்ற தலைப்பில் ஸ்கார்ப் அமைப்பைச் சார்ந்த டாக்டர் மங்களா ஆகியோர் உரையாற்றினர். பல்வேறு ஊடகங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள் இக்கருத்தரங்கில் பங்கேற்றனர்.

துருக்கிய பெண்ணின் எவரெஸ்ட் ஏறும் முயற்சி தோல்வி

எவரெஸ்ட் சிகரம் ஏறும் தனது முயற்சியை கைவிட்டுப் பாதியில் திரும்பினார் ஒரு துருக்கியப் பெண்மணி.
துருக்கியைச் சேர்ந்த ஐகோ பனாஹாஷி (வயது 70 ), வக்கீலாக பணி புரிகிறார். இவர் உலகிலேயே மிக உயரமான பனிபடர்ந்த இமய மலையின் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்க விரும்பினார்.
அதற்காக நியூசிலாந்தை சேர்ந்த மார்க்விண்டன் வுட்வார்ட் தலைமையிலான 9 பேர் கொண்ட குழுவினருடன் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்.
சுமார் 6 ஆயிரம் அடி உயரம் ஏறியவுடன் கடும் குளிர் நிலவியது. மேலும் அவரது உடல்நிலை சரியில்லாமல் போனது. கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டார். எனவே, எவரெஸ்ட் சிகரம் ஏறும் தனது முயற்சியை அவர் கைவிட்டுப் பாதியில் திரும்பினார்.
கடந்த 2002ஆம் ஆண்டு மே மாதம் ஜப்பானைச் சேர்ந்த தேம் வாடனபிள் என்ற பெண் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார். இவர் 8,848 மீட்டர் உயரம் ஏறி சாதனை படைத்தார். அப்போது அவருக்கு 63 வயது.
ஆனால் பனாஹாஷி, தனது 70ஆவது வயதில் எவரெஸ்ட் சிகர உச்சியில் ஏறி அதிக வயதில் மலை ஏறிய முதியவர் என்ற உலக சாதனை படைக்க விரும்பினார். இதற்காகத் தற்போது 5ஆவது தடவையாக கடும் முயற்சியில் ஈடுபட்டார்.
பாதியில் திரும்பியதால் அவரது உலக சாதனை கைநழுவியது. பன்ஹாசி கடந்த 2006ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்க முயன்று வருகிறார். ஆனால் அவரால் இன்னமும் அந்தச் சாதனையை எட்ட முடியவில்லை.
பனாஹாசி திருமணம் ஆனவர் அவரது கணவர் அட்டர்னி காஷீ போசி (76). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். _

'பேஸ் புக்' கில் ஒசாமாவின் பெயரை நீக்கிவிட முடிவு.

