Wednesday, April 14, 2010

காதுகேளாதவர்களுக்கு நவீன சிகிச்சை 
மருத்துவத்துறை ஐம்புலன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இனி ஊனம் என்ற சொல்லையே மறந்துவிடும் அளவிற்கு அரிய சாதனைகளை படைத்து வருகின்றது. இதய மாற்று அறுவை சிகிச்சை, கிட்னி மாற்று அறுவை சிகிச்சை, செயற்கை சுவாசப்பை, செயற்கை கண் இவ்வாறு மனித உடலில் இன்றியமையாத பாகங்கள் செயல்படாத நிலையில் இருந்தால் சிகிச்சையின் மூலம் வெற்றிகரமாக மாற்றி செயல்பட வைத்து வருகின்றனர். கண் பார்வைக்கு மூக்குக் கண்ணாடி அணிந்த காலம் போய் காண்டக்ட் லென்ஸ் பொருத்தும் நிலை வந்துள்ளது. இதை பொருத்திக் கொள்வதன் மூலம் ஹகண்பார்வை கோளாறு உள்ளவர்' என்பதை மறைத்துவிடுகிறது. இதே போல் செயற்கை மூட்டு, செயற்கை கால், கை என்று ஊனமுற்றவர்களையும் நடந்தோடச் செய்யும் நவீன செயற்கை உறுப்புகளும் கண்டறியப்பட்டுள்ளன.

காதுகேளாதவர்கள் வாக்மேன் கேட்பது போல காதில் இயர்போன் போன்ற கருவியை செருகிக் கொண்டு சட்டையில் சிறிய ட்ரான்சிஸ்டர் போல் உள்ளக் கருவியை மாட்டிக்கொண்டு செல்வார்கள். இப்படி காதில் மாட்டிக் கொண்டு வெளியில் சென்றால் கேட்கும் திறனில் பாதிப்பு உள்ளது என்று மற்றவர்கள் அறிந்து கொள்ளும் நிலை இருந்தது. அறிவியல் முன்னேற்றம் ஏற்பட ஏற்பட இதெல்லாம் சுருங்கி காதின் பின்புறம் சிறிய கருவி செருகியிருப்பார்கள். இது ஓரளவு அவர்கள் ஊனத்தை மறைத்ததோடு கேட்கும் திறனையும் பெற முடிந்தது. இருந்தாலும் எத்தனையோ பேர் இதற்காக வெட்கப்பட்டவர்களும் உண்டு. காது மெஷின் மாட்டியிருப்பதால் நம்மை செவிடர் என்று மற்றவர்கள் அறியக்கூடும் என்ற ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்தது அவர்களிடம். ஆனால் அவர்கள் காதில் தேன் வந்து பாய்வது போல ஒரு விஞ்ஞானப் புரட்சி நடந்திருக்கின்றது. ஆம்! அறிவியலின் அபார வளர்ச்சியில் பயோனிக் காது எனப்படும் செயற்கை காது இப்பொழுது பொருத்தப்படுகிறது. இதைப் பற்றி விரிவாக காணலாம்.

மைக்ரோபோன் மூலம் பெறப்படும் ஒலி மின் சிக்னல் மூலம் நரம்பு தூண்டப்பட்டு செய்தியை அனுப்புகின்றது. காது கேளாதவர் இதற்கான கருவியை எப்பொழுதும் அணிந்து கொள்ளவேண்டும். இது பழைய முறை. ஆனால் பயோனிக் இயர் என்ப்படும் புதிய முறையில் காதின் பின்புறம் தோலுக்கடியில் நிரந்தரமாக பொருத்தப்படுகிறது ஒரு கருவி. இதன்மூலம் காதுகேளாதவர் மற்றவர்களைப் போல சாதாரணமாக கேட்கலாம்.

பயோனிக் இயர் எனப்படும் இதை காக்ளியர் மாற்று அறுவை சிகிச்சை என்று அழைக்கிறார்கள். காக்ளியர் எனப்படும் காதில் உள்ள இந்த உறுப்பின் வேலை, செவியால் பெறப்படும் ஒலியை இந்த சவ்வு பெற்று நரம்புகள் மூலம் தூண்டப்பட்டு கேட்கும் திறனை அறியச் செய்கின்றது. இம்முறையில் பயோனிக் இயர் எனப்படும் இந்த செயற்கை கருவியை காதின் பின்பகுதியின் தோலுக்கடியில் பொருத்தி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதன் மூலம் செவிடான ஒருவர் நன்றாக கேட்கும் ஆற்றலை பெறமுடிகிறது. இதனால் பெறப்படும் ஒலி மின் சிக்னல்களாகப் பெறப்பட்டு செவி நரம்புகளுக்கு செய்தியாக அனுப்பப்படுகிறது.

சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் முதன்முறையாக 35 வயதுள்ள ஒரு பெண்ணுக்கு வெற்றிகரமாக இந்த பயோனிக் இயர் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இம்மருத்துவ மனையில் தொண்டை,மூக்கு, காது பிரிவின் தலைவர் டாக்டர் ஹுசைன் அப்துல் ரகுமான் கூறுகையில், "காது கருவி வைத்தும், கேட்கும் திறனை இழந்த இப்பெண்ணுக்கு இந்த பயோனிக் இயர் மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டோம். வெற்றிகரமாகவும் முடிந்தது. இதன்மூலம் அந்தப் பெண் மற்றவர்களைப் போலவே காது கருவி இல்லாமலேயே கேட்கும் திறனைப் பெற்றார். இனி நாங்கள் சிறிய வயதினருக்கும் மற்றும் 6 மாதக் குழந்தைகளுக்கும் கூட இந்த சிகிச்சையை மேற்கொள்ள இருக்கின்றோம". என்றார்.

இதற்கு ஆகும் செலவு கிட்டத்தட்ட 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய். தற்போது இந்த நவீன சிகிச்சைக்கு அதிக செலவு ஆகிறது என்றாலும் வருங்காலத்தில் வெகுவாக குறையவும் வாய்ப்பு உள்ளது.

நன்றி, சகோதரர் -எம்.ஜே.எம்.இக்பால் 

1 comment:

  1. உங்களின் வழிகாட்டுதல்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.