Friday, June 17, 2011

உலகில் இந்தியர்கள் தொடர்ந்து முதலிடத்தில்

உலகளவில் பல நாடுகளில், பலதரப்பட்ட துறைகளில் இந்தியர்கள் பணி புரிந்து வருகின்றனர். குறிப்பாக, வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் அதிக அளவில் பணியாற்றுகின்றனர். இவ்வாறு அயல்நாடுகளில் பணிபுரிவோர், தாய் நாட்டில் உள்ள தங்கள் குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினருக்கும் பணம் அனுப்பி வருகின்றனர்.
வெளிநாடுகளில் பணிபுரிவோர், தங்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பி வரும் பணம் குறித்து உலக வங்கி புள்ளி விவரம் வெளியிட்டுள்ளது. 'இடம் பெயர்ந்தோர் மற்றும் பணமளிப்பு விவரம்' என்ற தலைப்பிலான இந்த அறிக்கையில், வெளிநாடுகளில் உள்ளோர், தங்கள் தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில், இந்தியர்கள் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ஆண்டுதோறும், இந்தியர்கள், தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவது அதிகரித்து வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.கடந்த 2010ம் ஆண்டு, வெளிநாடு வாழ் இந்தியர்கள், தாய்நாட்டிற்கு 5,500 கோடி டாலர் (2 லட்சத்து 53ஆயிரம் கோடி ரூபாய்) அனுப்பியுள்ளனர். இது, முந்தைய ஆண்டு 4,960 கோடி டாலராக (2 லட்சத்து 28ஆயிரத்து 160 கோடி ரூபாய்) இருந்தது.இதில், சவூதி அரேபியா, பஹ்ரைன், குவைத், கத்தார், மஸ்கட்,ஓமன் நாடுகளை உள்ளடக்கிய வளைகுடா கூட்டுறவு கழகத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு உள்ளது.
இந்நாடுகளில் வாழும் இந்தியர்கள், தங்கள் தாயகத்திற்கு கடந்த 2010ம் ஆண்டு 1,104 கோடி டாலர் (50ஆயிரத்து 784 கோடி ரூபாய்) அனுப்பியுள்ளனர். இது, முந்தைய 2009ம் ஆண்டில் 940 கோடி டாலராக (43ஆயிரத்து 240 கோடி ரூபாய்)இருந்தது.துபாயில் உள்ள யூ.ஏ.ஈ எக்ஸ்சேன்ஜ் நிறுவனம், ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் வளைகுடா கூட்டுறவு கழகத்தை சேர்ந்த நாடுகளின் அன்னியச் செலாவணி பரிமாற்ற வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான திர் குமார் ஷெட்டி கூறுகையில்,' அயல்நாட்டு பணியாளர்கள், சென்ற 2010ம் ஆண்டில் 2,500 கோடி - 3,000 கோடி டாலர் (ஒரு லட்சத்து 15ஆயிரம் கோடி ரூபா-ஒரு லட்சத்து 38ஆயிரம் கோடி ரூபாய்) அளவிற்கு தாய்நாட்டிற்கு பணம் அனுப்பியுள்ளனர்' என்று தெரிவித்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்டில் பணியாற்றும் அயல் நாட்டினர், கடந்த 2010ம் ஆண்டு தங்கள் தாயகத்திற்கு 1,054 கோடி டாலர் (48ஆயிரத்து 484 ரூபா) அனுப்பியுள்ளனர். இது, முந்தைய 2009ம் ஆண்டு 951கோடி டாலராக (43ஆயிரத்து 746 கோடி ரூபாய்) இருந்தது. இந்த வளர்ச்சியை, கடந்த 2008 மற்றும் 2009ஆம் ஆண்டின் பொருளாதார மந்த நிலையில் இருந்து மீண்டு வருவதற்கான அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம். கட்டுமானம் மற்றும் அது சார்ந்த துறைகளைத் தவிர்த்து, வணிகம், விருந்தோம்பல் மற்றும் ”சுற்றுலாத் துறைகளின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது. இது, அயல்நாட்டவருக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்க துணைபுரிவதாக உள்ளது என, ”திர் குமார் ஷெட்டி மேலும் கூறினார்.

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.