Saturday, June 12, 2010

சிங்காரச் சென்னை - ஒரு பார்வை!



சென்னை திருவல்லிக்கேணி பள்ளிவாசல்

தமிழகத்தின் தலைநகரமான சென்னை. கடந்த 15 ஆண்டுகளில் இங்கு பொருளாதாரம் உயர்ந்திருக்கிறது. கலாச்சாரம் மாறியிருக்கிறது. வாழ்க்கை வசதிகள் பெருகியிருக்கின்றன. சென்னைக்கு இப்போது 368 வயதாகிறது. ஆனாலும் இளமையாக ஜொலிக்கிறது.

இன்றைய தேதியில் சென்னையில் புற நகர்களையும் சேர்த்து 80 லட்சத்து 63 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள்.

சதுர கி.மீ.க்கு 24 ஆயிரத்து 400 பேர் குடியிருக்கிறார்கள். தினமும் பரபரக்கும் 375 ரூட்களில் 2 ஆயிரத்து 773 பஸ்களில் சுமார் 40 லட்சம் பயணிகள் அங்கும், இங்குமாக ஓடுகிறார்கள்.
விஷயம் இதுவல்ல! உலக நாடுகளின் ஏகோபித்த பார்வை இப்போது சென்னை மீதிருக்கிறது.
இதற்கு காரணம் அதன் மள, மள முன்னேற்றம்! கடந்த 2002-2003-ல் பொருளாதாரத்தில் உலக அளவில் 179-வது இடத்தில் இருந்த சென்னை இந்த 2006-2007-ல் 138-வது இடத்திற்கு உயர்ந்திருக்கிறது.
ஆசிய அளவில் 31-வது முக்கி நகரமாக காட்சியளிக்கிறது சென்னை. சென்னைக்கு மேம்பால நகரம் என்று கூட பெயர் வைக்கலாம்; அந்த அளவுக்கு எங்கு பார்த்தாலும் மேம்பாலங்கள். இந்தியாவின் வளரும் கமர்ஷியல், இன்டஸ்டீரியல் நகரங்களில் 3-வது இடம் சென்னைக்குத் தான்! ''இந்தியாவின் ஆட்டோ மொபைல் கேப்பிட்டல்'' என்ற பெயரும் கூட சென்னைக்கு கிடைத்தாகிவிட்டது.
கொல்கத்தாவையும், மும்பையையும் பின் னோக்கி தள்ளிவிட்டு டெல்லிக்கு அடுத்தபடியாக சென்னை `பாயும்புலி'யாகி இருக்கிறது. கம்பியூட்டர் சாஃப்டுவேர், எலக்ட்ரானிக்ஸ், கெமிக்கல்ஸ், லெதர், பிளாஸ்டிக், வாகன உற்பத்தி என பல்வேறு துறைகளிலும் சென்னை சக்கைபோடு போட ஆரம்பித்திருக்கிறது.



மேலே படத்தில் காண்பது சென்னைக்கு அருகிலுள்ள சிறுசேரியில் கட்டப்பட்டு வரும் டாடா கன்ஸல்டிங் சர்வீஸின் கட்டிடங்களில் ஒன்றாகும் இது. இதுபோல் 7 கட்டிடங்கள் ஒரே இடத்தில் கட்டப்பட்டு வருகின்றன. 20,000 பேர் ஒரே இடத்தில் பணி செய்யும் விதமாக தெற்காசியாவின் மிகப்பெரிய சாஃப்ட்வேர் கேந்திரமாக உருவாகி வருகிறது.
ஆண்டுக்கு சுமார் ரூ.25 ஆயிரம் கோடிக்கும் மேல் தமிழகத்திலிருந்து கம்பியூட்டர் சாஃப்டுவேர் பொருட்கள் மேலை நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதில் 70 சதவீதம் அமெரிக்காவிற்கும், 10 சதவீதம் இங்கிலாந்திற்கும் செல்கிறது. இதில் இந்தியாவில் 3-வது இடம் சென்னைக்கு!
ஹுண்டாய், ஃபோர்டு, மிட்சுபிசி, அசோக் லேலண்டு, டி.வி.எஸ்., மகேந்திரா உள்பட பல நிறுவனங்கள் சேர்ந்து ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் புதிய கார், லாரிகளை உற்பத்தி செய்து உலக நாடுகளுக்கு இங்கிருந்து அனுப்புகின்றன. வாகனத் தயாரிப்புகள் மட்டும் சுமார் ரூ.3 ஆயிரம் கோடியில் நடை பெறுகின்றன. இந்தியாவின் மொத்த வாகன உதிரிப்பாகங்கள் தயாரிப்பில் சென்னையின் பங்கு 35 சதவீதம் ஆகும்.

