மாலைதீவில் புதுமை நிகழ்ச்சி
மாலைத்தீவு அமைச்சரவை கூட்டம், கடலுக்கு அடியில் வெற்றிகரமாக நடந்தது. உலகிலேயே கடலுக்கு அடியில் நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் வெப்பமயமாகி வருவதால் துருவப் பகுதியில் பனிமலைகள் உருகி, கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் வரும் 2100ஆம் ஆண்டில் மாலத்தீவு கடலில் மூழ்கிவிடும் என, ஐ.நா., சுற்றுச்சூழல் அமைப்பு எச்சரித்திருந்தது.
ஏனெனில் கடல் மட்டத்தில் இருந்து நூறடிக்கும் குறைவான உயரத்தில் உள்ளது இத்தீவு .எனவே, இந்த பயங்கரத்தை தடுக்க உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டும், என்பதை வற்புறுத்துவதற்காக நேற்று முன்தினம் மாலத்தீவு அமைச்சரவைக் கூட்டம் கடலுக்கு அடியில் நடந்தது. தலைநகர் மாலேவில் இருந்து 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கிரிபுஷி தீவில், ஆறு மீட்டர் ஆழத்தில் அதிபர் முகமது நஷீத்(42) தலைமையில் கடலுக்குள் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.
அமைச்சர்கள் அனைவரும் கடலில் முத்தெடுக்கும் வீரர்களை போன்ற உடையுடன் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 45 நிமிடம் இவர்கள் கடலுக்கு அடியில் இருந்தனர். அமைச்சரவைக் கூட்டம் 25 நிமிடங்கள் நடந்தது.”உலகம் வெப்பமடைவதால் எங்கள் நாடு கடலில் மூழ்குவதிலிருந்து காப்பாற்ற உலகத் தலைவர்கள் முன்வரவேண்டும்’ என, இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது. அமைச்சர்கள் தங்கள் கையில் இருந்த வெள்ளைப் பலகையில் எழுதி தங்கள் கருத்தை தெரிவித்துக் கொண்டனர்.
கடலுக்கு அடியில் தங்கியிருப்பதற்காக, இந்த அமைச்சர்கள் கடந்த இரண்டு மாதங்களாக கடலில் மூழ்கும் பயிற்சி பெற்றனர். மாலத்தீவு நூற்றுக்கும் அதிகமான தீவுகளை உள்ளடக்கியது. இதில் 90 சதவீத தீவுகள் கடல் மட்டத்திலிருந்து ஒரு மீட்டர் உயரத்தில் உள்ளது.
நன்றி,நிதர்சனம்
No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.