Sunday, April 8, 2012

மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’

 பாகற்காய் கசப்பானது என்றாலும், பலருக்குப் பிடித்தமான காய்கறி. தற்போது பாகற்காய் தரும் மற்றொரு இனிப்பான செய்தி, இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிர்ப்பு அரணாக அமையும் என்பது. இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருப்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண் விஞ்ஞானி என்பது கூடுதல் மகிழ்ச்சியளிக்கும் விஷயம்.
மார்பகப் புற்று செல் வளர்ச்சியை பாகற்காய் குறிப்பிட்ட அளவு கட்டுப்படுத்துகிறது, எனவே இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிராக ஒரு தடுப்பு அமைப்பாகச் செயல்படும் என்பதுதான் புதிய கண்டுபிடிப்பின் சாரம்.
இந்தக் கண்டுபிடிப்புக்குச் சொந்தக்காரர், அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழக நோயியல் துறை பேராசிரியை ரத்னா ரே.
“மார்பகப் புற்றுநோயைத் தடுப்பதற்கு பாகற்காய் சாறை மருந்தாகப் பயன்படுத்த முடியும்” என்கிறார் இவர்.
 ரத்னா ரேயின் இந்தக் கண்டுபிடிப்பு, அமெரிக்க புற்றுநோய்க் கழகத்தின் இதழான `கேன்சர் ரிசர்ச்’-ல் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு செய்யப்பட்ட ஆய்வுகளிலேயே பாகற்காயானது, `ஹைப்போகிளைசீமிக்’ (ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைப்பது) மற்றும் `ஹைப்போலிபிடெமிக்’ தாக்கங்களை ஏற்படுத்துவது தெரியவந்திருக்கிறது என்கிறார் ரத்னா. இந் தத் தாக்கங்களின் காரணமாக, இந்திய நாட்டுப்புற மருந்துகளில் சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்துவதற்குப் பாகற்காய் சாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியா தவிர, சீனா, மத்திய அமெரிக்கா போன்ற பகுதிகளிலும் பாரம்பரிய மருந்துகளில் பாகற்காய் பயன்படுத்தப்படுகிறது.
ரத்னா ரேயும் அவரது சக ஆராய்ச்சியாளர்களும் மனித மார்பகப் புற்றுநோய் செல்களையும், மனித பாலூட்டிச் சுரப்பி `எபிதீலியல்’ செல்களையும் ஆய்வகத்தில் வைத்து ஆராய்ந்தனர். அப்போது, பாகற்காயில் இருந்து வடித்து எடுக்கப்பட்ட பொருள், மார்பகப் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி மற்றும் பிரிவை குறிப்பிடத்தக்க அளவு குறைத்ததோடு, அவற்றை அழிக்கவும் செய்தது. இந்த ஆரம்பகட்ட முடிவுகள், மார்பகப் புற்றுநோய் ஆய்வில் ஊக்கம் அளிப்பவையாக அமைந்துள்ளன.
“பெண்களின் முக்கியமான உயிர்க்கொல்லியாக மார்பகப் புற்றுநோய் உள்ளது. அதற்குத் தடை போட முடியுமா என்று பல்வேறு ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தற்போதைய ஆய்வில் கிடைத்திருக்கும் முடிவுகள் முக்கியமானவை” என்று கொலோராடோ பல்கலைக்கழக மருந்து அறிவியல் துறைப் பேராசிரியர் ராஜேஷ் அகர்வால் தெரிவிக்கிறார்.
“தொடர்ந்து நடத்தும் ஆய்வுகளில், பாகற்காயைப் பற்றிய இந்த உண்மை உறுதியானால், மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான விஷயங்களில் இதுவும் ஒன்று என்பது உறுதிப்படும்” என்கிறார் அகர்வால்.
`கேன்சர் ரிசர்ச்’ பத்திரிகையின் இணை ஆசிரியராகவும் உள்ள அகர்வால் மேலும் கூறுகையில், பாகற்காயைப் பற்றிய ஆய்வின் எளிமையான தன்மை, தெளிவான முடிவுகள், இந்தக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் ஆகியவற்றின் காரணமாக, முந்தைய ஆய்வுகளில் இருந்து இது பெரிதும் வேறுபடுகிறது என்கிறார்.
அதேநேரத்தில், புற்றுநோய்க்கு எதிராக பாகற்காயின் தடுப்புத் திறனை வெளிப்படுத்துவதில் தற்போது ஓரடிதான் முன்னே வைக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறுகிறார் இவர்.
“மார்பகப் புற்றுநோய் செல்களின் மூலக்கூறுகளை பாகற்காய் சாறு எவ்வாறு குறி வைக்கிறது என்று நன்றாகப் புரிந்துகொள்வதற்கும், அதில் இதன் திறனை வெளிப்படுத்துவதற்கும் தொடர்ந்து மேலும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்கிறார் அகர்வால்.
அதேநேரம் இவர் ஓர் எச்சரிக்கையையும் விடுக்கிறார்.
அதாவது, தற்போது கிடைத்திருக்கும் முடிவுகள், பாகற்காயை ஒரு புற்றுநோய் எதிர்ப்பு மூலமாக நம்பிக்கை அளித்தாலும், இந்த முடிவுகளின் மதிப்புகளை நிறுவுவதும், மனிதர்களுக்கு மருந்தாகக் கொடுப்பதற்கு முன் விலங்குகளில் இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதும் முக்கியமானது என்கிறார்.
ரத்னா ரேயும், அவரது சக ஆராய்ச்சியாளர்களும், புற்றுநோய் செல்களின் வளர்ச்சி, பிரிவைத் தடுக்கும் பாகற்காய் சாறின் தன்மையை உறுதிப்படுத்துவதற்கு மேலும் பலவித புற்றுநோய் செல்களில் அவற்றைத் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இதை மருந்தாகக் கொடுத்து ஆய்வு செய்யவும் முடிவு செய்திருக்கின்றனர்.
பாகற்காய் வடிபொருள், ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. மேற்கத்திய நாடுகளிலும் இது மருத்துவத் தன்மை வாய்ந்த உணவுப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. காரணம் இது, `மார்மோர்டின்’, `வைட்டமின் சி’, `கரோட்டினாய்டுகள்’, `பிளேவனாய்டுகள்’, `பாலிபினால்கள்’ போன்றவற்றைக் கொண்டுள்ளது.      
 நன்றி: உங்களுக்காக