இறைவன் கொடுத்த உடல் உறுப்புக்கள் எல்லாம் நன்றாகவே இருந்தாலும், எதிர்மறைச் சிந்தனைகளை மனம் முழுதும் நிரப்பிக்கொண்டு எதையும் செய்யாமல் முடங்கிக்கிடப்பவர் பலர். சுண்டுவிரலில் சுளுக்கு ஏற்பட்டால்கூட உடன் இருப்பவர்களைக்கலங்க அடிப்பவர் பலர். இவர்களுக்கு மத்தியில் தனக்கு ஏற்பட்ட மிகக் கொடுமையான விபத்தில் இருந்து மீண்டெழுந்தது மட்டுமின்றி, தான் விபத்தில் அடிபட்டதையும் அதிலிருந்து மீண்டதையும் 'மகிழ்ச்சியான கதை' என்று கூறும் ஒரு வித்தியாசமான பெண் டேனியலா கார்சியா.
பல் மருத்துவரான தாய்க்கும், சிலி நாட்டின் முக்கியமான நகரமான சாண்டியாகோ நகரத்தில் அமைந்துள்ள 'சிலி பாண்டிஃபிசியா கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில்' மருத்துவத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றும் தந்தைக்கும் மகளாகப் பிறந்த டேனியலா அழகு, அறிவு, ஆற்றல் இவை கலந்த அற்புதக்கலவை. படிப்பிலும் விளையாட்டிலும் சுட்டியாக விளங்கிய டேனியலா மிகக்கடுமையான நுழைவுத்தேர்வுகளைத் தாண்டி தன் தந்தை பணியாற்றும் பல்கலைக்கழகத்திலேயே மருத்துவ மாணவியாகச் சேர்ந்தாள். தனது நான்காவது வருடப்படிப்பில் இருந்த டேனியலா, தேர்வுகளுக்கு சிறிது தினங்களுக்கு முன், தன் கால்பந்துக்குழுவின் வற்புறுத்தலின் காரணமாக 2002ம் வருடம், அக்டோபர் முப்பதாம் நாள் 'டெம்யுகோ'நகரத்தில் நடக்கவிருந்த விளையாட்டுப்போட்டிகளுலில் கலந்துகொள்ள தனது கல்லூரி நண்பர்களுடன் புகைவண்டியில் புறப்பட்டாள். டெம்யுகோ நகரத்திற்கு ஏராளமான மாணவமாணவிகள் விளையாட்டுப்போட்டிகளுக்குச் செல்வதற்காக புகைவண்டியில் பழைய, அழுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன. மனதில் ஏதோ சொல்லத்தெரியாத ஒரு உறுத்தல் நிலவியபோதும், டேனியல்லா தன் பயணத்தைத் துவக்கினாள்.
சற்று நேரம் கழித்து, அந்தப்பெட்டியில் இருந்த இரு நண்பர்கள், அடுத்த பெட்டியில் தனது குழுவினர் இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு வரலாம் என்று அழைத்ததால் அவர்களுடன் சென்றாள் அவள். அவள் ஒரு பெட்டிக்கும் இன்னொரு பெட்டிக்கும் இருந்த பாதை வழியாகச் செல்ல முயல்வதற்கும், அந்தப் பழைய புகைவண்டிப்பெட்டியில் இருந்த இடைவெளி, வண்டி ஒரு வளைவில் திரும்பியபோது விரிவடைவதற்கும் சரியாக இருந்தது. டேனியல்லாவிற்கு மீண்டும் விழிப்பு வருகையில் அவள் தண்டவாளத்தின் நடுவில் கிடந்தாள். தனது கைகளையும் கால்களையும் அவள் அசைக்க முயல்கையில்...........பேரதிர்ச்சி. அவள் தனது கால்கள், கைகள் அனைத்துமே துண்டாகிக் கிடந்ததை உணர்ந்தாள். மருத்துவ மாணவியான அவள் தனது இரத்த இழப்பு மிகவும் அதிகம் என்பதையும், உடனடியாக மருத்துவ உதவி கிடைக்கவில்லை என்றால் தான் இறந்துவிடுவோம் என்பதையும் உணர்ந்துகொண்டாள். நட்ட நடு இரவில், இருப்புப்பாதையில் கிடக்கும் தான் இன்னொரு புகைவண்டி வந்தால் கண்டிப்பாகப் பிழைக்க மாட்டோம் என்று நினைத்த அவள் பீதியடைவதில் பலனில்லை என்று தன்னைத் தானே தேற்றிக்கொண்டு, தனது உடல் உறுப்புக்கள் துண்டாகியிருந்த பொழுதும், மனம் தளராமல் எப்படியோ ஊர்ந்து தண்டவாளத்தை விட்டு நகர்ந்தாள். பின் 'உதவி உதவி' என்று உரத்த குரலில் கத்தத் தொடங்கினாள்.
