Thursday, April 19, 2012

குஞ்சை ஈன்ற கோழி

முட்டையிடுவதற்குப் பதிலாக நேரடியாக குஞ்சை ஈன்ற கோழி
 
கோழியொன்று முட்டையிடுவதற்குப் பதிலாக தனது உடலுக்குள் பொரிக்கப்பட்ட குஞ்சை ஈன்ற சம்பவம் இலங்கைவெலிமடையில் இடம்பெற்றுள்ளது.

வெளிமடை, கெந்திரிமுல்ல, நெடுன்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஈ.எம்.ரஞ்சித் என்பவரின் வீட்டிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவரின் வீட்டிலுள்ள ஆறு கோழிகளில் ஒரு கோழி மாத்திரம் முட்டையிடாமல் இருந்தது. ஆனால் அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கும் வகையில் கோழிக்குஞ்சொன்றை அது ஈன்றது.


குஞ்சை ஈன்றபின் அக்கோழி இறந்துவிட்டது. எனினும் அக்கோழிக்குஞ்சு நலமாக உள்ளது.


இவ்வாறான ஒரு சம்பவத்தை தான் கேள்விப்படுவது இதுவே முதல் தடவை என வெலிமடை பிரதேச தலைமை மிருக வைத்திய அதிகாரி பி.ஆர்.யாப்பா கூறினார்.


"அந்த கோழியின் உடலை பிரித்துப் பார்த்தேன். அந்த முட்டை கோழியின் உடலிலிருந்து வழக்கமான வழியில் வெளிவரவில்லை. அது கோழியின் உடலுக்குள் அடை காக்கப்பட்டுள்ளது. இறுதியில் கோழியின் உடலிலிருந்து நேரடியாக கோழிக்குஞ்சு வெளிவந்துள்ளது. அம்முட்டை கோழியின் உடலுக்குள் 21 நாட்களுக்கு மேலாக இருந்துள்ளது" என அவர் கூறினார்.
 

ஒபாமா தலைக்கு ரூ.80 கோடி

மும்பையில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தானைச் சேர்ந்த
ஹபிஸ் சயீத் தலைக்கு அமெரிக்கா ரூ.50 கோடி பரிசு தொகையை அறிவித்தது. இதற்கு போட்டியாக இங்கிலாந்தில் வசிக்கும் பாகிஸ்தான் வம்சாவளியான அகமது என்பவர் ஒரு பரபரப்பான தகவலை வெளியிட்டார். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் ஆகியோரை பிடித்து கொடுத்தால் ரூ.80 கோடி (10 மில்லியன் பவுண்ட்) பரிசு தொகை வழங்குவேன் என அறிவித்தார். 

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், சயீத் தலைக்கு அமெரிக்கா ரூ.50 கோடி பரிசு தொகை அறிவித்திருப்பதால், நானும் இந்த ரூ.80 கோடி பரிசை அறிவிக்கிறேன் என்று கூறினார். இவர் இங்கிலாந்தில் வசிக்கும் கோடீஸ்வரர், முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியை சேர்ந்தவர். இந்த பரிசு தொகை அறிவிப்பை தொடர்ந்து கோடீஸ்வரர் அகமதுவை கட்சியில் இருந்து நீக்க தொழிலாளர் கட்சி நடவடிக்கை எடுத்தது. 

அகமதுவின் செயல் கண்டனத்துக்குரியது. இது குறித்து விசாரணை நடைபெறுகிறது. அதுவரையில் அவர் கட்சியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார் என கட்சியின் செய்தி தொடர்பாளர் கூறினார்.

Tuesday, April 17, 2012

கூகுளின் அதிசயக்கண்ணாடி

 கட்டுபாடில்லா இணையத்தை தனது கட்டு பாட்டில் வைத்து கொண்டிருப்பது கூகுள் நிறுவனம். நீங்கள் இணையத்தை உபயோகிப்பவர்களாக இருந்தால் தினமும் ஏதாவது ஒரு கூகுள் தயாரிப்பை கண்டிப்பாக உபயோக படுத்துவீர்கள். பிளாக்கர், யூடியுப், ஜிமெயில், பிளஸ் இப்படி பல தயாரிப்புகளை வழங்குகிறது கூகுள் நிறுவனம்.  இப்பொழுது கூகுள் நிறுவனம் ஒரு புதிய வகை கண்ணாடியை அறிமுக படுத்தியுள்ளது.

என்னெங்க கண்ணாடியை வெளியிட்டதை போய் ஒரு பெரிய இதுவா பேசுறீங்க எங்க ஊருல தெருவுக்கு தெரு கண்ணாடி விக்குராங்கன்னு சொல்றது எனக்கு கேக்குது ஆனால் இது வெறும் கண்ணாடி இல்ல பல அதி நவீன வசதிகள் அடங்கிய கண்ணாடி.
 
