Friday, June 4, 2010

புதிய உலக சாதனை

புதிய உலக சாதனையை உருவாக்கியுள்ளார்… துஷ்யந்தன்!

கீபோர்ட்…. வாத்தியத்தினை தொடர்ந்து 53 மணி நேரம் வாசித்து இதற்கு முன்னர் அமெரிக்கரான Randy Rumbelow ஏற்படுத்தியிருந்த முன்னைய உலக சாதனையை மேலும் 9 மணி நேரம் 15 நிமிடங்கள் அதிகமாக வாசித்ததன் மூலம் … முறியடித்து.. புதிய உலக சாதனையை உருவாக்கியுள்ளார்… துஷ்யந்தன்!

இலங்கைத் தமிழரான செல்வன்-துஸ்யந்தன் சத்தியமூர்த்தி தொடர்ச்சியாக சுரத்தட்டு இசை (Keyboard) மீட்டி புதிய உலக சானையை நிலைநாட்டியுள்ளார். ஒரு வயதுக் குழந்தையாக யேர்மனிக்கு தனது குடும்பத்தவர்களுடன் இடம் பெயர்ந்த இவர், இலங்கையின் திருநெல்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது 21 வயது நிறைந்துள்ள செல்வன் துஸ்யந்தன் தனது உலக சாதனை முயற்சியை 12-05- 2005 அன்று பகல் 12:00 மணிக்கு ஆரம்பித்து 15.05.2005 அதிகாலை 4:02மணிக்கு முடித்து புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார். 62 மணி.15 நிமிடங்கள் இவரின் சாதனை நேரமாகும். அமெரிக்க நாட்டவரான முன்னைய சாதனையாளர் ரண்டி றும்பெலோவ் (Randy Rumbelow) தனது சாதனையை 4-08-2004 தொடக்கம் 6-08-2004 வரையிலான 53 மணி நேர உலக சாதனையை மேற்கொண்டிருந்தார். இலங்கைத் தமிழரான செல்வன்-துஸ்யந்தன் இதனை முறியடிக்கும் வகைகயில் 9 மணி 15 நிமிடங்கள் கூடுதலான நேரமெடுத்து பழைய சாதனை முயற்சியை முறியடித்து புதிய உலக சாதனையாளராக வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

இவரின் ஆரம்ப கால சுரத்தட்டு இசை ஆசிரியராக திரு மகேஸ் ஆசிரியர் இருந்துள்ளார். அவரிடம் முறையாகப் சுரத்தட்டு இசையை பயின்றார். அத்துடன் யேர்மன் பாடசாலையிலும் இதை ஒரு பாடமாகப் பயின்று இன்று ஒலி இசைத்துறையில் உயர் படிப்பை மேற்கொண்டுவருகிறார்.

தனது கல்வியை யேர்மன் மொழியில் பயின்றாலும் தற்போது தமிழ் ஆங்கிலம் டொச் மொழிகளை எழுத பேச வாசிக்க ஆற்றல் படைத்துள்ளார்

இவரின் இந்த உலக சாதனை வெற்றி பெறுவதற்கு இவரின் பெற்றோரின் பெரு முயற்சியும் முக்கிய காரணமாகும். இவர் சாதனை முயற்சியில் ஈடுபட இராட்டிங்கன் நகர அரச அரசசார்பற்ற தாபனங்களும் யேர்மன் பத்திரிகைள் தொலைக்காட்சிகள் வானொலிகளும் யேர்மனிய மக்களும் துருக்கிய மக்களும் நிறைந்த ஆதரவு கொடுத்து உதவினார்கள். ஆனால் நமது தமிழ் மக்களின் ஆதரவு குறைவாக இருந்தது.

இவரது முயற்சிகளாக:

1.யேர்மனி, சுவீஸ்லாந்து, டென்மார்க், பிரான்ஸ், நெதர்லாந்து நாடுகளில் பல பாடல் போட்டிகளில் கலந்துகொண்டதுடன் பல பரிசுகளையும் வென்றுள்ளார்.

2.பல இசைக்குழுக்களுடன் சேர்ந்து இசை அமைத்துப் பலரின் பாராட்டையும் பெற்றுள்ளார்

3.தானே மெட்டமைத்துப் பல பாடல்களுக்கு இசையமைத்துப் பாடியுள்ளார்.

4.எட்டுப் பாடல்கள்கொண்ட அழகே!..அழகே!.. என்ற இசைப் பேழையை வெளியீடு செய்துள்ளார்.

5.சுவீஸ் நாட்டில்; தேசிய மட்டத்தில் நடைபெற்ற சுவீஸ் பொப் ஸ்ரார் (Popstars) பாடல் போட்டியில் இரண்டு சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்.

6.சுனாமிப் பாடல்களுக்கான இசையமைப்பை தானே தனித்து இயக்கியுள்ளார்.

7.இந்தியா ராஜ் தொலைக்காட்சி (Raj TV) நடாத்திவரும் ராஐ கீதம் பாடல் போட்டியில் நான்கு சுற்றுப்போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குத் தெரிவாகியுள்ளார். அடுத்த மாதம் 20ம் திகதி சென்னையில் நடைபெறும் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நன்றி,மகேஷ்பதி

இரண்டாம் உலகப்போர் குண்டு வெடித்து மூவர் பலி, அறுவர் காயம்..!

இரண்டாம் உலகப்போரின்போது ஜேர்மனியின்மீது வீசப்பட்டு வெடிக்காத குண்டொன்று நேற்றையதினம் வெடித்ததில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் அறுவர் காயமடைந்தனர் என தகவல்கள் கூறுகின்றன. இச்சம்பவம் மத்திய ஜேர்மனியில் உள்ள கோயெட்டி ஜென்நகரில் இடம்பெற்றுள்ளது. மேற்படி குண்டு அங்கு கிடந்தமை அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.

500கிலோ எடையுள்ள அந்தக் குண்டை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையில் வெடிகுண்டு நிபுணர்கள் ஈடுபட்டனர். இதற்காக அப்பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த குண்டு பயங்கரமாக வெடித்தது. இதில் 3பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 6பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நன்றி,அதிரடி