பண்ணைப் பணியாளரான ரிகார்டோ தனது மனைவிக்குத் தெரியாமல் புகை பிடிப்பதற்காக தன் வீட்டின் அருகில் இருந்த இரயில் தண்டவாளத்தின் பக்கம் வந்தபொழுது ஒரு பெண் உதவிகேட்டு அலறும் குரல் கேட்டது. அருகில் சென்று அவளைப்பார்த்த அவர் பதறிப்போனார். 'பொறு, நான் உதவியுடன் வருகிறேன்' என்று சொல்லிவிட்டு ஓடி, பக்கத்தில் இருந்த பெட்ரோல் நிலையம் சென்று ரான்குவா நகர அவசர உதவி மையத்தைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
அவசர உதவி மையத்தினர் அதிசயப்படும் அளவு உணர்வுடனும் தெளிவுடனும் இருந்த டேனியலா, தனது பெயர், தாய்தந்தையர் பெயர், முகவரி, தொலைபேசி எண் அனைத்தையும் கூறினாள். மருத்துவமனைக்கு அவசரமாக எடுத்துச் செல்லப்பட்டு, அறுவை சிகிச்சை அறைக்குள் நுழையுமுன், 'நான் மீண்டும் நன்றாக ஆகிவிடுவேனில்லையா?' என்று அவள் கேட்டபொழுது அன்பு நிறைந்த பார்வையும் ஆறுதல் அளிக்கும் குரலும் உடைய மருத்துவர் ஒருவர் 'நீ கண்டிப்பாக குணமாகிவிடுவாய்' என்று கூறியபின்தான் 'இனி தான் செய்வதற்கு ஒன்றுமில்லை, மருத்துவர்கள் தன்னைக் கவனித்துக்கொள்வார்கள்' என்ற நம்பிக்கையுடன் கண்களை மூடிக்கொண்டாள் அவள்.
ஆறு வாரங்கள் ரான்குவா மருத்துவமனையில் தங்கியிருந்த டேனியல்லா, உறுப்புகளைச் சீரமைப்பதற்கும், செயற்கை உறுப்புகள் பொருத்துவதற்கும் புகழ்பெற்ற பிலடெல்பியா நகரத்தில் அமைந்திருந்த, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மோஸ் சீரமைப்பு நிலையத்தில் அவள் தந்தையால் சேர்க்கப்பட்டாள். காலை ஒன்பது மணி முதல் மாலை ஆறு மணிவரை அவளுக்குப் பல்வேறு விதமான பயிற்சிகள் நடப்பதற்கும், உணவு உண்பதற்கும், உடையணிவதற்கும் பற்பல மருத்துவக்குழுக்களால் தொடர்ந்து கொடுக்கப்பட்டன. பிளாஸ்டிக்கினால் ஆன செயற்கை உறுப்புகள் அவளுக்குப் பொருத்தப்பட்டு, மருத்துவரின் உதவியோடு எழுந்து நின்ற பொழுது அவள் அனுபவித்த மகிழ்ச்சி அவளுக்கே அதிசயமாக இருந்தது. விபத்துக்கு முன்பு கூட இத்தகைய ஒரு பெரிய மகிழ்ச்சி தனக்குக் கிடைத்ததில்லை. ஒரு துயரமான நிகழ்வு இத்தனை இன்பத்தைத் தனக்கு அளிக்க முடியும் என்பது தனக்கு வினோதமாக இருக்கிறது என்று தன் தாயிடம் கூறினாள் டேனியல்லா.