சிறப்பம்சங்கள்:
  • இந்த கண்ணாடி மூலம் பிடித்த பாட்டு கேட்கலாம்.
  • இந்த கண்ணாடிகள் கூகுள் மேப் உதவியுடன் உங்களுக்கு சரியான வழியை காட்டும். 
  • இந்த கண்ணாடி மூலம் நினைத்த இடத்தை படம் பிடித்து அந்த போட்டோவை அப்படியே கூகுள் பிளஸ் தளத்தில் பகிரலாம். 
  • கூகுள் பிளஸ் நண்பர்களுடன் வீடியோ காலிங் வசதி.
  • அந்த கண்ணாடியை அணிந்தால் தட்ப வெட்ப நிலை உங்கள் கண் முன்னே மற்றும் பல அறிய வசதிகள்    
  • இந்த கண்ணாடியின் விலை $250 இருந்து $600 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Monday, April 16, 2012


கழிவு நீரிலிருந்து   சுத்தமான குடிநீர்-வடிகட்டும் இயந்திரம்

பெண் விஞ்ஞானி சாதனை
கழிவு நீரிலிருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரத்தை இங்கிலாந்தை சேர்ந்த பெண் விஞ்ஞானி உருவாக்கி வருகிறார். உலக பணக்காரர் பில்கேட்ஸ் அளித்த நிதியுதவியுடன், இந்த ஆராய்ச்சி நடந்து வருகிறது. மைக்ரோசாப்ட் நிறுவன அதிபரும், உலக பணக்காரர்களில் முன்னணியில் இருப்பவருமான பில்கேட்ஸ், குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கான கண்டுபிடிப்பை ஊக்குவிக்க நிதியுதவி அறிவித்தார். உலகம் முழுவதும் இருந்து 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்களது தயாரிப்புக்களை அனுப்பினர். 
அதில் இங்கிலாந்தை சேர்ந்த நானோ தொழில்நுட்ப வல்லுனர் சாரா ஹே என்ற பெண்ணின் தயாரிப்பு தேர்ந்தெடுக்கப்பட்டது. இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள ஸ்கூல் ஆப் மெட்டீரியல்ஸ் கல்வி நிலையத்தில் சாரா ஹே ஆராய்ச்சியாளராக பணியாற்றுகிறார். லண்டனின் இம்பீரியல் கல்லூரி மற்றும் டரம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்து அவர் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். ஆராய்ச்சிக்காக முதலில் அவருக்கு பில்கேட்ஸ் அண்ட் மெலிண்டா அறக்கட்டளை ரூ.50 லட்சம் நிதி அளித்துள்ளது.

இது பற்றி, சாரா கூறியதாவது: கழிவு நீரில் இருந்து மின்சாரம் தயாரிப்பது, எரிபொருள் தயாரிப்பது என பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்த ஆராய்ச்சியும் அது போன்ற முயற்சி தான். இயந்திரத்துக்குள் செலுத்தப்படும் கழிவு நீருடன் பாக்டீரியா கலவை மற்றும் நானோ துகள்கள் வினை புரியும். இந்த ரசாயன வினைக்கு பிறகு, ஹைட்ரஜன் வாயு உருவாகும். அதை ஹைட்ரசீனாக மாற்றுவது எளிது. அது தான் ராக்கெட் எரிபொருளாக பயன்படுகிறது. கழிவு நீரில் இருந்து ஹைட்ரஜன் பிரிக்கப்பட்ட பிறகு, அந்த நீர் மேலும் மேலும் வடிகட்டப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு குடிநீராக மாற்றப்படுகிறது.

உலகின் பல நாடுகளில், பல பகுதிகளில் குடி நீருக்கு மக்கள் திண்டாடுகின்றனர். சுத்தமான குடிநீர் தேடி பல கி.மீ. செல்கின்றனர். குடிநீருக்காக மக்கள் சிரமப்பட கூடாது என்பதே இந்த ஆராய்ச்சியின் நோக்கம். இயந்திரத்தின் இறுதி வடிவம் கொடுக்கும் பணி நடக்கிறது. அடுத்த ஆண்டில் பணி முடிந்து செயல் விளக்கம் அளிக்கப்படும். எங்கும் எளிதில் எடுத்து செல்லும் வகையில் இந்த இயந்திரம் இருக்கும். இவ்வாறு சாரா ஹே கூறினார். அடுத்த ஆண்டில் இந்த ஆராய்ச்சிக்காக பில்கேட்ஸ் அறக்கட்டளை ரூ.5 கோடி நிதியை சாராவுக்கு வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Sunday, April 15, 2012

