Thursday, July 29, 2010

ஈராக்கில் உடல் ஊனத்துடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு _

ஈராக்கின் பலுஜா நகரில் உடல் ஊனத்துடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க இராணுவத்திற்கும், சுனி இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் கடந்த ஆறு வருட காலமாக பலுஜா நகரில் மோதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஈரானின் தலைநகர் பக்தாத்திலிருந்து 40 மைல் தொலைவில் பலுஜா நகரம் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நகரில் பிரசவிக்கப்படும் பல குழந்தைகள் உடற் குறைபாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.
எனினும், இந்த நிலைமை தொடர்பில் ஈராக்கிய அரசாங்கமோ அல்லது அமெரிக்காவோ இதுவரையில் உத்தியோகபூர்வ தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை.
யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னரே இவ்வாறு அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் உடற் குறைபாடுகளுடன் பிறப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க படையினரால் பயன்படுத்தப்படும் ஆயுதங்களினால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கலாம் என சில தரப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எனினும், இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இதுவரையில் விஞ்ஞானபூர்வமான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை.
நாள்தோறும் இரண்டு மூன்று உடற் குறைபாடுடன் கூடிய பிரசவங்கள் இடம்பெறுவதாக பலூஜா தேசிய வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் சமீரா அல் அனி தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த விடயம் தொடர்பில் ஏனைய எவரும் பகிரங்கமாக கருத்துக்களை வெளியிடவில்லை.
உடற் குறைபாடுகளுடன் பலூஸா நகரில் குழந்தைகள் பிறக்கின்றமைக்கான உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் கிடையாதெனத் தெரிவிக்கப்படுகிறது.
மூன்று தலைகளுடன் பிறத்தல், உடல் அவையங்கள் இன்றி பிறத்தல், மேலதிக அவையங்களுடன் பிறத்தல், இருதய நோய்களினால் பாதிக்கப்படல் என பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளை பலூஜாவில் பிறக்கும் குழந்தைகள் எதிர்நோக்கி வருவதாக பி.பி.சீ செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.