Tuesday, September 21, 2010

குடற்புண் (Ulcer)

ன்றைய அவசர உலகில் நம்மில் அநேகர் சாப்பிடக்கூட நேரம் ஒதுக்குவதில்லை.  கண்ட இடங்களில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சாப்பிடுவது, அல்லது நாள் முழுவதும் சாப்பிடாமல் இருப்பது என மாறுபட்ட உணவுப் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளளோம்.  இதனால் அவ்வப்போது உணவு செரிமானத்திற்காக சுரக்கப்படும் அமிலம் கிரகிப்பதற்கு உணவு இல்லாமல் வயிற்றிலுள்ள சளிச்சவ்வை கிரகித்து புண்ணை ஏற்படுத்துகிறது.  இதற்கு ஆங்கிலத்தில் அல்சர் என்று பெயர் வழங்கப்படுகிறது.  இது பாரபட்சமின்றி பாமரர் முதல் பணக்காரர் வரை அனைவரையும் பாதிக்கும் நோயாகும்.  இதனையே சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் குன்மம் என்று அழைக்கின்றனர்.
‘குன்மம்’ என்ற சொல் குல்மம் - புதர் என்ற வடமொழிச் சொல்லின் சிதைவு.வலி வரும்போது நோயினால் முன் பக்கம் குன்றவைக்கும் காரணத்தினால் இதனை குன்ம நோய் என்றும்  கூறுவர். 
குன்மம் ஏற்பட காரணங்களாக சொல்லப் படுபவை
· நேரத்திற்கு சாப்பிடாமல் இருத்தல்
· அவசர அவசரமாக சாப்பிடுவது
· அடிக்கடி கோபம் கொள்ளுதல்
· மந்தத்தை ஏற்படுத்தும் பொருட்களை அடிக்கடி உண்பது.
· அதிக பட்டினி இருத்தல்
· குறைவான தூக்கம், மற்றும் இரவில் அதிக நேரம் கண் விழித்து வேலை செய்வது.
· மன அழுத்தம்
· புகை பிடித்தல், அளவுக்கு மிஞ்சிய மதுப்பழக்கம், போதைப் பொருட்களை உபயோகித்தல்
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தோன்றும் குறிகுணங்கள்
இந்த வியாதியில் விசேஷமான ஒரு அறிகுறி வயிற்றில் புரளும் ஒரு கட்டி போன்று பின்னல் முடிச்சாகும்.
செரியாமை, வயிற்றில் எரிச்சல், வாந்தி, உடல் வன்மை குறைதல், தேகம் மெலிதல், மனம் குன்றல்  ஆகிய அறிகுறிகள் காணப்படும்.
· பசியின்மை, உணவின் மீது வெறுப்பு, குமட்டல், ஏப்பம்,  வாயில் நீருறல்,  வாந்தி, புளியேப்பம்.
· வயிறு எந்த நேரமும் அல்லது உணவு உண்ணும் முன் வரை வலித்தல் அல்லது எரிதல்.
· உண்ட உணவு செரியாமல் இருத்தல்
· வயிறு உப்பலாக இருத்தல்
· அடிக்கடி வாந்தி உண்டாதல்
· புளித்த ஏப்பத்துடன் ஒருவித எரிச்சலுடன் வாயு வெளியேறும்.
· எதிலும் ஆர்வம் குறைந்து உடல் சோர்வாக காணப்படும்.
· வாயுக் கோளாறு அதிகப்படும்.
குன்னமத்தின் மூலகாரணம்
இந்த நோயை மேல்நாட்டவர் Dyspepsia (ஜீரண கோளாறு) Chronic gastritis (வயிற்று வேக்காடு) , Gastric ulcer (வயிற்று புண்), Duodenal ulcer  (க்ரஹனிப்புண்),   Gastric tumor (வயிற்றுக் கட்டி) என பல பெயரிட்டு அழைக்கின்றனர்.  இதற்கு சரியான மூல காரணத்தை மேல்நாட்டு வைத்திய நூல்களில் கூறப்படவும் இல்லை, கண்டுபிடிக்கப்படவும் இல்லை.
பொதுவாக வயிற்று நீர்ச் சுரப்பு அதிகமாவதாலும், குறைவதாலும் இந்த வியாதி ஏற்படுகிறதென்றும், அவ்விதச் சுரப்பு அதிகமாதல், குறைதல் இவைகளுக்கு நிச்சயமான காரணம் கண்டுபிடிக்கப் படவில்லை என்று சொல்கிறார்கள்.