இலவசம் - WinX DVD Copy Pro

ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி Digiarty நிறுவனம் DVD Copy Pro என்ற மென்பொருளை முற்றிலும் இலவசமாக வாசகர்களுக்கு வழங்குகிறது. வழக்கமாக இந்த மென்பொருளின் விலை ரூபாய் 2500 ஆகும். ஆனால் வரும் 16 Apr தேதிக்கு முன்னர் இந்த மென்பொருளை இலவசமாக டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் ஆக்டிவேட் செய்து கொள்ளலாம். இந்த மென்பொருள் மூலம் DVD இருந்து DVD காப்பி செய்து கொள்ளலாம். DVD இல இருந்து ஆடியோ மற்றும் வீடியோக்களை தனித்தனியாக பிரித்தெடுக்கலாம். DVD யை ISO இமேஜாக மாற்றலாம். மற்றும் பல வசதிகள் உள்ள இந்த மென்பொருளை இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே தொடருங்கள்.
முதலில் இந்த லிங்கில் www.winxdvd.com/giveaway சென்று சலுகை தளத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள். அதில் சில முட்டைகள் காணப்படும் அதில் ஒவ்வொரு முட்டையாக கிளிக் செய்து சரியான  முட்டையில் மறைந்து இருக்கும் DVD Copy Pro மென்பொருளை இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
 டவுன்லோட் செய்தவுடன் அதில் உள்ள லைசன்ஸ் கீயை காப்பி செய்து இதனை இன்ஸ்டால் செய்யும் பொழுது கொடுத்து ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள்.

இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

உலக சாதனை மாணவன்

உத்தர பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்த முகமது இக்ரம் - நூர் ஹாஷ்மி தம்பதியின் மகன் முகமது ஓமர், 17. இவன் இங்குள்ள செயின்ட் அலோஷியஸ் பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறான். இவன், தன் சாதனை குறித்து கூறியதாவது:
நான் பள்ளிக்குத் தவறாமல் செல்வேன். இதை நான் வேண்டுமென்றே செய்வதில்லை. சொந்த விருப்பம் மற்றும் ஆர்வத்தின் பேரில் தான் செய்து வருகிறேன். ஒரு நாள் எங்கள் வீடு இருக்கும் பகுதியை மழை நீர் சூழ்ந்த போதும், பள்ளிக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு சென்றேன்.
உடல் நலக்குறைவு ஏற்பட்டாலும், மாத்திரையை விழுங்கி விட்டு, பள்ளிக்குச் சென்று விடுவேன். மழைக் காலத்தில் ஒரு நாள், என் வீட்டைச் சுற்றி முழங்கால் அளவுக்கு தண்ணீர் நின்றதால், என் தந்தையின் ஸ்கூட்டர் பழுதாகி விட்டது. ஆனாலும், விடவில்லை. தொழிலாளி ஒருவரிடம் சைக்கிளை வாங்கிக் கொண்டு பள்ளிக்குச் சென்றேன்.
நான், நாள் தவறாமல் பள்ளி சென்று வருவதற்கு என் தாயும் ஒரு காரணம். அவர் தான் என்னை தூண்டி விட்டு, எந்தத் தருணத்திலும் பள்ளிக்குச் செல்லாமல் இருக்கக்கூடாது என, அடிக்கடி அறிவுரை கூறுவார். என் தம்பி தற்போது பத்தாவது படித்து வருகிறான். அவனும் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் பள்ளிக்குச் சென்று வருகிறான்.
நான் கிரிக்கெட் ரசிகன். பாட்டுக் கேட்பதிலும் ஆர்வம் உண்டு. தொடர்ந்து 14 ஆண்டுகளாக, ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் பள்ளி சென்றதால், கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளேன். எனது இந்தச் சாதனைக்கு கடவுளும் துணையாக இருந்துள்ளார். நான் இப்படி அர்ப்பணிப்பு உணர்வுடன் நடந்து கொள்வதைப் பார்த்து, எனது ஆசிரியர்களும் என்னைப் பாராட்டுவர். இவ்வாறு ஒமர் கூறினார்.
ஒமரின் ஆசிரியரான பிரதீப் குப்தா கூறுகையில், "கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற எப்படி விண்ணப்பிப்பது என, ஒமருக்கு நான்தான் சொல்லிக் கொடுத்தேன். இளம் வயதிலேயே அவர் சாதித்துள்ளான். தொடர்ந்து 14 ஆண்டுகளாக, விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வருவது சாதனை இல்லையா? 100 சதவீத வருகைப் பதிவுக்காக ஒமருக்கு சான்றிதழ் வழங்கவும் பள்ளி நிர்வாகம் தீர்மானித்துள்ளது. அந்தச் சான்றிதழும் கின்னஸ் சாதனை புத்தக அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும், என்றார்.

Saturday, April 14, 2012

காய்கறியிலுள்ள மருத்துவக்குணம்

வெங்காயம் 
வெள்ளைப் பூண்டுடன் சேர்ந்து வல்லமை மிக்க, புகழ்மிக்க மருந்தாக வெங்காயம் செயல்பட்டு வருகிறது. ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும், புற்று நோய்களையும், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது. நோய்த் தொற்றைத் தடுத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற இராசயனப் பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சு நுண்மங்கள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன.

