Wednesday, July 14, 2010
படைக்கப்பட்டது ‘செயற்கை உயிரி’.
உலகின் முதல் ‘செயற்கை உயிரி’ என்று வருணிக்கப்படுகின்ற ஒரு பாக்டீரியாவை விஞ்ஞானிகள் படைத்துள்ளனர். கணினி ஒன்றைப் பயன்படுத்தி வெறுமனே நான்கு இரசாயனங்களைச் சேர்த்து கட்டமைக்கப்பட்ட டி.என்.ஏ.வால் கட்டுப்படுத்தப்படக்கூடிய ஒற்றை உயிர்க்கல உயிரி ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
“இந்த பாக்டீரியாவின் மரபணுப் பாரம்பரியம் என்பது ஒரு கணினிதான். ஆகவே, செயற்கையாகப் படைக்கப்பட்ட முதல் உயிர் வடிவம் என்றால் அது நிச்சயம் இதுதான்.” என்கிறார் இந்த செயற்கை உயிரியைப் படைத்திருக்கின்ற ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் டாக்டர் கிரெய்க் வெண்டர்.
அதாவது ஒரு பாக்டீரியாவுக்கான மரபணுக் கட்டமைப்பை கணினி மென்பொருள் துணையுடன் வடிவமைத்து செயற்கையாக இரசாயனங்களைக் கலந்து உருவாக்கி அதனை ஒரு உயிரணுக்குள் செலுத்தி விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்.
விஞ்ஞானி கிரெய்க் வெண்டர்
அவ்வாறு செயற்கை மரபணுக் கட்டமைப்பு செலுத்தப்பட்டவுடன் அந்த உயிரிகள், அந்த செயற்கை மரபணுக் கட்டமைப்புக்கு ஏற்ற வகையில் செயல்பட ஆரம்பித்துள்ளன.
அமெரிக்காவில் மேரிலாண்ட் மற்றும் கலிபோர்னியா மாகாணங்களிலிருந்து செயல்படும் ஜே.சி.வி.ஐ. என்ற ஆராய்ச்சிக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த செயற்கை உயிரியை உருவாக்கியுள்ளனர்.
தி சயின்ஸ் என்ற அறிவியல் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ள இந்தக் கண்டுபிடிப்பு, அறிவியல் முன்னேற்றத்தில் ஒரு மாபெரும் முன்னேற்றம் என்று வருணிக்கப்படுகிறது.
மருந்தாக செயல்படக்கூடிய, எரிபொருளாக செயல்படக்கூடிய, காற்று மண்டலத்திலிருந்து கரியமிலவாயுவை உறிஞ்சி காற்றை சுத்தப்படுத்தக்கூடிய வகைகளில் எல்லாம் செயற்கை பேக்டீரியாக்களை உருவாக்கி நாம் பலன் பெற முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
அதேநேரம் செயற்கை உயிரினங்களால் உலகத்துக்கு பெரிய ஆபத்துகளும் வரலாம் என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இயற்கையில் காணப்படும் இந்த பேக்டீரியாவிலிருந்து இந்த செயற்கை பாக்டீரியாவை வேறுபடுத்திக் காட்டுவதற்காக செயற்கை பாக்டீரியாவின் மரபணுக் கட்டமைப்பில் அதனை உருவாக்கிய விஞ்ஞானியின் பெயர்கள், அவர்களின் இணையதள முகவரி போன்றவையும் அதிலே சேர்க்கப்பட்டுள்ளது.
இவ்வாறு செயற்கையாக உயிரிகளைப் படைப்பது தார்மீக அடிப்படையில் சரியா, தவறா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பையோஎன்ஜினியரிங் என்று சொல்லப்படும் இந்த உயிரியல் தொழில்நுட்பத்தால் ஒரு புதிய தொழில்துறைக்கான கதவுகள் திறந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பயனுள்ள எரிபொருட்களையும் புதிய தடுப்பு மருந்துகளையும் உருவாக்கக்கூடிய பணி செய்யும் செயற்கை பாக்டீரியாக்களுக்கான மரபணுக் கட்டமைப்பை வடிவமைப்பது தொடர்பில் இந்த ஆராய்ச்சி நிறுவனம் ஏற்கனவே மருந்து உறுபத்தி நிறுவனங்களுடனும் எரிபொருள் எடுக்கும் நிறுவனங்களுடனும் சேர்ந்துப் பணியாற்றி வருவதாக சொல்லப்படுகிறது.
ஆனால் இந்த செயற்கை உயிரிகளின் பலன்கள் மிகவும் மிகைப்படுத்திச் சொல்லப்படுவதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
Thanks To......Alaikal.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.