உலகின் 10 பிரபல செல்ஃபோன் மாடல்களை ரூ.650 கோடியிலான `நோக்கியா' நிறுவனம் தயாரிப்பது இங்கிருந்து தான். இதேபோல் மோட்டாரல்லாவின் பங்கு ரூ.460 கோடி. பெருகி வரும் புதிய தொழிற்சாலைகளால் பெரும்புதூரில் மட்டும் 50 ஆயிரம் பேருக்கு நேரிடையாகவும், மறைமுகமாகவும் வேலை கிடைத்திருக்கிறது.

இது தவிர தகவல் தொழில் நுட்பத்துறைகளில் 1 லட்சம் பேரும், கால் சென்டர் மற்றும் பி.பி.ஓக்களில் 1 லட்சம் பேரும் புதிதாக வேலை பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். வருகிற 2008-ல் இவர்களின் எண்ணிக்கை 8 லட்சம் ஆகும் என்கிறார்கள். இவற்றின் எதிரொலியாக சென்னையைச் சுற்றிலும் நில மதிப்பும், கன்ஸ்ட்ரகஷன்ளும் உயர்ந்திருக்கின்றன.


தற்போது திருவான்மிஞ்ரில் சதுர அடிக்கு ரூ.5 ஆயிரமும், அடையாரில் ரூ.6 ஆயிரமும், ராஜா அண்ணாமலைபுரத்தில் ரூ.8 ஆயிரமும், வேளச்சேரியில் ரூ.4 ஆயிரமும், போரூரில் ரூ.2,500மாக வீடுகளின் மதிப்பு அனைத்து இடங்களிலுமே அதிகரித்து இருக்கிறது. ரியல் எஸ்டேட் பிசினஸ் 400 மடங்கு பெருகியிருக்கிறது. இருந்த போதிலும் சென்னையை பொறுத்த வரையில் 40 சதவீதம் பேர் நிலமற்றவர்களாக இருக்கிறார்கள்.

இவை ஒரு புறமிருக்க வியாபார நிறுவனங்களும் போட்டா போட்டி போட்டுக்கொண்டு `பிசினஸ்' சில் வெகுவாக வளர ஆரம்பித்திருக்கின்றன. ஒட்டுமொத்தமாக இவற்றின் ஒரு நாள் பிசினஸ் சுமார் ஆயிரம் கோடியை தாண்டுகிறது.

கோடி, கோடியாக சம்பாதிக்க ஆரம்பித்திருக்கும் சென்னையில் தனி மனித வாழ்க்கையும் கூட வெகுவாக உயர்ந்திருக்கிறது. முன்பை விடவும் தனியார் நிறுவனங்கள் இப்போது அதிக சம்பளம் தரத்தொடங்கியிருக்கின்றன. ஒரு கம்பியூட்டர் என்ஜினீயர் சாதாரணமாக ரூ.50 ஆயிரம் சம்பளம் பெறுகிறார். இது தவிர நிறுவனங்கள் தேவையான கடன் வசதிகளையும் செய்து தருகின்றன.