காரட் 
நோய் எதிர்ப்புச் சக்தி வேலிகள் நன்கு உறுதிப்பட காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது. குறிப்பாக நம் உடல் தோலிலும், சளிச் சவ்விலும் நோய் எதிர்ப்புப் பொருள்கள் நன்கு செயல்படும்படி தூண்டிக்கொண்டே இருப்பது காரட் தான்.
ஆரஞ்சு 
வைட்டமின் சி ஒரு முகப்படுத்தப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பழத்தில் இன்டர்பெரான் என்ற இராசயனத் தூதுவர்களை அதிகம் உற்பத்தி செய்வது வைட்டமின் சி. காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றுக் கிருமிகளை இந்த இன்டர்பெரான்கள் எதிர்த்துப் போராடி உடலில் அவை சேராமல் அழிக்கின்றன. ஆரஞ்சு கிடைக்காத போது எலுமிச்சம்பழச் சாறு அருந்தலாம்.

Wednesday, April 11, 2012


தொழில்நுட்பத்தில் அப்பிளின் ஐ போன்கள் முன்னணி வகிக்கின்றன. அதன் ஐ பொட், ஐ போன், ஐ பேட் என அனைத்தும் உயர் தொழிநுட்பம் கொண்டவை. இவற்றில் அப்பிளின் ஐ போன்களின் பாதுகாப்பு குறித்து தற்போது பரவலாகப் பேசப்படுகின்றது. 

அதாவது கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் விமானத்திற்குள் ஐ போன் 4 ஒன்று தீப்பற்றி எரிந்ததுடன் வெடித்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பிரேசில் நாட்டிலும் ஐ போன் 4 ஒன்று தீப்பற்றிக் கொண்டமையானது அதன் பாதுகாப்புக் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்துத் தெரிய வருவதாவது, 

பிரேசிலில் பெண் ஒருவர் தனது ஐ போன் 4 வினை சார்ஜ் செய்ய சார்ஜருடன் இணைத்து விட்டு அதன் அருகில் நித்திரை செய்துள்ளார். சற்று நேரத்தில் அவரது ஐபோனில் இருந்து புகை கிளம்பியுள்ளதுடன், சற்று நேரத்தில் வெடித்துள்ளது. இதன்படி இவ்வாரத்தில் பதிவான 2 ஆவது ஐ போன் தீப்பற்றிக் கொண்ட சம்பவமாக இது பதிவானது. 

இரண்டு தினங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவிலும் ஐ போன் தீ பிடித்து வெடித்த சம்பவமொன்று குறித்து செய்திகள் வெளியாகியிருந்தது. இதன்போது விமானம் தரையிறங்கும் வேளையில் பயணி ஒருவரின் ஐ போனிலிருந்து புகை வெளியாகியிருந்ததுடன் சற்று நேரத்தில் வெடித்து தீப்பற்றியுள்ளது. எனினும் விமானப் பணியாள் ஒருவரால் அத் தீ அணைக்கப்பட்டுள்ளது. 
இதனைத் தொடர்ந்து அந்த ஐ போன் பரிசோதனைகளுக்கென விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனினும் இவ் வெடிப்பினால் யாருக்கும் காயமெதுவும் ஏற்படவில்லை. 

இதற்கு முன்னரும் பிரான்ஸில் இளைஞன் ஒருவன் தனது காதலியின் ஐ போன் வெடித்தமையினால் அதன் திரையின் சிறிய கிளாஸ் துகள் தனது கண்ணைத் தாக்கியதாக 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குற்றஞ்சாட்டியிருந்தார். இவ் வெடிப்புக்கான காரணங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இச்சம்பவங்கள் தற்போது அப்பிளுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. 

இதேவேளை இம்மாத ஆரம்பத்தில் அப்பிள் தனது 1 ஆம் தலைமுறை ஐ பொட் நெனோ எம்.பி 3 பிளேயர்களை மீளப்பெற்றுக்கொள்வதாக அறிவித்திருந்தது. 
இவ் ஐ பொட் நெனோ எம்.பி 3 பிளேயர்கள் 2005 மற்றும் 2006 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் அப்பிள் உற்பத்தி செய்தவை. இவற்றின் பெட்டரிகளில் குறைபாடு காணப்படுவதாகவும் அவை அதிக வெப்பம் அடைவதாகவும் கூறியே மீளப்பெற்றுக்கொள்வதாகவும் அதற்காக மாற்றீடு ஒன்றை வழங்குவதாகவும் அறிவித்துள்ளது. எது எவ்வாறு இருப்பினும் ஐ போன் வெடிப்புத் தொடர்பில் அப்பிள் பதிலெதுவும் இதுவரை கூறவில்லை. 


Tuesday, April 10, 2012

லேப்டாப்பில் Wi-Fi பயன்படுத்துபவரா? எச்சரிக்கை.

