Tuesday, February 28, 2012

2012ல் கம்ப்யூட்டரும், இணையமும்

எந்த ஆண்டிலும் இல்லாத வகையில், வரும் 2012ல், பல புதிய சாதனங்கள் தகவல் தொழில் நுட்ப சந்தையில் மாற்றங்களை ஏற்படுத்த இருக்கின்றன. இதனை இந்த ஆண்டில் அறிமுகமான, பேசப்படும் சாதனங்கள் உறுதி செய்கின்றன. நிச்சயமாய் மாற்றங்களை ஏற்படுத்தப்போகும் இவற்றைப் பற்றி இங்கு காணலாம். 

1. விண்டோஸ் 8: 
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதுவரை விண்டோஸ் இயக்கங்களில் இல்லாத பல புதுமைகளைக் கொண்டு வரஇருக்கிறது. பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் டேப்ளட் கம்ப்யூட்டர்களுக்கிடையே உள்ள வேறுபாட்டினை உறுதியிட்டுக் கூற முடியாத வகையில், இரண்டையும் ஒரே இயக்கத்தில் கொண்டு வர உள்ளது. இதனால் பெர்சனல் கம்ப்யூட்டர் சந்தையின் இயக்கம் குறைந்து நோட்புக் கம்ப்யூட்டர்களுக்கும் டேப்ளட் கம்ப்யூட்டர்களுக்கும் உள்ள வேறுபாடு மறைய உள்ளது. குறிப்பாக தொடுதிரை பயன்பாடு இரண்டிலும் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் ஒரே மாதிரியாக பயன்படுத்தப்பட இருக்கிறது. 

2. குரல் வழி கட்டளை: 
தற்போது ஐ-போன் 4 எஸ், ஸ்மார்ட் போன்களில் இணைந்து கிடைக்கும் சிரி (Siri) இயக்க தொழில் நுட்பத்தின் வெற்றி, இன்று பலரை குரல் வழி கட்டளைக்கு தயார் படுத்தியுள்ளது. இந்த சாப்ட்வேர் தொழில் நுட்பத்தின் மூலம் குரல்வழி கட்டளைகளைக் கொடுத்து மெசேஜ் அனுப்பலாம்; அழைப்புகளை வரிசைப்படுத்தி ஏற்படுத்தலாம்; சந்திப்புகளை அமைக்கலாம். நீங்கள் சாதாரணமாகப் பேசி இதனைப் பக்குவப்படுத்தி, பின்னர் கட்டளைகளை போகிறபோக்கில் அளிக்கலாம். அவை அனைத்தும் நிறைவேற்றப்படும். போனில் மைக் ஐகான் ஒன்றைத் தட்டி, செய்தியை குரல் வழிச் செய்தியாகத் தரலாம். அனைத்தும் தந்து முடித்தவுடன், உங்கள் செய்தி டெக்ஸ்ட்டாக மாற்றப்பட்டு, பின்னர் உங்கள் அனுமதி பெற்று அனுப்பப்படும். பெர்சனல் கம்ப்யூட்டரில் இது பயன்படுத்தப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே கூறலாம். 

இந்த தொழில் நுட்பம் எங்கு இயங்காது என்று தற்போது எண்ணப்படுகிறதோ, அங்கு இது சோதனை செய்து பார்க்கப்பட்டு நிச்சயம் கம்ப்யூட்டரிலும் பிற சாதனங்களிலும் கிடைக்கும். இணைய தளங்களிலும் சிரி இயக்க இன்டர்பேஸ் போல அமைக்கப்படலாம். இதன் மூலம் நாம் அதில் சென்று வருவது எளிதாக்கப்படலாம். பெரும்பாலும் இது போன்ற சோதனைகள் சீனாவில் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

3.குறையும் மின் அஞ்சல் பயன்பாடு:
இது பல ஆண்டுகளாகவே பேசப்பட்டு வருகிறது. இனி இமெயில் புரோகிராம்கள் தேவைப்படாது. 1992 ஆண்டுக்குப் பின் ஹாட்மெயில் அல்லது இமெயில் சேவை தரத் தொடங்கிய நிறுவனங்களில், இமெயில் அக்கவுண்ட் வைத்துக் கொண்டு, அதனைப் பெருமையாகப் பேசுவது ஒரு டிஜிட்டல் ஸ்டேட்டஸ் அடையாளமாக இருந்து வந்தது. ஆனால், இப்போது வளர்ந்து வரும் சிறுவர்கள், இமெயில் அக்கவுண்ட் எல்லாம் வைத்துக் கொள்வது இல்லை. சமுதாய இணைய தளங்களில் தங்களைப் பதிவு செய்து கொண்டு செயல்படுகின்றனர். தங்கள் குழுக்களோடு பதிவுகளைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றனர். 

