Saturday, September 17, 2011

வல்லரசின் வறுமை

பேர தேசம் என்று ஒரு காலத்தில் புகழ் பெற்றிருந்த அமெரிக்காவில் ஏழ்மை வேகமாக பரவுகிறது என்று தேசிய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. சென்ற ஆண்டில் மட்டும் 26 லட்சம் பேர் வறுமைக்கோட்டுக்கு கீழே விழுந்திருக்கிறார்கள் என அதிர வைக்கிறது புள்ளிவிவரம். 4 கோடியே 62 லட்சம் அமெரிக்கர்கள் குடும்பம் நடத்த வழி தெரியாமல் ஏழ்மையில் தவிக்கிறார்களாம். அந்த நாட்டின் ஜனத்தொகை 31 கோடி. அதில் இந்த எண்ணிக்கை மிக அதிகம். 15 சதவீதத்துக்கு மேல். 

அரசின் கட்டுப்பாடுகள் இல்லாத தாராளமய பொருளாதாரம் தான் அமெரிக்காவின் வளர்ச்சிக்கு காரணமாக போற்றப்பட்டது. அதுவே பொருளாதார வீழ்ச்சிக்கும் வித்திட்டது என்பதை இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவர்கள் உணர நேர்ந்தது. அப்போது தொடங்கிய வேலை இழப்பு இன்றுவரை வேகம் குறையவில்லை. அங்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டியிருப்பதால் பெரும்பாலான கம்பெனிகள் இந்தியாவுக்கு பணிகளை மாற்றுவதாக ஏற்கனவே சலசலப்பு இருந்தது. சென்ற ஆண்டில் ஏறத்தாழ 9 கோடி அமெரிக்கர்கள் ஏதோ ஒரு கட்டத்திலாவது வேலையின்றி அல்லாடினர் என்று அரசு கணக்கிட்டுள்ளது. 

ஆள் குறைப்பு செய்த கம்பெனிகள் சம்பள உயர்வையும் நிறுத்தி வைத்தன. விலைகளும் கட்டணங்களும் உயரும் போது வருமானம் குறைந்ததால் தனிநபர் கடன் அதிகரித்தது. வேலையிழப்புக்கு அடுத்த வில்லனாக வந்திருப்பது மருத்துவ செலவு. பணக்காரர்கள் மட்டுமே தாங்க முடியும். எனவேதான் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு வழங்க ஒபாமா போராடுகிறார். 

அநேக நாடுகளில் நடப்பது போலவே அங்கும் மேல் தட்டு மக்களின் வருமானம் தொடர்ந்து கொழிக்கிறது. மேலே உள்ள 10 சதவீதம் பேரின் சராசரி வருவாய் 1,38,900 டாலர். கீழே உள்ள பத்து சதத்தின் சராசரி வருவாய் 11,900 டாலர். ஐம்பது சத மக்களின் வருமானம் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் அதே இடத்தில் நிற்கிறது.


மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் இளைஞர்கள். திருமணம் செய்ய முடியாமலும் குடும்பம் அமைக்க முடியாமலும் திணறுகின்றனர். இதுவரை கண்டிராத சமூக பிரச்னைகள் வெடிக்கும் அபாயம் தெரிகிறது. உலகை ஆள விரும்பிய வல்லரசின் நிலை அனைத்து நாடுகளுக்கும் பாடமாக மாறியிருக்கிறது. யாருக்கெல்லாம் அதை படிக்க மனம் இருக்கிறது?

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.