 கம்பியில்லா இன்டர்நெட் (Wi-Fi) சேவையை லேப்டாப்பில் பயன்படுத்தும் ஆண்களுக்கு விந்தணுவின் வீரியம் குறையும் என ஒரு ஆய்வு முடிவு கூறுகிறது. 
அர்ஜென்டினாவைச் சேர்ந்த ஒரு ஆய்வுக் குழுவினர், ஆரோக்யமாக உள்ள 29 பேரிடமிருந்து விந்தணுவை சேகரித்து அதை 2 புட்டிகளில் அடைத்தனர். இதில் ஒரு புட்டியை,Wi-Fi இன்டர்நெட் இணைப்புடன் கூடிய லேப்டாப் அருகில் 4 மணி நேரம் வைத்தனர். மற்றொரு புட்டியை வேறு இடத்தில் வைத்தனர். எனினும், இவ்விரு புட்டிகளும் ஒரே சீரான வெப்ப நிலையில் வைக்கப்பட்டது.பின்னர், இரு புட்டிகளில் இருந்த விந்தணுவையும் பரிசோதித்தனர். லேப்டாப் அருகில் வைக்கப்பட்ட புட்டியில் இருந்த விந்தணுவில் 25% செயல்திறன் (மொட்டிலிட்டி) குறைவாகவும், 9% டிஎன்ஏ பாதிப்பும் இருந்தது தெரியவந்தது. அதேநேரம் மற்றொரு புட்டியில் இருந்த விந்தணுவில் 14% செயல்திறன் குறைவாகவும், 3% மட்டும் டிஎன்ஏ பாதிப்புடனும் இருந்தது. லேப்டாப்பிலிருந்து வெளியாகும் வெப்பத்தால் இந்த பாதிப்பு ஏற்படாது. எனினும் Wi-Fi பயன்படுத்துவதால் ஏற்படும் மின் காந்த அதிர்வுகளுக்கும், விந்தணு பாதிக்கப்படுவதற்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Monday, April 9, 2012

37 கோடிக்கு விற்கப்பட்ட ஒட்டகம் !!!


 குவைத்தில் பிடோர் எனும் ஒட்டகம் 37 கோடிக்கு விற்கப்பட்டது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்ததோடு கின்னஸ் சாதனையாகவும் இடம் பெற்றுள்ளது. இத்தகவலை குவைத்திலிருந்து வெளிவரும் அல்-ஷாஹித் எனும் நாளிதழ் தெரிவித்துள்ளது.
இவ்வளவு விலைக்கு விற்கப்படுவதற்கான காரணத்தை ஒட்டகத்தின் உரிமையாளர் கூறும் போது அந்த ஒட்டகம் தனித்துவமானதும் எல்லையற்ற அழகும் உடையதாகும் என்று கூறினார்.
 மேலும் இவ்வொட்டகம் முஸ்லீம்களின் இறை தூதுவரான முஹம்மதும் அவர் தோழர்களும் பயன்படுத்திய ஒட்டகங்களின் வம்சாவழியில் வந்தது என்றும் கூறினார்.
 மேலும் இந்த ஒட்டகத்தின் தொகையான 2 மில்லியன் குவைத் தினார்களை (அதாங்க நம்ம ஊர் மதிப்பில் 37 கோடி) பணமாகவே பெற்றுள்ளார். செக் அல்லது டி.டி பெற்று கொள்ள மறுத்து விட்டார்.
 நவீன கார்கள் என்ன ஒரு சிறு சொகுசு ஜெட்டையே வாங்க கூடிய விலையில் ஒரு ஒட்டகம் விற்பனையானது ஆச்சரியமாகவே கருதப்படுகிறது.

Sunday, April 8, 2012

மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’