4.தொலைக்காட்சிகளில் மாற்றம்:
தொலைக்காட்சி பெட்டிகள் கம்ப்யூட்டர் பயன்பாட்டினை மேற்கொள்ளும் காலம் வந்துவிட்டது. இணைய பயன்பாடு கொண்ட டிவிக்கள் வரத் தொடங்கி விட்டன. திரைப்படங்களையும், தேவைப் படும் காட்சிகளையும், கேம்ஸ்களையும், விளையாட்டுப் போட்டிகளையும் கேட்டு வாங்கிப் பார்ப்பது, இந்த டிவிக்கள் மூலம் வளர்ச்சி அடையும். இத்தகைய சாதனங்கள், இனி கம்ப்யூட்டர் மற்றும் இணையப் பயன்பாட்டினையே முதன்மையாகக் கொண்டு இயங்கும். அவற்றுடன் டிவி சேனல்களையும் காட்டும். 

5. டிஜிட்டல் ஸ்டோர்கள்:
இனி அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளையோ, வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களையோ நாம் வெளியே வாங்க வேண்டியதிருக்காது. அந்த அந்த நிறுவனங்களின் அப்ளிகேஷன் ஸ்டோர் களிலிருந்து இணையம வழியாக நம்பிக்கையுடன் வாங்கிக் கொள்ளலாம். ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் இந்த வழியில் நிலையான தங்கள் வர்த்தகத்தை வளர்த்துக் கொண்டு வருகின்றன. 

6. தடிமன் குறையும்:
டிஜிட்டல் சாதனங்களின் தடிமனைக் குறைத்து பாக்கெட்களில் வைத்து இயக்கும் அளவிற்கு, ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் சாதனங்களின் தடிமனைக் குறைத்து வருகின்றன. இதற்கு முதலில் வழி வகுத்தது ஐ-பேட் மற்றும் அல்ட்ரா புக் கம்ப்யூட்டர்களே. கம்ப்யூட்டர் மட்டுமின்றி, மொபைல் போன்கள், ஸ்மார்ட்போன்கள், டேப்ளட் பிசிக்கள், டிவிக்களும் தங்கள் தடிமன் குறைந்த பதிப்புகளை வெளியிட்டு வருகின்றன. வரும் 2012ல் இவை மட்டுமே விற்பனையாகும். 

7.அனைத்திலும் டேப்ளட் பிசி:
சாம்சங் நிறுவனம் டேப்ளட் பிசி இணைந்த ரெப்ரிஜிரேட்டர் ஒன்றை வடிவமைத்து விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இதனை மற்ற சாதனங்கள் வடிவமைக்கும் நிறுவனங்களும், ரெப்ரிஜிரேட்டர் தயாரிக்கும் நிறுவனங்களும் பின்பற்றலாம். கார்களின் டேஷ் போர்டில், டேப்ளட் பிசிக்கள் இணைந்து கிடைப்பது இனி கார் ஒன்றின் அம்சமாகக் கருதப்படும். 

8. ஒருவரோடு ஒருவர்: 
இனி ஆன்லைன் கேம்ஸ் எல்லாம் தேவைப்படாது. ஸ்மார்ட் போன்கள் வழியாக இருவர் தனி நபர் விளையாட்டுப் போட்டியில் ஈடுபடலாம். இதற்கு நெட்வொர்க் தேவைப்படாது. இரண்டு போன்கள் தங்களுக்குள் நெட்வொர்க் உதவியின்றி பேசிக் கொள்ள முடியும். இந்த வசதி வலுப்படுத்தப்பட்டு, பல வகையான தொடர்புகளை ஏற்படுத்தித் தரும். எனவே வரும் ஆண்டில் டிஜிட்டல் சாதனங்களின் தடிமன் மிக மிகக் குறைவாக இருக்கும்; சமுதாய இணைப்பு தருவதாக இயங்கும்;ஒருவருக்கொருவர் இணைப்பு கொள்வது, பேசுவதும், விளையாடுவதும், தகவல்களைப் பரிமாறிக் கொள்வதும் மிக மிக எளிதாக அமையும்.