தொழில் செய்பவர் களுக்கும் கூட சாதாரண சம்பாத்யம் அல்ல. 2 கம்பியூட்டர்களை வைத்து சில டிசைன்களை செய்து தருபவர் மற்றும் ரூ.20 ஆயிரம் லெகுவாக சம்பாதிக்கிறார். பெட்டிக்கடைக்காருக்கு கூட எச்செலவும்போக மாதம் ரூ.5 ஆயிரம் தேறுகிறது. இத்தகைய வரவுக்கு தக்கபடி சென்னையின் செலவும் ஒரு பக்கம் இருக்கிறது. நடுத்தரவாசிகள் சிக்கித் தவிக்கும் கண்ணீர் கதை ஒருபுறம் இருக்கத் தான் செய்கிறது.


வாடகை, பால், பலசரக்கு, பஸ் செலவு, குழந்தைகளின் எதிர்காலம் என அவர்கள் விழிபிதுங்கித்தான் போகிறார்கள்.

இதில் மிகப்பெரிய விசித்திரம் மேற்சொன்னவை எல்லாமே மத்திய சென்னைக்கும், தென்சென்னைக்கும் மாத்திரமே பொருந்தும். வடசென்னைக்காரர்கள் நிலைமை முற்றிலும் தலைகீழ். முன்பு கிராமங்களில் தாழ்த்தப்பட்டவர்களை ஒதுக்கி வைத்திருந்த காலனி போன்ற கதை இவர்களுடையது.

பெரிய தொழிற்சாலைகள், ஓட்டல்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் என எதுவும் கிடையாது. நடுத்தரத்திற்கு கீழானது தான் இவர்களது வாழ்க்கை.

அதேசமயம் தமிழகத்தில் வேறெங்கும் இல்லாத ஆடம்பரச் செலவு சென்னையில் இன்னொரு பக்கம் கும்மாளம் போடுகிறது. ஆடம்பரக் கார்கள், அதிகரிப்பு, ஒசத்தியான பொருட்களின் பர்ச்சேஸ், நூதனமான சூதாட்டங்கள், மேலை நாட்டு பயணங்கள்.


ஏழை, பாழைகள் 12 கி.மீ. நீளமுள்ள மெரினா கடற்கரையின் ஏதோ ஒரு மூலையில் இருந்தபடி ஓசிக்காற்று வாங்கி வீடு செல்ல, நட்சத்திர ஓட்டலில் ஏ.சி. அறையில் அமர்ந்து பெக், பெக்காக உள்ளே தள்ளி மேற்கத்திய இசைக்கு தள்ளாடி ரூ.5 ஆயிரம் பில் தருபவர்களும் ஆயிரக் கணக்கில் இருக்கிறார்கள்.

ஒரு நட்சத்திர ஓட்டலில் ரூ.600 விலையுள்ள வஞ்சிற மீன் வருவல் தினமும் 100 விற்று காலியாகிறது. அந்தஸ்தான ஒரு ஓட்டலில் தண்ணியடிக்கும் பில் மட்டும் தினமும் ரூ. 2லட்சம் கல்லாவில் சேர்கிறது.

சென்னையின் வசதிபடைத்த வீட்டுக்குழந்தைகள் சராசரியாக தினமும் ரூ.100 பாக்கெட் மணியாக காலி செய்கிறார்கள். ஓட்டல்களிலும், ஷாப்பிங் காம்ப்ளக்சுகளிலும், ஜவுளிக்கடைகளிலும் எல்லாமே மேலைநாடுகள் போல உருமாறி, நினைத்த சந்தோஷத்தை தர வல்லவையாக இருக்கின்றன. எச்சரிக்கையாக இருக்க வேண்டியது பெற்றோர்கள்தான். இல்லையென்றால் அவர்கள் பிள்ளையின் எதிர்காலம் கேள்விக்குறிதான்.


மெரினா இல்லாத சென்னையா?!
நன்றி,நிடூர்

2 comments:

  1. WOw. I am not in chennai now, but I have lived there for 12 long years. I long to visit chennai again :)

    ReplyDelete
  2. Thanks to www.indianjobtalks.com

    ReplyDelete

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.