Friday, July 16, 2010

'குப்பைத் தீவு'

  பசுபிக் கடலில் ஒரு 'குப்பைத் தீவு' இருக்கின்றதென்றால் ஆச்சரியமாக இல்லையா?
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தருகே உள்ள பசுபிக் கடலில் பல ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான தொன் குப்பைகள் சேர்ந்து ஒரு தீவாக உருவாகியுள்ளது. இதனால், இந்தப் பகுதியில் உள்ள கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் கலிபோர்னியாவுக்கும் ஹவாய் தீவுக்கும் இடையே உள்ள பசுபிக் கடலில் நீரின் சுழற்சி வேகம் அதிகம் உள்ளது. இதனால் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள பொருட்கள் கூட இந்தப் பகுதிக்கு இழுத்து வரப்படுகின்றன.
கடந்த 60 ஆண்டுகளாக பல்வேறு பகுதிகளிலிருந்து இந்த இடத்தில் குப்பைகள் சேரத் தொடங்கின. கடந்த 20 ஆண்டுகளில் குப்பைகளின் அளவு பல மடங்கு சேர்ந்து விட்டன.
பிரிட்டன் தீவை போல ஆறு மடங்கு அதிகமாக இங்கு குப்பைகள் சேர்ந்து விட்டன. பிளாஸ்டிக் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், பொம்மைகள், தண்ணீர் போத்தல்கள், குளிர்பான டப்பாக்கள் என ஒரு தீவு அளவுக்கு குப்பைகள் சேர்ந்து விட்டன.
இந்தப் பகுதியில் வளரும் மீன்களின் வயிற்றில் குப்பைகளின் துகள்கள் உள்ளன. சமீபத்திய ஆய்வில் ஒரு மீனின் வயிற்றிலிருந்து 26 பிளாஸ்டிக் துண்டுகள் எடுக்கப்பட்டன.
இந்தத் தீவுக் கூட்டம் கடல் வாழ் உயிரினங்களுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் கெடுதலை விளைவிக்கும் என சுற்றுசூழல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
பிளாஸ்டிக் பொருட்களைச் சாப்பிடும் மீன்களை மனிதர்களும் சாப்பிட்டால் அதனால், உடல்நிலை பாதிப்பு உண்டாகும். எனவே, இந்தக் குப்பை தீவை என்னசெய்யலாம் என தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது.
சென். பிரான்சிஸ்கோ மற்றும் ஹொங்கொங்கைச் சேர்ந்த சுற்றுச் சூழல் வல்லுனர்கள், பசுபிக் கடலில் சேர்ந்துள்ள குப்பைகளைக் கப்பல்களில் எடுத்து வந்து எரிசக்தி பொருளாக மாற்றலாம் எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் ரிச்சர்ட் பெயின் குறிப்பிடுகையில்,
"சுற்றுச் சூழலால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு இந்தத் தீவை உதாரணமாகக் காட்டலாம்" என்கிறார்.
பிரிட்டனின் பரப்பு 94 ஆயிரத்து 525 சதுர மைல்கள். ஆனால், பசுபிக் கடலில் சேர்ந்துள்ள குப்பைகளின் அளவு ஐந்து லட்சத்து 40 ஆயிரம் சதுர மைல்கள். இந்தப் பகுதியில் கடல் தண்ணீரும் ரசாயனமாக மாறியுள்ளது எனவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.