ஒசாமா பின்லேடன் பெயரில் பதிவு செய்யும் நபர்கள் எந்த வகையில் பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பு உள்ளவர்கள் என்ற விவரத்தை எங்களால் உறுதியாக சொல்ல முடியவில்லை. ஒசாமா பின்லேடன் பெயரில் பதிவு வந்தால் அதனை முழுமையாக நீக்கிட முடிவு செய்திருக்கிறோம் என்று பேஸ் புக் நிறுவன செய்தி தொடர்பாளர் ஆண்ட்ரூ நாய்ஸ் தெரிவித்தார்.
உலக அளவில் பிரபலம் அடைந்து வரும் பேஸ்புக்கில் சேர்க்கப்பட்டிருந்த பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் பதிவை நீக்க அந்நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது குறித்துக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இன்டர்நெட் உலகில் அபார வளர்ச்சி அடைந்து வரும் பேக்ஸ்புக்கில் நாள்தோறும் பலர் தங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
இதன் மூலம், தங்களை இதில் சேர்த்துக் கொண்டவர்கள் தங்களது நண்பர்கள் வட்டாரங்களைப் பெருக்கி கொள்ளவும், தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும் பெரும் உதவியாக இருக்கிறது.
இந்நிலையில் ஒசாமா பின்லேடன் பெயரிலான பேஸ்புக்கில் ஆயிரக்கணக்கானவர்கள் ஆதரவாக சேர்ந்துள்ளனர். பலர் தங்களது மத ரீதியான கோட்பாடு மற்றும் பயங்கரவாதத்தைத் தூண்டும் வாசகங்கள் பதிவு செய்திருக்கின்றனர்.
பிரின்ஸ் ஒப் முஜாகிதீன் என்றும் ஒசாமாவை வர்ணித்துள்ளனர். இவர் மலை பகுதியில்தான் பதுங்கி இருக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது. அல்-கொய்தா மற்றும் அல்சகாப் பயங்கரவாத அமைப்பின் கோட்பாடுகளும் இதில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. ஆடியோ கேசட்டுகளும் இருக்கின்றன.
இதனை அறிந்த பேஸ்புக் நிறுவனம் இந்தப் பதிவை அழிக்க முடிவு செய்துள்ளனர்.
ஆண்ட்ரூ நாய்ஸ் இது குறித்து மேலும் கூறுகையில்,
"பேஸ்புக்கில் மக்கள் சிலர் போலியான பெயர்களைப் பதிவு செய்கின்றனர். இவர்கள் புகழ்பெற்ற அல்லது வேறு மாற்று நபர்கள் பெயரிலோ பதிவு செய்கின்றனர்.
ஒசாமா பின்லேடன் பெயரில் பதிவு செய்யும் நபர்கள் எந்த வகையில் பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பு உள்ளவர்கள் என்ற விவரத்தை எங்களால் உறுதியாக சொல்ல முடியவில்லை.
இருந்தாலும் ஒசாமா பின்லாடன் பெயரில் பதிவு வந்தால் அதனை முழுமையாக நீக்கிட முடிவு செய்திருக்கிறோம்" என்றார்.

ஈராக்கில் உடல் ஊனத்துடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு _

ஈராக்கின் பலுஜா நகரில் உடல் ஊனத்துடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க இராணுவத்திற்கும், சுனி இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் கடந்த ஆறு வருட காலமாக பலுஜா நகரில் மோதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஈரானின் தலைநகர் பக்தாத்திலிருந்து 40 மைல் தொலைவில் பலுஜா நகரம் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நகரில் பிரசவிக்கப்படும் பல குழந்தைகள் உடற் குறைபாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.
எனினும், இந்த நிலைமை தொடர்பில் ஈராக்கிய அரசாங்கமோ அல்லது அமெரிக்காவோ இதுவரையில் உத்தியோகபூர்வ தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை.
யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னரே இவ்வாறு அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் உடற் குறைபாடுகளுடன் பிறப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க படையினரால் பயன்படுத்தப்படும் ஆயுதங்களினால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கலாம் என சில தரப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எனினும், இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இதுவரையில் விஞ்ஞானபூர்வமான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை.
நாள்தோறும் இரண்டு மூன்று உடற் குறைபாடுடன் கூடிய பிரசவங்கள் இடம்பெறுவதாக பலூஜா தேசிய வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் சமீரா அல் அனி தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த விடயம் தொடர்பில் ஏனைய எவரும் பகிரங்கமாக கருத்துக்களை வெளியிடவில்லை.
உடற் குறைபாடுகளுடன் பலூஸா நகரில் குழந்தைகள் பிறக்கின்றமைக்கான உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் கிடையாதெனத் தெரிவிக்கப்படுகிறது.
மூன்று தலைகளுடன் பிறத்தல், உடல் அவையங்கள் இன்றி பிறத்தல், மேலதிக அவையங்களுடன் பிறத்தல், இருதய நோய்களினால் பாதிக்கப்படல் என பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளை பலூஜாவில் பிறக்கும் குழந்தைகள் எதிர்நோக்கி வருவதாக பி.பி.சீ செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது.