Monday, August 2, 2010

தனிப்பட்ட விவரங்களை தராதீர்கள் கூகுள் நிறுவனம் எச்சரிக்கை


ஜி-மெயில் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, ரகசிய எண் போன்ற விவரங்களை கேட்டு வரும் செய்திகளுக்கு பதில் அனுப்ப வேண்டாம் என, கூகுள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கூகுள் நிறுவனத்தின் ஜி-மெயில் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, சில தினங்களுக்கு முன் கூகுள் நிறுவனத்தின் பெயரில் அவசர கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. அதில் கூறப்பட்டிருந்ததாவது: பாதுகாப்பு காரணங்களுக்காக, வாடிக்கையாளர்கள் தங்களது பெயர், வங்கி கணக்கு ரகசிய எண், வேலை, எந்த நாடு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கடிதத்தில் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் பூர்த்தி செய்து உடனடியாக பதில் அனுப்ப வேண்டும்.
கடிதம் கிடைத்து ஏழு நாட்களுக்குள் மறுபதிவு செய்யாவிட்டால் ஜி-மெயில் கணக்கு நிரந்தரமாக காலாவதி ஆகிவிடும். இவ்வாறு குறிப்பிட்டிருந்த கடிதத்தைப் பார்த்த வாடிக்கையாளர்கள், குழம்பினர். சில நாட்களுக்குப் பின்னரே, இக்கடிதம் போலியானது என தெரிந்தது. இதுகுறித்து, கூகுள் நிறுவன செய்தி தொடர்பாளர் கூறியதாவது: கூகுள் நிறுவனம் சார்பில், அது போன்ற கடிதம் எதுவும் அனுப்பப்படவில்லை. சில விஷமிகள் மோசடி செய்யும் எண்ணத்தில், கூகுள் நிறுவன பெயரில் தவறான கடிதத்தை அனுப்பியுள்ளனர்.
வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு விவரங்கள், ரகசிய எண் ஆகியவற்றை தெரிந்து கொண்டு, பண மோசடிகளில் ஈடுபடும் எண்ணத்துடன் அவர்கள், ஏராளமான வாடிக்கையாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிகிறது. இதுபோன்று தனிப்பட்ட விவரங்கள் கேட்டு, நாங்கள் ஒருபோதும் கடிதம் அனுப்புவது கிடையாது. தனிப்பட்ட விவரங்கள் கேட்டு வரும் கடிதங்களுக்கு பதில் அனுப்ப வேண்டாம் என, வாடிக்கையாளர்களை அவ்வப்போது நாங்கள் எச்சரித்து வருகிறோம்.
இதுபோன்ற கடிதங்களை வாடிக்கையாளர்கள் நம்ப வேண்டாம். கடிதங்கள் குறித்து சந்தேகம் எழுந்தால், http://mail.google.com/support/bin/answer என்ற முகவரியில் வெளியிடப்பட்டிருக்கும் தகவல்களை கொண்டு, போலியான கடிதங்களை தெரிந்து கொள்ளலாம். இன்டர்நெட் பயன்படுத்துவோர், இதுபோன்று வரும் மோசடி கடிதங்களை விசாரணை மையங்கள் உதவியுடன் அறிந்துகொண்டு செயல்படுவது அவசியம்.இவ்வாறு அவர் கூறினார்.

60 ஆண்டுகளுக்குப் பின்னர் அரியவகை தேவாங்கு.

'ப்ளைன்ஸ் ஸ்லெண்டர் லோரிஸ்'
'ப்ளைன்ஸ் ஸ்லெண்டர் லோரிஸ்'
இலங்கையில் முற்றாக அழிவடைந்துவருவதாக கருதப்படும் அரிய வகை விலங்கினமொன்று இன்னும் உயிர்வாழ்வதை நிழற்படமொன்றின் மூலம் ஆய்வாளர்கள் முதற்தடவையாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
தேவாங்கு வகையைச் சார்ந்த இந்த விலங்கினம் இலங்கையில் சுமார் 60 வருடங்களின் பின்னர் முதற்தடவையாக பார்வைக்கு கிட்டியுள்ளதாக கருதப்படுகின்றது.
முதிர்ச்சியடைந்த ஆண் விலங்கொன்று, இரவு வேளையில் மரக்கிளையொன்றில் கமராவை உற்று நோக்கியபடி அமர்ந்திருக்கும் காட்சியே இங்கு பதிவாகியுள்ளது.
குறுகிய கால்களையும் நீளமான ரோமங்களையும் கொண்டுள்ள இந்த விலங்கு 'ப்ளைன்ஸ் ஸ்லெண்டர் லோரிஸ்' என்றழைக்கப்படும் மிக அரிய வகை தேவாங்கினமென அடையாளம் காணப்பட்டுள்ளது.
கடந்த நூற்றாண்டிலேயே அழிந்துவிட்டதாக கருதப்பட்டது
இலங்கையின் மலைகளை அண்டிய காட்டுப்பகுதிகளிலேயே வாழக்கூடிய இந்த தேவாங்கினம் தேயிலை மற்றும் பயிர்ச்செய்கைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட காடழிப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த நூற்றாண்டிலேயே பெரும்பாலும் அழிவடைந்துவிட்டதாக கருதப்படுகின்றது.
ஆனால் லண்டன் விலங்கியல் சங்கம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த கூட்டு ஆய்வாளர்கள் குழுவொன்று, இரவு வேளைகளில் நடத்தியுள்ள நூற்றுக்கணக்கான தேடல்களின் பின்னர், தற்போது இந்த விலங்கினத்தின் இருப்பு ஆவண ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொனிக்கல் மலை, ஹோர்ட்டன் பிளேஸ் மற்றும் ஹக்கல ஆகிய மூன்று வெவ்வேறு மலைப்பிரதேசங்களில் மட்டுமே தற்போது உயிர்வாழக்கூடிய இந்தத் தேவாங்கு வகை உயிரினம் இடத்துக்கு இடம் மாறுவதில் பிரச்சனைகள் இருப்பதால், அவற்றின் எதிர்கால இருப்பு பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளதாக ஆய்வுகளை நடத்திய குழுவின் தலைமை ஆய்வாளர் சமன் கமகே கூறுகிறார்

ஐம்பதாவது வயதில் மீண்டும் மர்லின் ஒட்டே.

மார்லின் ஓட்டேய்

மார்லின் ஓட்டேய்
மூன்று முறை ஒலிம்பிக் சாம்பியனாக இருந்துள்ள மார்லின் ஓட்டேய் தனது 50 ஆவது வயதில் மீண்டும் போட்டிகளில் பங்கு பெறப் போவதாக அறிவித்துள்ளார்.
 பார்சிலோனாவில் நடைபெறவுள்ள ஐரோப்பிய சாம்பியஷிப் போட்டிகளில் தான் பங்கேற்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார். ஐரோப்பிய சாம்பியன் போட்டிகளில் மகளிர் பிரிவில் மிக அதிக வயதில் பங்கேற்கும் வீராங்கணை எனும் பெருமையையும் அவர் பெறவுள்ளார்.
ஜமைக்கா நாட்டில் பிறந்து அந்த நாட்டுக்காக ஓடி ஒலிம்பிக் மற்றும் உலகப் போட்டிகளில் சாதனைகளை படைத்துள்ள மார்லின் ஓட்டேய், 2002 ஆம் ஆண்டு ஸ்லொவேனிய நாட்டு பிரஜையானார்.
தற்போது இந்த மாதம் 31 ஆம் தேதி பார்சிலோனாவில் தொடங்கவுள்ள ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிகளில், மகளிருக்கான 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஸ்லொவேனிய நாட்டு அணியில் ஓட தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதுவரை 7 ஒலிம்பிக் போட்டிகளில் 9 பதக்கங்களை ஜமைக்கா நாட்டின் பிரஜையாக இருக்கும் போது வென்றார்.
உலக அளவில் பல முன்னணிப் போட்டிகளில் இதுவரை 29 பதக்கங்களை மார்லின் ஓட்டேய் வென்றுள்ளார். அதில் 14 பதக்கங்களை உலகத் தடகளப் போட்டிகளில் வென்றுள்ளார். மற்ற எந்த விளையாட்டு வீரரைக் காட்டிலும் உலகப் போட்டிகளில் கூடுதலான பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
1995 ஆம் ஆண்டு இடம் பெற்ற உலகத் தடகளப் போட்டிகளில், மகளிருக்கான 200 மீட்டர் ஓட்டத்தில், தங்கப் பதக்கம் வென்றார். அப்போது அவருக்கு 35 வயது. மிக அதிக வயதில் உலகப் பட்டத்தை வென்ற ஒரு வீராங்கணை என்கிற பெருமையை மார்லின் ஓட்டேய் பெற்றார்.
அதே போன்று 2000 ஆம் ஆண்டு சிட்னியில் இடம் பெற்ற ஒலிம்பிக்ஸ் போட்டியில், ஜமைக்கா அணி மகளிருக்கான 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றது. அந்த அணியில் பங்குபெற்ற மார்லின் ஓட்டேய்க்கு அப்போது வயது 40
தனது 50 ஆவது வயதில் ஸ்லொவேனிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் இரண்டாம் இடத்தைப் பெற்றார். இதையடுத்தே அவர் அந்த நாட்டின் சார்பாக ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் போட்டியிட தேர்தெடுக்கப்பட்டுள்ளார்
இது வரை பிரான்ஸின் நிக்கோல் பர்க்புஷே லெவேக்கே மிக அதிக வயதில், அதாவது தனது 47 ஆவது வயதில் ஐரோப்பியப் போட்டிகளில் பங்கு பெற்ற வீராங்கணை என்கிற பெருமையைப் பெற்றிருந்தார்.

பேஸ்புக்-ல் நமக்கென்று தனிப்பக்கம்.

சமூக வலைதளங்களில் அதிகமான மக்களின் எண்ணிக்கையில்
வலம் வந்து கொண்டிருக்கும் பேஸ்புக்-ல் நமக்கென்று தனிப்பக்கம்
எந்த கோடிங் அறிவும் இல்லாமல் அழகாக உருவாக்கலாம்
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

பேஸ்புக் பயனாளர்கள் தங்களுக்கென்று தனிப்பக்கம் உருவாக்கலாம் ,
தங்களுக்கு பிடித்த படங்களை சேர்க்கலாம் வலதுபக்கம், இடது பக்கம்
மேல் கீழ் என எந்தப்பக்கத்தில் வேண்டுமானாலும் படங்களையும்
அழகான எழுத்துக்களையும் சேர்க்கலாம் எல்லாம் இலவசமாக இந்த
சேவையை வழங்க ஒரு இணையதளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.pagemodo.com
இந்தத் தளத்திற்கு சென்று நம் பேஸ்புக்-ன் கணக்கை திறந்து
வைத்துக்கொண்டு நாம் பேஸ்புக்-ல் நமது பக்கத்தை வடிவமைக்கலாம்
பேஸ்புக்-ல் நமது பக்கத்தின் Background color மற்றும் styles
போன்ற அத்தனையும் நாம் மாற்றிக்கொள்ளலாம். 2 வேறுபட்ட
பக்கத்தின் layout இருக்கிறது இதில் எதுவேண்டுமோ அதைக்
கூட நாம் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இந்த தளத்தில் பேஸ்புக்-ன்
அழகான பக்கம் உருவாக்க நமக்கு எந்த கோடிங் அறிவும்
தேவையில்லை உடனடியாக நாம் பேஸ்புக் பக்கத்தை உருவாக்கலாம்.
Thanks To.......Winmani

