Monday, November 14, 2011

  நீண்ட ஆயுளின் ரகசியம்

இந்த உலகத்தில் பிறந்த அனைவருமே நீண்ட காலம் வாழ வேண்டும் என்றுதான் விரும்புகின்றனர். ஆனால் அதற்கான வழி தெரியாமல் யாரெல்லாம் நீண்ட ஆயுளுக்கு வழி கூறுகிறார்களோ அதைத் தேடி அலைகின்றனர். அல்லது அவர்கள் கூறும் வழிகளைப் பின்பற்றுகின்றனர். ஆனால் நீண்ட ஆயுளுக்கான வழி அவரவர்களிடம் தான் உள்ளது. என்ற ரகசியம் பலருக்கும் புரிவதில்லை. இதைத்தான் லண்டனைச் சேர்ந்த உளவியல் பேராசிரியர் ஆண்ட்ரூ ஸ்டெப்டோ ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளார்.
அவரது ஆராய்ச்சியின் முடிவு என்ன தெரியுமா? மகிழ்ச்சியாக இருந்தால் நீண்ட காலம் வாழலாம் என்பது தான் அது. அட இது தெரியாதா என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதை ஆராய்ச்சி மூலம் நிரூபித்துள்ளார் ஸ்டெப்டோ.
தனது ஆராய்ச்சிக்கு அவர் தேர்ந்தெடுத்தவர்கள் அனைவருமே 52 வயது முதல் 79 வயதுக்குள்பட்டவர்கள். சுமார் 4 ஆயிரம் பேரிடம் ஐந்து ஆண்டுகளாக மேற்கொண்ட தொடர் ஆராய்ச்சியின் முடிவை கட்டுரையாக வெளியிட்டுள்ளார் ஸ்டெப்டோ. இதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் எல்லாம் நல்ல சிந்தனை உள்ளவர்களுக்கு மன இறுக்கம் குறைவதற்கான ஹார்மோன் சுரப்பை கட்டுப்படுத்துவதாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதாகவும் தெரிவித்தன. ஆனால் பேராசிரியர் ஸ்டெப்டோவின் ஆராய்ச்சி முடிவுகள் எப்பவும் மகிழ்ச்சியாக இருப்பவர்களுக்கு உடல் ஆரோக்கியமாக இருப்பது நிரூபணமாகியுள்ளது. ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்ட 4 ஆயிரம் பேரிடமும் தினசரி நான்கு முறை அவர்களது மனோ நிலை எப்படி என்று கேட்கப்பட்டு அதற்கான விடை பதிவு செய்யப்பட்டது. இவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக ஆராய்ச்சிக்கு உள்படுத்தப்பட்டனர். ஆராய்ச்சியின்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் கணக்கிடப்பட்டு அவர்களது மனோ நிலையும் ஆராய்ச்சிக்குள்படுத்தப்பட்டது. ஒவ்வொருவரின் வயது, பாலினம், மன இறுக்கம், அவர்களுக்கு இருந்த நோய்கள், உடலியல் சார்ந்த நடவடிக்கைகள் ஆகியன ஆராயப்பட்டன. இதில் மகிழ்ச்சியாக இருந்தவர்களுக்கு எவ்வித நோயும் அண்டவில்லை. மேலும் இத்தகையோர் குறைந்த வயதில் உயிரிழப்பதும் இல்லை என்பது அறியப்பட்டது. இதிலிருந்து உடலியல் ரீதியிலான மாற்றம் சந்தோஷமாக இருப்பவர்களிடையே இருப்பது புலனாகியுள்ளது. இதனால் அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வது புரிந்தது என்று ஸ்டெப்டோ தனது ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார். மன இறுக்கத்துக்குக் காரணமான கார்டிசால் எனும் ஹார்மோன் சுரப்பு இவர்களுக்குக் குறைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். போதும் என்ற மனதுடன் இருப்பவர்கள் நீண்ட ஆயுளுடன் இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

Saturday, November 5, 2011


நொறுக்குத் தீனி உடல் நலத்திற்கு கேடு.

