Tuesday, August 17, 2010

வசதியில்லாதவர், ஆனால் இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்த பெண்

ஜெர்மனியில் நடந்த உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வினி சாவந்த், தங்கப் பதக்கம் பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். இதன்மூலம், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் தங்கப் பதக்கம் பெற்ற முதல் பெண் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த தேஜஸ்வினி, இந்த உயரிய சாதனையை பெறுவதற்காக பட்ட கஷ்டம் கொஞ்சமல்ல. தேஜஸ்வினியை விட அவரது தந்தை ரவீந்திர சாவந்த் பட்ட கஷ்டம் தான் அதிகம். ரவீந்திர சாவந்த் கடற்படையில் இன்ஜினியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தேஜஸ்வினிக்கு இளம் வயதிலேயே துப்பாக்கி சுடும் போட்டியில் ஆர்வம் அதிகம் இருந்ததை அவர், அடையாளம் கண்டு கொண்டார். இதற்கான பயிற்சியில் தேஜஸ்வினியை அவர் சேர்த்து விட்டார். துப்பாக்கி சுடும் போட்டிகளில் பங்கேற்பதற்கும், அதற்கு தேவையான துப்பாக்கிகளை வாங்குவதற்கும், நவீன பயிற்சிகளை பெறுவதற்கும் அதிகமான பணம் தேவைப்பட்டது. ரவீந்திர சாவந்தால் அந்த அளவுக்கு பணம் புரட்ட முடியவில்லை இருந்தாலும், பணம் இல்லை என்ற காரணத்தால், தன் மகளின் சாதனை தடைபட்டுவிடக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அதற்காக, தனக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் கடன் வாங்கினார்.  இறுதியில் தேஜஸ்வினியின் கனவு நனவானது. 2001ல் போட்டியில் பங்கேற்பதற்கான துப்பாக்கி அவருக்கு கிடைத்தது.
இதுகுறித்து ரவீந்திர சாவந்த் கூறுகையில்,"தேஜஸ்வினி மிகவும் திறமையானவள். எப்படியும் உலக சாம்பியன் ஆகி விடுவாள். ஆனால், அதற்கு பணம் தடையாக இருக்கக் கூடாது'என்றார். ஆரம்ப காலத்தில் பங்கேற்ற போட்டிகளில் தேஜஸ்வினிக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. தற்போது அவரது தந்தை கனவு பலித்து விட்டது. ஜெர்மனியின் முனீச் நகரில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில், 50 மீட்டர் "ரைபிள் புரோன்' பிரிவில் தேஜஸ்வினி தங்கப் பதக்கம் பெற்று விட்டார். இது மட்டுமல்லாமல், இந்த பிரிவில் ஏற்கனவே செய்யப்பட்ட உலக சாதனைøயும் அவர் சமன் செய்தார். ஆனால், இதைப் பார்ப்பதற்கு ரவீந்திர சாவந்த் தற்போது உயிருடன் இல்லை. கடந்த பிப்ரவரியில் அவர் இறந்து விட்டார். போட்டியில் வெற்றி பெற்றவுடன்,"இந்த வெற்றியை என் தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்'என, உணர்ச்சிப் பெருக்குடன் தேஜஸ்வினி கண்ணீர் வடித்தார்.
வெற்றியின் ரகசியம் குறித்து தேஜஸ்வினி கூறுகையில்,"போட்டியைப் பற்றியே எந்த நேரமும் சிந்திக்க வேண்டும். போட்டியில் பங்கேற்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னரே, அதற்கு தயாராகி விட வேண்டும். சீனாவில் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்பவர்கள், இளம் வயதிலேயே அதற்கு தயார் செய்யப்படுகின்றனர். அவர்களுடன் நெருங்கிப் பழகியதன் மூலம், சில முக்கியமான விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது'என்றார். இவர் பணக்கார குடும்பத்தில் பிறந்து எளிதாக வாழ்க்கைப் பாதையில் முன்னுக்கு வரவில்லை. மாறாக உழைப்பு அவருக்கு வெற்றியைத் தந்தது. டில்லியில் நடைபெறும் காமன் வெல்த் போட்டிகளில் தேஜஸ்வினி பங்கேற்றால், நமது நாட்டிற்கு நிச்சயம் விருது உண்டு என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார்.
நன்றி,தினமலர்.