கூகிளில் நாம் அறிய வேண்டிய வசதிகள் 8

கூகுள் நால்

கூகுள் தளத்தின் இந்த பிரிவைப் பலரும் அறிந்திருக்க மாட்டீர்கள். கூகுளைப் பொறுத்தவரை ஒரு knol  என்பது ஒரு பொருள் குறித்த அதிகாரபூர்வமாக அறிவிக்கும் ஒரு கட்டுரை. ஒருவரின் தெளிந்த அறிவின் ஓர் அளவு. இந்த வகையில் http://knol.google.com  என்ற முகவரியில் கூகுள் ஓர் இணைய தளப் பிரிவினை உண்டாக்கி பல பொருள் குறித்த கட்டுரைகளைப் போட்டுள்ளது. என்ன! கிட்டத்தட்ட விக்கி பீடியா போல இருக்கிறதே என்று எண்ணுகிறீர்களா? ஆம், அதற்குப் போட்டியாகத்தான் இது தொடங்கப்பட்டது என அனைவரும் எண்ணுகின்றனர். இந்த தளத்தில் உள்ள கட்டுரைகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டிவிட்டது.
இந்த கட்டுரைகளைப் படிப்பது வெகு எளிது. http://knol.google.com என்ற முகவரியில் உள்ள தளத்திற்கு முதலில் செல்லுங்கள். அங்கு நீங்கள் எது குறித்து படிக்க வேண்டுமோ அதனைத் தேடுங்கள். தேடுதல் வசதிகளைத் தருவதில் கூகுளின் திறன் அனைவரும் அறிந்த ஒன்று. எனவே நீங்கள் தேடி எடுத்துப் படிக்க வேண்டிய கட்டுரைகள் அனைத்தும் பட்டியலிடப்படும். இவற்றிலிருந்து நீங்கள் படிக்க விரும்பும் கட்டுரையைத் தேடிப் பெற்று படிக்கலாம். நான் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா குறித்துத் தேடிய போது 774 நால் ( knol ) இருப்பதாக தெரிவித்தது. இந்த கட்டுரைகள் அவரின் வெளிநாட்டுக் கொள்கை முதல் பராக் ஒபாமா பெயரில் வந்திருக்கும் பொருட்களை எப்படி மலிவாக வாங்கலாம் என்பது வரை இருக்கின்றன.
ஓ.கே. விக்கிபீடியாவினைப் போல இங்கு நாம் எழுதும் கட்டுரையினைப் பதிக்க முடியுமா என்று உங்களுக்கு ஓர் ஆர்வம் உண்டாகலாம். நிச்சயமாக அந்த வசதியும் இந்த தளத்தில் உள்ளது. உங்கள் கட்டுரையைப் பதிக்க வேண்டும் என்றால் http://knol.google.com/  என்ற முகவரியில் உள்ள தளத்திற்கு முதலில் செல்லவும். அதன்பின் Write a Knol என்பதில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் உங்கள் கூகுள் அக்கவுண்ட் மூலம் முதலில் பதிவு செய்யச் சொல்லி கேட்கப்படும்.
உங்கள் கூகுள் அக்கவுண்ட் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து செல்லவும். என்ன! உங்களுக்குக் கூகுள் அக்கவுண்ட் இல்லையா! அப்படியானால் கூகுள் தளம் சென்று ஓர் அக்கவுண்ட் உடனே அமைக்கவும். பின் மீண்டும் இங்கே வந்து கட்டுரையைப் பதிக்கும் பணியைத் தொடரவும்.
இப்போது Write a Knol என்ற பட்டனை அழுத்தியவுடன் கட்டுரையினை அமைக்க ஓர் அடிப்படை கட்டமைப்பு உங்களுக்குத் தரப்படும். இங்கு உங்களுக்கான லைசன்ஸையும் பெற்றுக் கொள்ளலாம். இந்த லைசன்ஸ் பெற்றுக் கொள்வது உங்களுக்கு நல்லதுதான். ஒரு ஸ்டேட்டஸும் கிடைக்கும். மூன்று வகையான லைசன்ஸ் இருக்கும்.
உங்கள் கட்டுரையை மற்றவர்கள் எப்படி பயன்படுத்தலாம் என்பதற்கான வரையறையை இது வகுத்துத் தரும். இதனைப் பெற்றுக் கொண்டு உங்கள் கட்டுரையை இதில் பதிக்கவும். உலகத் தரத்திலான தகவல் களஞ்சியத்தில் உங்கள் கட்டுரை இடம் பெற வழி கிடைத்துவிட்டதே. உங்களுக்குத் தெரிந்த பொருள் குறித்த கட்டுரை ஒன்றை எழுதி உடனே இதில் பதிக்கத் தொடங்குங்கள்.