ஆனால் சித்த, ஆயுர்வேத மருத்துவ  முறைகளில் இதற்கான காரணங்கள் பல விளக்கப்பட்டுள்ளன.  இந்த நோய்க்கு காரணம் வயிறு மற்ற அவயங்களின் உள்பாகம் வறண்டு போவதேயாகும்.  வறட்சியினால் உள்புறத்தில் வலியும் கரடுமுரடான முடிச்சுக்களும், புண்களும் உண்டாவது சாதாரணம்.  இப்படி வறட்சி ஏற்படுவதற்கு காரணம் வறண்ட உணவுகளை அதாவது நெய், எண்ணெய் கொழுப்புத் திரவங்கள் சம்பந்தப்படாத உணவுகளை அடிக்கடி, அதிகமாக உண்பதும், பசி வேளைகளில் சாப்பிடாமல் பசியை அடக்குவதும், உடம்பில் வறட்சியைக் கொடுக்கக்கூடிய வேலைகளைச் செய்வதும், அப்படிப்பட்ட சீதோஷ்ணங்களில் அதிகமாக பழகுவதும், உடம்பில் குளிர்ச்சி உண்டாவதற்கான பழக்கங்களாகிய எண்ணெய் தேய்த்துக் கொள்ளுதல் போன்ற பழங்கங்களை கடைப் பிடிக்காமல் இருப்பதும், சரீரம் பலவீனமாக இருக்கும்போது வாயு பதார்த்தங்களை அதிகமாக உண்பதும் ஆகும்.  மல மூத்திர வேகங்களை அடக்குவதும், மூலச்சூடும் குன்மத்திற்கு முக்கிய காரணமாகும்.  ஆதலால் இந்த நோய்க்கு ஆதாரம் வறட்சி, வாய்வு, வாதம், அக்னி பலத்தின் சமமின்மை. இவை நான்கும் ஒன்றுக்கொன்று ஆதாரமானவை.  ஆகையால் இந்த நோய்க்கு சிகிச்சை செய்வதற்கு முதலில் செய்ய வேண்டியது உடம்பில் குளிர்ச்சி உண்டாக்கும் உணவு வகைகளை உண்பதும், லகுவான ஆகாரத்தை உண்பதும் மேலும், வாயுவைச் சமன்படுத்தக்கூடிய உணவுகளையும், மருந்துகளையும் உட்கொள்வதே ஆகும்.
குன்மத்தின் வகைகள்
சித்தர்கள்  குன்மத்தை 8 வகைகளாக பிரித்துள்ளனர்.
1. வாத குன்மம்
2. பித்த குன்மம்
3. கப குன்மம்
4.  வாயு குன்மம்
5. எரி குன்மம்
6. சன்னி குன்மம்
7. சக்தி குன்மம்
8. வலி குன்மம்
யூகி முனி வைத்திய சிந்தாமணி என்ற நூலில் இந்த எட்டு வகை குன்மத்தை விளக்கும் வகையில் பாடல்கள் உள்ளன. அவற்றிலிருந்து நாம் அறிவது
வாத குன்மத்தில் நடை பலம் குறைந்து காணப்படும்.  உடல் கனக்கும்.  உறக்கம் உண்டாகும்.  ஆகாரம் செல்லாது. மலம் இருகும். நாவறட்சி ஏற்படும், தலைவலி ஏற்படும்.
பித்த குன்மத்தில் முகம் மஞ்சள் நிறமாக காணப்படும்.  உடல் உஷ்ணம் அதிகமாக இருக்கும்.  மயக்கம் மற்றும் மூர்ச்சை அடிக்கடி உண்டாகும்.  கை கால் ஓச்சல் இருந்துகொண்டே இருக்கும்.  வாந்தி ஏற்படலாம்.  மலம் கடினப்பட்டு கழிக்க நேரிடும்.  நெஞ்சில் கோழை கட்டும்.  தாகம் அதிகமாக இருக்கும்.  சிறுநீர் சிவந்திருக்கும்.
கப குன்மத்தில் இளைப்பு உண்டாகி பலஹீனம் ஏற்படும்.  இரைப்பு மற்றும் நடுக்கம் ஏற்படும்.  ஆகாரம் செல்லாது.  வாயில் நீர் ஊறிக்கொண்டே இருக்கும்.  நெஞ்சில் புகைச்சல் இருக்கும்.  தலைசுற்றல் மற்றும் தலைபாரம் இருக்கும்.  வாயு குன்மத்தில் உடல் உலர்ந்து காணப்படும்.  கை கால் ஓய்ச்சல் இருக்கும்.  பலஹீனமாக இருப்பார்கள்.  வயிறு உப்பும், அடிவயிற்றில் பந்து போல் புரள்வது தெரியும்.  சாப்பிட்ட ஆகாரம் சரியானபடி சீரணிக்காது.  வயிறு எப்போதும் பளுவாக காணப்படும்.