 பாகற்காய் கசப்பானது என்றாலும், பலருக்குப் பிடித்தமான காய்கறி. தற்போது பாகற்காய் தரும் மற்றொரு இனிப்பான செய்தி, இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிர்ப்பு அரணாக அமையும் என்பது. இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருப்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண் விஞ்ஞானி என்பது கூடுதல் மகிழ்ச்சியளிக்கும் விஷயம்.
மார்பகப் புற்று செல் வளர்ச்சியை பாகற்காய் குறிப்பிட்ட அளவு கட்டுப்படுத்துகிறது, எனவே இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிராக ஒரு தடுப்பு அமைப்பாகச் செயல்படும் என்பதுதான் புதிய கண்டுபிடிப்பின் சாரம்.
இந்தக் கண்டுபிடிப்புக்குச் சொந்தக்காரர், அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழக நோயியல் துறை பேராசிரியை ரத்னா ரே.
“மார்பகப் புற்றுநோயைத் தடுப்பதற்கு பாகற்காய் சாறை மருந்தாகப் பயன்படுத்த முடியும்” என்கிறார் இவர்.
 ரத்னா ரேயின் இந்தக் கண்டுபிடிப்பு, அமெரிக்க புற்றுநோய்க் கழகத்தின் இதழான `கேன்சர் ரிசர்ச்’-ல் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு செய்யப்பட்ட ஆய்வுகளிலேயே பாகற்காயானது, `ஹைப்போகிளைசீமிக்’ (ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைப்பது) மற்றும் `ஹைப்போலிபிடெமிக்’ தாக்கங்களை ஏற்படுத்துவது தெரியவந்திருக்கிறது என்கிறார் ரத்னா. இந் தத் தாக்கங்களின் காரணமாக, இந்திய நாட்டுப்புற மருந்துகளில் சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்துவதற்குப் பாகற்காய் சாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியா தவிர, சீனா, மத்திய அமெரிக்கா போன்ற பகுதிகளிலும் பாரம்பரிய மருந்துகளில் பாகற்காய் பயன்படுத்தப்படுகிறது.
ரத்னா ரேயும் அவரது சக ஆராய்ச்சியாளர்களும் மனித மார்பகப் புற்றுநோய் செல்களையும், மனித பாலூட்டிச் சுரப்பி `எபிதீலியல்’ செல்களையும் ஆய்வகத்தில் வைத்து ஆராய்ந்தனர். அப்போது, பாகற்காயில் இருந்து வடித்து எடுக்கப்பட்ட பொருள், மார்பகப் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி மற்றும் பிரிவை குறிப்பிடத்தக்க அளவு குறைத்ததோடு, அவற்றை அழிக்கவும் செய்தது. இந்த ஆரம்பகட்ட முடிவுகள், மார்பகப் புற்றுநோய் ஆய்வில் ஊக்கம் அளிப்பவையாக அமைந்துள்ளன.
“பெண்களின் முக்கியமான உயிர்க்கொல்லியாக மார்பகப் புற்றுநோய் உள்ளது. அதற்குத் தடை போட முடியுமா என்று பல்வேறு ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தற்போதைய ஆய்வில் கிடைத்திருக்கும் முடிவுகள் முக்கியமானவை” என்று கொலோராடோ பல்கலைக்கழக மருந்து அறிவியல் துறைப் பேராசிரியர் ராஜேஷ் அகர்வால் தெரிவிக்கிறார்.
“தொடர்ந்து நடத்தும் ஆய்வுகளில், பாகற்காயைப் பற்றிய இந்த உண்மை உறுதியானால், மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான விஷயங்களில் இதுவும் ஒன்று என்பது உறுதிப்படும்” என்கிறார் அகர்வால்.
`கேன்சர் ரிசர்ச்’ பத்திரிகையின் இணை ஆசிரியராகவும் உள்ள அகர்வால் மேலும் கூறுகையில், பாகற்காயைப் பற்றிய ஆய்வின் எளிமையான தன்மை, தெளிவான முடிவுகள், இந்தக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் ஆகியவற்றின் காரணமாக, முந்தைய ஆய்வுகளில் இருந்து இது பெரிதும் வேறுபடுகிறது என்கிறார்.
அதேநேரத்தில், புற்றுநோய்க்கு எதிராக பாகற்காயின் தடுப்புத் திறனை வெளிப்படுத்துவதில் தற்போது ஓரடிதான் முன்னே வைக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறுகிறார் இவர்.
“மார்பகப் புற்றுநோய் செல்களின் மூலக்கூறுகளை பாகற்காய் சாறு எவ்வாறு குறி வைக்கிறது என்று நன்றாகப் புரிந்துகொள்வதற்கும், அதில் இதன் திறனை வெளிப்படுத்துவதற்கும் தொடர்ந்து மேலும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்கிறார் அகர்வால்.
அதேநேரம் இவர் ஓர் எச்சரிக்கையையும் விடுக்கிறார்.
அதாவது, தற்போது கிடைத்திருக்கும் முடிவுகள், பாகற்காயை ஒரு புற்றுநோய் எதிர்ப்பு மூலமாக நம்பிக்கை அளித்தாலும், இந்த முடிவுகளின் மதிப்புகளை நிறுவுவதும், மனிதர்களுக்கு மருந்தாகக் கொடுப்பதற்கு முன் விலங்குகளில் இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதும் முக்கியமானது என்கிறார்.
ரத்னா ரேயும், அவரது சக ஆராய்ச்சியாளர்களும், புற்றுநோய் செல்களின் வளர்ச்சி, பிரிவைத் தடுக்கும் பாகற்காய் சாறின் தன்மையை உறுதிப்படுத்துவதற்கு மேலும் பலவித புற்றுநோய் செல்களில் அவற்றைத் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இதை மருந்தாகக் கொடுத்து ஆய்வு செய்யவும் முடிவு செய்திருக்கின்றனர்.
பாகற்காய் வடிபொருள், ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. மேற்கத்திய நாடுகளிலும் இது மருத்துவத் தன்மை வாய்ந்த உணவுப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. காரணம் இது, `மார்மோர்டின்’, `வைட்டமின் சி’, `கரோட்டினாய்டுகள்’, `பிளேவனாய்டுகள்’, `பாலிபினால்கள்’ போன்றவற்றைக் கொண்டுள்ளது.      
 நன்றி: உங்களுக்காக