இந்திய மொழிகளில் பேஸ்புக்.

சமுதாய இணைய வலை அமைப்பில் முதல் இடம் பெற்றிருக்கும் பேஸ்புக் இந்தியாவில் இன்னும் அதிகமான எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களைப் பெறும் வகையில் இந்திய மொழிகளில் தன்வலைத் தளத்தை உருவாக்கியுள்ளது. முதல் கட்டமாக தமிழ், இந்தி, பஞ்சாபி, பெங்காலி, தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பேஸ்புக் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் தமிழிலேயே தங்கள் அக்கவுண்ட்டை உருவாக்கி அப்டேட் செய்திடலாம். பேஸ்புக் வலைத்தளத்திற்குப் போட்டியாகச் செயல்பட்டு வரும் ஆர்குட் ஏற்கனவே தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் ஒலிக் குறிப்பின் அடிப்படையில் அந்த அந்த மொழிகளில் எழுதும் வசதியைத் தந்துள்ளது. ஆனால் பேஸ் புக் இன்னும் அந்த வசதியைத் தரவில்லை. இருப்பினும் தற்போதைய வசதியின் அடிப்படையில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களை பேஸ்புக் பெறுமா என்பதனைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நீரில் மூழ்கி மாணவன் சாவு: உயிரை விட்டது குதிரை!