பிலடெல்பியா மோஸ் மருத்துவமனையில் ஆறு வாரங்கள் தங்கியிருந்த பின் தனது ஊர் திரும்பிய டேனியல்லா, சில மாதங்களுக்குப் பின் மீண்டும் அங்கு சென்று தனது செயற்கை உறுப்புகளில் சில நுட்பமான மாறுதல்களைச் செய்துகொண்டாள். ஒரு வருட இடைவெளிக்குப் பின் மீண்டும் தனது மருத்துவப்படிப்பைத் தொடர்ந்த அவள், விபத்துக்கு முன்பை விட அதிக மதிப்பெண் பெற்று இப்பொழுது தன்னைப்போலவே விபத்தினால் உறுப்புக்களை இழந்தவர்களுக்கான மருத்துவராகத் திகழ்கிறாள்.
இருபத்தேழு வயதாகும் டேனியல்லா, தனக்குப் பிடித்த பொழுதுபோக்கான மோட்டார்பைக் சவாரி செய்வது முதல், தனது நோயாளிகளைப் பரிசோதனை செய்வது வரை, தனக்குத் தானே அலங்காரம் செய்து கொள்வது, சமைப்பது, எழுதுவது எல்லாம் தனது செயற்கைக் கையில் பொருத்தப்பட்டுள்ள கொக்கி போன்ற அமைப்பின் உதவியால்தான். 'இந்தக் கொக்கியைக்கொண்டு தொடும்பொழுதுகூட என்னால் நோயாளியின் உடலில் உள்ள வேறுபாடுகளை உணரமுடிகிறது. ஆனால் அந்த உணர்ச்சியை என்னால் விளக்க முடியாது' என்று சொல்லும் டேனியல்லா, தான் காதலித்த 'ரிகார்டோ ஸ்ட்ர'பை மணந்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறாள். 'அந்த விபத்துக்குப் பின் தனது இழப்பை எண்ணி அழுதுகொண்டு இருந்திருந்தால் ஒருவேளை எங்கள் காதல் முறிந்திருக்கலாம். ஆனால் டேனியல்லாவின் அசாதாரணமான தைரியம், அந்த விபத்து அவளது வாழ்க்கையைக் குலைக்கவிடாமல் செய்து விட்டது. இப்பொழுது என் வாழ்நாள் முழுவதும் நான் டேனியல்லாவுடன்தான் வாழ விரும்புகிறேன்' என்கிறார் ரிகார்டோ.
தனது அனுபவத்தை எழுதி டேனியல்லா வெளியிட்ட வாழ்க்கை வரலாறு, ஏராளமான பதிப்புகள் விற்று, சாதனை படைத்துள்ளது. தினமும் பலரிடமிருந்தும் அவளது வாழ்க்கை தங்களை எப்படி ஊக்குவித்தது என்று எழுதும் கடிதங்களும் தொலைபேசி அழைப்புகளும் குவிகின்றன. 'என் கதை இத்தனை பேருக்கு ஊக்கமளிக்கும் என்று நான் நினைக்கவேயில்லை.' என்று ஆச்சர்யமடைகிறாள் டேனியல்லா.
தான் இழந்தது குறித்த வேதனையில் மூழ்காமல் தன் மருத்துவர் எஸ்க்வெனாசி கூறிய வரிகளான 'நீ உன் வாழ்க்கையை எப்படி அமைக்கிறாயோ அப்படித்தான் உன் வாழ்க்கை இருக்கும்' என்ற வரிகளை மனதில் கொண்டு, தனது விபத்தைக்கூட ஒரு வியக்கத்தக்க பரிசு என்று கருதி ஆனந்தமாக வாழும் டேனியல்லா கார்சியாவைப் பார்த்து, நாம் அனைவரும் வாழ்க்கையை நிறைவுடன் வாழக் கற்றுக்கொள்ளவேண்டும்.
Thanks to Eezhanesan
No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.