Saturday, April 7, 2012

ஆப்பிளை முந்தியது சாம்சங்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனை விட சாம்சங் நிறுவனத் தயாரிப்பான கேலக்ஸி நெக்சஸ் செல்போன் பிரபலமடைந்துள்ளது.
தங்கள் தயாரிப்பை பிரபலப்படுத்த சாம்சங் நிறுவனம் விளம்பரங்கள் மூலம் மேற்கொண்ட முயற்சியே இதற்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது. மேலும் ஆப்பிள் ஐபோனில் உள்ள பாட்டரி குறைபாடு, இணையதளத்தை இணைப்பதில் உள்ள வேகம் ஆகியவையும் கேலக்ஸியின் பக்கம் வாடிக்கையாளர்களைத் திருப்பியுள்ளது. அமெரிக்க இளைஞர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் இத்தகவல் தெரியவந்துள்ளது.
சாம்சங் கேலக்ஸி நெக்சஸ் இந்தியாவுக்கு ஜனவரியில்தான் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ.40 ஆயிரம் வரை இருக்கும். கூகுள் நிறுவனத்துடன் இணைந்து இந்த 4-ம் தலைமுறை செல்போனை சாம்சங் தயாரித்துள்ளது.

Thursday, April 5, 2012

இரவில் நிம்மதியாய் தூங்க........

சில நாட்களில் நாம் இரவில் சரியாக தூக்கம் இல்லாமல் பல நினைவுகளுடன் அவஸ்தைப்பட்டு இருப்போம். இது போன்று இரவில் தூக்கம் வராததற்கு நாம் உட்கொள்ளும் உணவு காரணமாக அமைகிறது. கீழ்க்காணும் 5 வகையான உணவுகள் உங்களின் இரவு உறக்கத்திற்கு பெரிதும் உதவுகின்றது .
1.பால் உணவுகள் (Dairy foods):
உணவு பொருட்களில் இருக்கும் tryptophan என்ற பொருள் நிம்மதியான உறக்கத்திற்கு உதவுகிறது. பால் உணவுகளில் இருக்கும் கால்சியம் இந்த tryptophan பொருளை பயன்படுத்தி melatonin என்ற பொருளை உற்பத்தி செய்கிறது. இது மூளைக்கு அமைதியை ஏற்படுத்தி நிம்மதியான உறக்கத்தை அளிப்பதாக ஆராய்ச்சி தகவல்கள் கூறுகின்றன. 
2. ஓட்ஸ் உணவுகள் (Oats)
ஓட்ஸ் உணவுகளில் மேலே சொல்லப்பட்ட melatonin என்ற பொருள் அதிக அளவில் உள்ளது. மேலும் இது உடலின் சீரான  இயக்கத்திற்கு பெரிதும் உதவுகிறது. ஓட்ஸ் இல் கால்சியம் மற்றும் மெக்னீசியம் பொருட்களும் அதிக அளவில் உள்ளன. ஓட்ஸ் ஐ பாலுடன் சேர்த்து சாப்பிடுவது மிகவும் சிறந்தது.  

3. வாழைப்பழம் (Bananas):
உடலில் ஏற்படும் தசை பிடுப்புகள் தூக்கம் வராததற்கு காரணமாக அமைகின்றன. வாழைப்பழங்களில் உள்ள  மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உங்களில் உடலின் தசைகளை சீராக இயக்க உதவுகின்றது. இரவு சாப்பாட்டிற்கு வாழைப்பழம் சிறந்த உணவு. (www.kalvikalanjiam.com)
நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) இல் உள்ள University of New England ஆராய்ச்சி கூடத்தின் விஞ்ஞானிகள் இரவில் வாழைப்பழம் சாபிடுவது சிறந்த உறக்கத்திற்கு உதவுவதாக நிரூபித்துள்ளனர்.
4. செர்ரி உணவுகள் (Cherries)
செர்ரிகளில் உள்ள melatonin பொருள் சிறந்த உறக்கத்தை அளிப்பதோடு செர்ரி உணவில் உள்ள மற்ற பொருட்கள் நல்ல உடல் ஆரோக்கியதிகும் உதவுகின்றன.
The Journal of Sleep and Sleep Disorders Research என்ற ஆராய்ச்சி பத்திரிகையில் செர்ரி உணவுகளில் உள்ள பொருட்கள் சிறந்த மற்றும் வேகமான உறக்கத்திற்கு உதவுவதாக கூறுகின்றனர்.
5. ஆளி விதைகள் (Flax seeds)

ஆளி விதைகளில் உள்ள பொருட்கள் நம்முடைய தசைகள் மற்றும் நரம்பு மண்டலங்களின் சீரான இயக்கத்திற்கு உதவுகின்றன.
என்ன நிம்மதியான உறக்கத்திற்கு தயார்தானே 


