கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள்தொகை 18 கோடிக்கும் மேல் அதிகரித்து 121 கோடியாக உயர்ந்துள்ளது. இது உலகின் மக்கள்தொகையில் 17.5 சதவீதமாகும்.
புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது. எனினும் 90 ஆண்டுகளில் முதன்முறையாக வளர்ச்சி விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 62.37 கோடி ஆண்களும், 58.65 கோடி பெண்களும் இந்தியாவில் உள்ளனர். 2001-2011 வரையிலான காலகட்டத்தில் 18 கோடிக்கும் அதிகமாக மக்கள்தொகை அதிகரித்துள்ளது. 2011-ல் வளர்ச்சி விகிதம் 17.64 சதவீதம். 2001-ல் இது 21.15 சதவீதமாக இருந்தது.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உத்தரப்பிரதேசம்தான் மிகவும் அதிகமான மக்கள்தொகை கொண்ட மாநிலமாகும். அங்கு 19 கோடியே 90 லட்சம் பேர் உள்ளனர். லட்சத்தீவில் மிகவும் குறைவான மக்கள்தொகை உள்ளது. அங்கு 64,429 பேர்தான் உள்ளனர்.
உத்தரப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிர மக்கள்தொகையைச் சேர்த்தால் அமெரிக்க மக்கள்தொகையைவிட அதிகமாகும்.
அதிக மக்கள் நெருக்கம் தில்லியின் வடகிழக்கில் உள்ளது. ஒரு சதுர கிலோமீட்டருக்கு 37,346 பேர் அங்கு உள்ளனர். குறைவான மக்கள் நெருக்கம் அருணாச்சலப் பிரதேசத்தின் திபங்க் பள்ளத்தாக்கில் உள்ளது. அங்கு ஒரு சதுர கிலோமீட்டருக்கு ஒருவர் மட்டுமே உள்ளார்.
பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக உள்ளதை மக்கள்தொகை கணக்கெடுப்பு குறிப்பிடுகிறது. கணக்கெடுப்பின்படி சமீபத்திய குழந்தைகள் விகிதம் 1000 ஆண்களுக்கு 914 பெண்களாக உள்ளது. இது சுதந்திரம் அடைந்ததில் இருந்து மிகக் குறைவான விகிதமாகும்.
மொத்த மக்கள்தொகையில் 7 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரில் 74 சதவீதம் பேர் படித்தவர்கள் . 26 சதவீதம் பேர் படிக்காதவர்கள்.
2001-ல் படித்தவர்கள் 64.83 சதவீதமாக இருந்த படித்தவர்களின் விகிதம், 2011-ல் 74.04 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது படித்தவர்களின் எண்ணிக்கை 9.21 சதவீதம் அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது.
உலகிலேயே சீனாதான் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு. உலக மக்கள்தொகையில் 19.4 சதவீதம் பேர் அங்கு உள்ளனர்.
அமெரிக்கா. இந்தோனேசியா, பிரேசில், பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் ஒருங்கிணைந்த மக்கள்தொகையும் சீனாவின் மக்கள்தொகையும் ஏறக்குறைய சமமாக இருக்கும் என புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன.நன்றி, சூத்திரம்.
No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.