 
நொறுக்குத் தீனி உடல் நலத்திற்கு அதிக தீங்கு விளைவிக்கக் கூடியது.அதிக உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வர காரணமாக அமைகிறது.
அண்மையில்  நடைபெற்ற அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் வட்ட மேசை மாநாட்டில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நொறுக்குத் தீனியாகக் கருதப்படும் பர்கர், உருளைக்கிழங்கு வறுவல், சமோசா, குளிர்பானங்கள் போன்றவை குழந்தைகளின் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியது.
அதனால் பள்ளிக்கு அருகில் உள்ள நொறுக்குத் தீனி கடைகளை அகற்ற பள்ளி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நொறுக்குத் தீனிக்குப் பதிலாக ஊட்டச்சத்து மிக்க உணவு உட்கொள்ளப் பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அதிக உடல் பருமன் பல்வேறு நோய்களுக்கு காரணியாக அமைகிறது. ஆராய்ச்சியாளர்களின் தற்போதைய கணக்கின் படி 5 கோடிக்கும் அதிகமான சர்க்கரை நோயாளிகள் உள்ளனர் என்றும் இது 2025-ம் ஆண்டிற்குள் 9 கோடியைத் தாண்டி விடும் என்றும் தெரிவிக்காப்படுகிறது.

Friday, November 4, 2011

ஹஜ் பயணிகளுக்காக சிறப்பு வசதிகளுடன் பிளாக்பெர்ரி


ஹஜ் பயணிகளுக்கு மிகவும் உபயோகமான தகவல்களைக் கொண்டதாக பிளாக்பெர்ரி (Blackberry) மொபைல் போன் வந்துள்ளது. புனிதப் பயணத்தின் நோக்கத்தை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு உபயோகமான விஷயங்கள் பிளாக்பெர்ரி மொபைலில் இடம்பெற்றுள்ளன.
இதற்கான சாஃப்ட்வேரை பிளாக்பெர்ரி நிறுவனத்தின் துணை நிறுவனமான அஸ்கேட்ஸ் உருவாக்கியுள்ளது. பிளாக்பெர்ரி பயன்படுத்துவோர் இந்த சாஃப்ட்வேரை  ஆப்வேர்ல்ட் இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 
இந்த சாஃப்ட்வேர் அரபு, ஆங்கிலம், துருக்கி, பார்சி, உருது மற்றும் பஹசா உள்ளிட்ட 6 மொழிகளில் செயல்படும். ஹஜ் புனித யாத்திரைக்கான வழி உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ளலாம். வீடியோ காட்சிகளும் இதில் உள்ளன. இஹ்ரம் முதல் உம்ரா வரை அனைத்து புனித யாத்திரை சார்ந்த விஷயங்களும் இதில் விளக்கமாக உள்ளது. 
பட விளக்கம், படக் காட்சிகள் மற்றும் வீடியோ காட்சிகளாக இவை இடம்பெற்றுள்ளன.

Saturday, September 17, 2011

நெற்றிக்கண்ணுடன் பிறந்த குழந்தை!

சென்னை : சென்னையில் நெற்றிக்கண்ணுடன் பிறந்த 5 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இறந்த இக்குழந்தையின் உடல் எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் எனத்தெரிகிறது.
மதுரவாயலை சேர்ந்தவர் சத்யராணி(24). ஐந்து மாத கர்ப்பிணியான இவர் மருத்துவப் பரிசோதனைக்காக நேற்று முன்தினம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்தார். டாக்டர்கள் பமீதா, உமாசாந்தி ஆகியோர் பரிசோதனை செய்தனர். ஸ்கேன் செய்து பார்த்தபோது, வயிற்றில் குழந்தை ஒருவித அசைவுமின்றி இருந்தது.
இதையடுத்து, உடனடியாக குழந்தை வெளி கொண்டுவர சிகிச்சை அளிக்கப்பட்டது. அன்று இரவு அப்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு இடதுபுறம் ஒரு கண்ணும், நெற்றியில் ஒரு கண்ணும் இருந்தது. ஒவ்வொரு கையிலும் ஏழு விரல்கள் இருந்தன. மூக்கு இல்லை. இந்த குழந்தை பிறந்தவுடன் இறந்து விட்டது.
இதுகுறித்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் கீதாலட்சுமி கூறுகையில், ‘‘லட்சத்தில் ஒருவருக்கு இதுபோன்ற குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. சொந்தத்தில் திருமணம் செய்வதாலும், டாக்டர்களின் ஆலோசனை இன்றி மருந்துகள் சாப்பிட்டாலும் இதுபோன்ற குழந்தைகள் பிறக்கும் வாய்ப்புள்ளது.
21 வாரங்களே ஆன இந்த குழந்தைக்கு அனைத்து உறுப்புகளும் இருந்தாலும், சுவாசிக்க மூக்கு இல்லாததால் இறந்து விட்டது. கர்ப்பம் தரித்த பெண்கள் 3 மற்றும் 5வது மாதம் கட்டாயம் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இந்த குழந்தையின் உடல் எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்படும்’’ என்றார்.