Wednesday, April 4, 2012

பேரீச்சம் பழம்

 பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு எளிதில் கிடைக்கும் பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது.
இது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். இப்பழங்கள் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது. சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம்தான் பேரீச்சம் பழம். இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.
கண்பார்வை தெளிவடைய:
வைட்டமின் குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். மாலைக் கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து  சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
பெண்களுக்கு:
பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன. இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது. மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும். அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும். இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.
ஆண்களுக்கு:
ஆண்களுக்கு ஆண்மைத் தன்மையை அதிகரிக்க தேனுடன் பேரீச்சம்பழம் பெரிதும் உதவுகிறது.
சளி இருமலுக்கு:
பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும். நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும். இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை. இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
நரம்பு தளர்ச்சி நீங்க:
அதிக வேலைப்பளு, மன உளைச்சல், நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் படுவார்கள். இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும்.
பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.
பேரீச்சைப் பழத்தின் இன்னும் சில நன்மைகள்:
* இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும்.
* எலும்புகளை பலப்படுத்தும்.
* இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.
*முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது. அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும்.
* புண்கள் ஆறும். மூட்டு வலி நீங்கும்.
*பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் அண்டாது.

Tuesday, April 3, 2012

சவுதி இளவரசர் "ட்விட்டரில்' முதலீடு

சமூக வலைத் தளமான "ட்விட்டரில்', சவுதி அரேபிய இளவரசர் 300 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளார். சமூக வலைத் தளமான "ட்விட்டர்' , 2006ல் துவக்கப்பட்டது. உலகளவில் தற்போது இந்த வலைத் தளத்தை 10 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சவுதி இளவரசர் அல்வலீத் பின் தலால் பின் அப்துல் அஜீஸ் அல்சவுத், "ட்விட்டரில்' 300 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளதாக, அவரது கிங்டம் ஹோல்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஏழு மாதங்களாக இருதரப்புக்கும் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இந்த முதலீடு நடந்துள்ளது. அரபு புரட்சியில் "ட்விட்டர்' மற்றும் "பேஸ்புக்' சமூக வலைத் தளங்கள் குறிப்பிடத்தக்க பங்காற்றின. சிரியாவில் வெளிநாட்டு ஊடகங்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், அந்நாட்டு மக்கள், அங்கு நடப்பதை இந்த இரு வலைத் தளங்களின் வழியாக வெளியுலகுக்கு கொண்டு வருகின்றனர்.
இது குறித்து கிங்டம் ஹோல்டிங் நிறுவன இயக்குனர் அகமது ஹலாவானி கூறுகையில்,"இந்த சமூக வலைத்தளங்கள் வரும் ஆண்டுகளில், ஊடக உலகத்தின் அடிப்படையையே மாற்றி அமைத்து விடும் என நம்புகிறோம்' என்றார்.

Monday, April 2, 2012


ஓய்வு நேரம்!

காடுகளில் மரம் வெட்டுவதே அவர்களுடைய வேலை.
அதில் ஒருவன் நாள் ஒன்றுக்குப் பத்து மரங்கள் வெட்டுவான். இன்னொருவனோ இருபது மரங்களை வெட்டுவான்.
பத்து மரங்களை வெட்டுபவன் கேட்டான்: ""ஓய்வே எடுக்காமல் மரம் வெட்டுகிறேன். என்னால் 10 மரங்களுக்கு மேல் வெட்ட முடியவில்லை. நீயோ ஒருமணி நேரம் மரம் வெட்டினால் அரை மணி நேரம் ஓய்வு எடுத்துக் கொள்கிறாய். ஆனால் என்னை விட இரண்டு மடங்கு மரங்களை வெட்டி விடுகிறாய். இது எப்படி?''
அதற்கு இருபது மரங்களை வெட்டுபவன் சொன்னான்:
நான் ஓய்வெடுக்கும் அந்த அரைமணி நேரத்தில் ஓய்வெடுப்பதில்லை. கோடரியைக் கூர்மையானதாக்கிக் கொள்கிறேன்.''

Sunday, April 1, 2012

அறியாத சில விடயங்கள் - 7



  • நமது ரத்தம் சுமார் 30 கோடி கி.மீ.பயணிக்கிறது.
  •  நுரையீரல்கள் 23,040 முறை சுவாசிக்கின்றன.
  •  13,670 லிட்டர் காற்று சுவாசிக்கப்படுகிறது.
  •  இதயம் 1,03,689 முறை துடிக்கிறது.
  •  7 லட்சம் மூளை அணுக்கள் இயங்குகின்றன.
  •  முடி 0.425256 செ.மீ. நீளம் வளரும்.
  •  வாய் 4,800 வார்த்தைகள் பேசும்.
  •  தோல் 3/4 லிட்டர் வியர்வையை வெளியேற்றும்