Friday, August 13, 2010

'சூப்பர் பக்'

புதிய 'சூப்பர் பக்' பாக்டீரியா கிருமி குறித்து ஆய்வாளர் விளக்கம் 
 சென்னை பல்கலைக்கழகத்தின் ஏ.எல். முதலியார் அடிப்படை மருத்துவ அறிவியல் ஆய்வு மையம் தரமணியில் இயங்கி வருகிறது. இங்கு நுண்ணுயிரியல் குறித்து ஆய்வு செய்து வருகிறார் கே.கார்த்திகேயன் (வயது 32).
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலைச் சேர்ந்த இவரும் இங்கிலாந்தில் உள்ள கார்டிப் பல்கலைக்கழக ஆய்வு மாணவர் திமோத்தி வால்ஸ் என்பவரும் இணைந்து ஆய்வொன்றை மேற்கொண்டனர்.
கடந்த 11ஆந் திகதி (புதன்கிழமை) கார்டிப் பல்கலைக்கழக மாதாந்த ஆய்வு இதழில் இது தொடர்பான கட்டுரை வெளியானது. இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் இக்கட்டுரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மிகவும் அபாயகரமான 'சூப்பர்பக்' என்ற பாக்டீரியா கிருமி குறித்த தகவல்கள் அந்த கட்டுரையில் வெளியிடப்பட்டுள்ளன.
எந்தவித ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கும் கட்டுப்படாத அந்தக் கிருமி தாக்கினால், நிமோனியா, சிறுநீரக சம்பந்தப்பட்ட நோய்கள் உள்பட பல்வேறு நோய்கள் உண்டாகும் அபாயம் உள்ளது.
இந்த நோய்க்கிருமியானது வெகுவிரைவாக பரவும் தன்மை வாய்ந்தது. அதேபோல், இதர பாக்டீரியாக்களோடும் எளிதில் கலந்துவிடும். மிகவும் வீரியம் வாய்ந்த ஆன்டிபயாடிக் மருந்துகளுக்குகூட கட்டுப்படாதது இந்த கிருமி.
தற்போது இ-காலி, கே-நிமோனியா ஆகிய 2 பாக்டீரியாக்களில் அந்த கிருமி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கிருமி பாதித்தால் பாரியளவில் அறிகுறிகள் ஒன்றும் தெரியாது. பரிசோதனை மூலமே கண்டுபிடிக்க முடியும். பாதிக்கப்பட்ட நோயாளியை தனியாக வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
உலகளவில் பரவல்
இந்த நோய்க்கிருமி இந்தியாவில் இருந்துதான் வெளிநாடுகளுக்கு பரவியதாக மருத்துவ உலக அளவில் தகவல் கிளம்பியது.
இந்தக் கிருமி அபாயத்தால், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்கு யாரும் வரமாட்டார்கள். இதனால், இந்தியாவில் மருத்துவ சுற்றுலா அடியோடு பாதிப்புக்கு உள்ளாகும் என்றும் பரபரப்பு தகவல்கள் உலகம் முழுவதும் பரவின.
இதுகுறித்து 'சூப்பர்பக்' நோய்க்கிருமியை கண்டுபிடித்த தமிழக விஞ்ஞானி கார்த்திகேயனிடம் கேட்டபோது,
" 'சூப்பர்பக்' என்.டி.எம்.-1 என்று அழைக்கப்படும் இந்தக் கிருமி இந்தியாவில் மட்டுமல்ல ஐரோப்பிய, அமெரிக்க, ஆசியா நாடுகள் உட்பட உலகம் முழுவதுமே காணப்படுகிறது.
நான் நடத்திய பரிசோதனை ஆய்வில் சென்னையில் 44 நோயாளிகளிடமும், அரியானாவில் 26 பேரிடமும் இங்கிலாந்தில் 26 பேரிடமும் பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட உலகின் மற்ற நாடுகளில் 73 பேரிடமும் அந்தக் கிருமி இருக்கக் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தியாவில் மட்டும்தான் அந்த நோய்க்கிருமி உள்ளது என்று சொல்லப்படுவது உண்மையல்ல. எனவே, இந்தியாவில் மருத்துவ சுற்றுலா பாதிக்கப்படும் என்று கூறுவது தவறானது. மேலும், அந்த நோய்க்கிருமியை கட்டுப்படுத்த தற்போது 2 ஆண்டிபயாடிக் மருந்துகள் உள்ளன.
ஆனால், அவற்றின் விலை மிகவும் அதிகம். அவை எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை. இந்த கிருமி குறித்து இன்னும் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு குறைந்த செலவில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முயற்சி செய்வேன்" என்று கூறினார்.

2 comments:

  1. குடந்தை அன்புமணி அவர்களுக்கு,
    தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றிகள்.

    ReplyDelete

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.