வல்லரசின் வறுமை

பேர தேசம் என்று ஒரு காலத்தில் புகழ் பெற்றிருந்த அமெரிக்காவில் ஏழ்மை வேகமாக பரவுகிறது என்று தேசிய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. சென்ற ஆண்டில் மட்டும் 26 லட்சம் பேர் வறுமைக்கோட்டுக்கு கீழே விழுந்திருக்கிறார்கள் என அதிர வைக்கிறது புள்ளிவிவரம். 4 கோடியே 62 லட்சம் அமெரிக்கர்கள் குடும்பம் நடத்த வழி தெரியாமல் ஏழ்மையில் தவிக்கிறார்களாம். அந்த நாட்டின் ஜனத்தொகை 31 கோடி. அதில் இந்த எண்ணிக்கை மிக அதிகம். 15 சதவீதத்துக்கு மேல். 

அரசின் கட்டுப்பாடுகள் இல்லாத தாராளமய பொருளாதாரம் தான் அமெரிக்காவின் வளர்ச்சிக்கு காரணமாக போற்றப்பட்டது. அதுவே பொருளாதார வீழ்ச்சிக்கும் வித்திட்டது என்பதை இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவர்கள் உணர நேர்ந்தது. அப்போது தொடங்கிய வேலை இழப்பு இன்றுவரை வேகம் குறையவில்லை. அங்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டியிருப்பதால் பெரும்பாலான கம்பெனிகள் இந்தியாவுக்கு பணிகளை மாற்றுவதாக ஏற்கனவே சலசலப்பு இருந்தது. சென்ற ஆண்டில் ஏறத்தாழ 9 கோடி அமெரிக்கர்கள் ஏதோ ஒரு கட்டத்திலாவது வேலையின்றி அல்லாடினர் என்று அரசு கணக்கிட்டுள்ளது. 

ஆள் குறைப்பு செய்த கம்பெனிகள் சம்பள உயர்வையும் நிறுத்தி வைத்தன. விலைகளும் கட்டணங்களும் உயரும் போது வருமானம் குறைந்ததால் தனிநபர் கடன் அதிகரித்தது. வேலையிழப்புக்கு அடுத்த வில்லனாக வந்திருப்பது மருத்துவ செலவு. பணக்காரர்கள் மட்டுமே தாங்க முடியும். எனவேதான் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு வழங்க ஒபாமா போராடுகிறார். 

அநேக நாடுகளில் நடப்பது போலவே அங்கும் மேல் தட்டு மக்களின் வருமானம் தொடர்ந்து கொழிக்கிறது. மேலே உள்ள 10 சதவீதம் பேரின் சராசரி வருவாய் 1,38,900 டாலர். கீழே உள்ள பத்து சதத்தின் சராசரி வருவாய் 11,900 டாலர். ஐம்பது சத மக்களின் வருமானம் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் அதே இடத்தில் நிற்கிறது.


மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் இளைஞர்கள். திருமணம் செய்ய முடியாமலும் குடும்பம் அமைக்க முடியாமலும் திணறுகின்றனர். இதுவரை கண்டிராத சமூக பிரச்னைகள் வெடிக்கும் அபாயம் தெரிகிறது. உலகை ஆள விரும்பிய வல்லரசின் நிலை அனைத்து நாடுகளுக்கும் பாடமாக மாறியிருக்கிறது. யாருக்கெல்லாம் அதை படிக்க மனம் இருக்கிறது?