குனியமுத்தூர், செந்தில்முருகன்; மில் தொழிலாளி. இவரது இளைய மகன் மணிகண்ணன் (21. கடந்த 2ம் தேதி தனது கல்லூரி நண்பர்களுடன், தமிழக – கேரள எல்லையிலுள்ள வாளையார் அணையில் குளிக்கச் சென்றார். ஒவ்வொருவரும் போட்டி போட்டு அணையில் குளித்துக்கொண்டிருந்தபோது, மணிகண்ணன் மட்டும் வெகுநேரம் வரை வெளியே வரவில்லை. அதிர்ச்சியடைந்த நண்பர்கள், அருகிலிருந்த வாளையார் போலீசுக்கு தகவல் தெரிவிக்க, தீயணைப்பு துறையினர் வந்து மணிகண்ணனின் உடலை மீட்டனர். கல்லூரிக்குச் சென்ற மகன் பிணமாக மறுநாள் வீட்டுக்கு திரும்பியது கண்டு அதிர்ச்சியில் நிலைகுலைந்தனர் பெற்றோர்.
உற்றார், உறவினர் கூடி அன்று மாலையில் உடல் அடக்க சடங்குகளை முடித்து வீட்டுக்கு திரும்பியபோது, அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. மணிகண்ணன் கடந்த ஐந்து ஆண்டுகளாக பராமரித்து வந்த, நடனக் குதிரை மயங்கி கிடந்தது. கால்நடை டாக்டரை அழைத்து வந்து காண்பித்த போது, அதுவும் உயிரை விட்டிருந்தது. “தனது எஜமானன் உயிரிழந்ததை அறிந்து, இந்த குதிரையும் உயிரை விட்டுவிட்டதாகவே’ பலரும் கருதி பரிதாபத்துடன் வேடிக்கை பார்த்துச் சென்றனர்.
இது குறித்து, மணிகண்ணனின் தந்தை செந்தில்முருகன் கூறியதாவது:நீரில் மூழ்கி இறந்த எனது மகன், படிப் பில் அக்கறை கொண்டவன். அதே வேளை யில், குதிரை வளர்ப்பிலும் ஆர்வம் கொண்டவன். அவனது விருப்பத்தின்படி ஐந்து ஆண்டுகளுக்கு முன் குதிரை வாங்கினோம். அதற்கு “புயல் ராணி’ என பெயரிட்ட அவன், நடனமாடும் பயிற்சியையும் அளித்தான். கடந்த 2009ல் கேரள மாநிலம், கொல்லத்தில் நடந்த “டான்சிங் ஹார்ஸ்’ (நடனக் குதிரை) போட்டியில் பங்கேற்ற எங்களது குதிரை, சிறப்பு பரிசு பெற்றது. அதே போன்று, முந்தைய ஆண்டுகளில் நடந்த போட்டியிலும் பல பரிசுகளை பெற்றது. குதிரை மீது மிகுந்த பாசம் வைத்து, பராமரித்து வந்தான். நீரில் மூழ்கி இறந்த மகனின் உடலை வீட்டுக்கு எடுத்து வந்து வாசலில் வைத்திருந்தோம் (அருகில் குதிரை இருந்தது). நீண்ட நேரத்துக்கு பின் எடுத்துச் சென்று உடலை அடக்கம் செய்துவிட்டு திரும்பியபோது, வீட்டில் இருந்த குதிரையும் இறந்துவிட்டது. நல்ல திடகாத்திரமான நிலையில் இருந்த குதிரை திடீரென இறக்க வாய்ப்பே இல்லை. எது எப்படியோ, மகனின் இறப்புக்கும், குதிரையின் இறப்புக்கும் தொடர்பு இருப்பதாகவே கருதுகிறோம்.இவ்வாறு, செந்தில்முருகன் தெரிவித்தார்.

உலகில் அடுத்த குள்ள மனிதர்!

ஒரு மனிதன் குள்ளமாக இருந்தால் அவனை நாம் கேலி செய்வோம் ஆனால் அந்த குள்ளம்தான் உலகளவில் பேசப்படுகின்றது. அதாவது உலகத்தில் குள்ளமான மனிதர் , உயரமான மனிதர், நிறை கூடிய மனிதர் என்று பல விதத்தில் மனிதனை உலகத்திற்கு எடுத்து காட்டுகின்றனர்.
சிலர் தனது உடல் அமைப்பை வைத்து கவலைப் படுவது உண்டு. ஆனால் அந்த உடல் அமைப்பே உலகத்தையை வியக்க வைக்கின்றது என்பது உண்மை.
அந்த வகையில் உலகில் குள்ளமான மனிதராக இருந்த பிங்பிங் கடந்த மார்ச் மாதம் இறந்து விட்டார். இதையடுத்து உலகில் குள்ளமான மனிதர் என்ற இடத்தை சீனாவை சேர்ந்த ஹவுங் கைகான் பிடித்துள்ளார்.
அவரது வயது 40. இவருடைய உயரம் 76 சென்டி மீட்டர். பிங்பிங்கை விட இவர் 1.4 சென்டி மீட்டர் அதிக உயரமாக இருக்கிறார். இவர் பிறந்து 1 மாதம் வரை உடல வளர்ச்சி இருந்து உள்ளது. 1 மாதத்துக்கு பிறகு உடல் வளர்ச்சி முற்றிலும் நின்று விட்டது. இப்போது அவர் ஒரு வயது குழந்தைகள் அணியும் ஆடையையே அணிகிறார். தனது தாயாருடன் வசித்து வரும் இவர் மேஜிக் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்.