எரிகுன்மத்தில் உடல் முழுவதும் எரிச்சல் ஏற்படும்.  இளைக்கவும் செய்யும்.  வயிற்றில் எரிச்சல், குமட்டல் மற்றும் வயிறு உப்பிக் கொண்டிருக்கும்.  புளித்த ஏப்பம் எடுக்கும்.  ஆகாரம் சரிவர சாப்பிட முடியாது.  வயிற்று போக்கு ஏற்படும்.  வாயில் நீர் ஊறும்.  தலைவலி, தலைச் சுற்றல், மயிர்க்காலில் வியர்வை மற்றும் இருமல் காணப்படும்.  அக்னி குன்மத்தில் அடி வயிற்றில் இரைச்சல் கேட்கும்.  மயக்கம் மற்றும் திடுக்கிடல் ஏற்படும்.  வயிற்றில் உஷ்ணம் ஏற்பட்டு, வயிற்றுப் போக்கு உண்டாகும்.  நெஞ்சில் புகைச்சல் ஏற்படும்.  மூச்சுக்காற்று தங்கி எழும்பும்.
சக்தி குன்மத்தில் நடை குறையும்.  பலஹீனம் ஏற்படும்.  அடிக்கடி மயக்கம் உண்டாகும்.  சிறு நரம்புகள் புடைத்துக் காணப்படும்.  ருசி தெரியாது.  வாந்தி உண்டாகும்.  சிறு சிறு வலிகள் இருந்து கெண்டே இருக்கும்.  மலச்சிக்கல் ஏற்படும்.  வலி குன்மத்தில் மேனியெங்கும் உலர்ந்து காணப்படும்.  உடம்பில் இடுப்புவலி, முதுகுத்தண்டு வலி, விலாவில் வலி போன்றவை ஏற்படும். தூக்கம் இருக்காது.  வயிறு இரைச்சலுடன் ஊதிக்கொண்டே இருக்கும்.  ஆகாரம் சரியாக ஏற்காது.  பொய்ப்பசி இருக்கும்.
மருந்துகள்
அனைத்து வகை குன்மங்களுக்கும் நம் சித்தர்கள் நிறைய மருந்துகளை ஓலைச் சுவடிகளில் கூறியுள்ளனர்.  அவரவர் உடற்கூறு மற்றும் வாழும் சூழல் மற்றும் குன்மத்தோடு சேர்ந்துள்ள மற்ற நோய்கள் என்ன என்று கண்டறிந்து அதற்குத் தக்கவாறு சிகிச்சை அளித்தால் மட்டுமே இந்த நோய் மட்டுப்படும்.  சுமார் 134 வகை மருந்துகள்  குன்ம நோய்க்கு என வகைப்படுத்தியுள்ளனர். 
மருந்துஉண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டிய உணவு பழக்கங்கள்
· அதிக காரம், புளிப்பு, எண்ணெய் பலகாரங்கள், மசாலாப் பொருட்கள் நிறைந்த உணவை தவிர்க்க வேண்டும்.
· நெய் உருக்கி, மோர் பெருக்கி அதாவது நெய்யை நன்கு உருக்கியும், மோரில் அதிக  நீர் சேர்த்தும் சாப்பிட வேண்டும்.
· தினமும் இரவில் பால் அருந்துவது நல்லது.
· டீ (tea), காஃபி அருந்துவதை தவிர்ப்பது நல்லது.
· மனக்கவலை, பரபரப்பு, மன உளைச்சல் இவற்றை குறைக்க வேண்டும்.
· மணத்தக்காளிக் கீரை, முட்டைகோஸ் இவற்றை தினமும் சாப்பிடுவது நல்லது.
மணத்தக்காளிக் கீரை - 1 கைப்பிடி,
கொத்துமல்லித்தழை    - 1/2 கைப்பிடி
கறிவேப்பிலை    - 1/2 கைப்பிடி
சீரகம்         - 1ஸ்பூன்
சின்னவெங்காயம்    - 4
இஞ்சி        - 1 துண்டு
இவற்றுடன் ஏதாவது காய்கள் சேர்த்து தேவையான அளவு உப்பு, நல்ல மிளகு சேர்த்து சூப் செய்து தினமும் ஒருவேளை காலை அல்லது மாலை அருந்தி வரவேண்டும்.  அல்லது, காலை உணவுக்குப் பின்னும், மதிய உணவுக்கு முன்னும் 11 மணி முதல் 12 மணிக்குள் பித்த அபகாரம் கூடியிருக்கும் நேரத்தில் அருந்தி வந்தால் பித்த அபகாரம் குறைந்து குடற்புண் பாதிப்புகள் குறையும்.
தகவல்-நக்கீரன்.
நன்றி-Ofnaa-Doha.