Tuesday, August 3, 2010

நீ...ள...மா...ன... நாக்கு கொண்ட நடிகர்.



கலிபோர்னியாவைச் சேர்ந்த நடிகரான நிக் அபெனசிவ் அமெரிக்காவிலேயே மிக நீண்ட நாக்கைக் கொண்டவர் என அமெரிக்காவின் தொலைக்காட்சியொன்று அறிவித்துள்ளது.
நடிகர் அபெனசிவ்வினுடைய மேலுதட்டிற்கு வெளியே நீட்டப்படக்கூடிய நாக்கின் நீளம் 3.5 அங்குலமாகும்.
எனினும் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதியப்படுவதற்கு அவரின் நாக்கின் நீளம் 0.30 அங்குலம் குறைவாக உள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
பிரிட்டனைச் சேர்ந்த ஸ் ரீபன் டெய்லர் என்பவர் உலகின் அதிக நீளமான நாக்கைக் கொண்டவராக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
20 வயதான நடிகர் அபெனசிவ் இது தொடர்பாக குறிப்பிடுகையில்... எனது நாக்கு நீளமானது என எனக்கு தெரியும். ஆனால். அது உலகின் மிக நீண்ட நாக்குகளில் ஒன்று என்று நான் அறிந்திருக்கவில்லை எனக் கூறியுள்ளார்.

40 லட்சம் நுளம்புகளைப் பிடித்து 3,000 டொலர் வென்ற பெண்.


தாய்வானைச் சேர்ந்த பெண் ஓருவர் அதிக எண்ணிக்கையான நுளம்புகளைப் பிடித்து  3,000 அமெரிக்க டொலர் பணப்பரிசை வென்றுள்ளார். இவர் ஒரே மாதத்தில் சுமார் 40 லட்சம் நுளம்புகளை பிடித்துள்ளார்.
தென் தாய்வான் யுன்லின் மாகாணத்தைச் சேர்ந்த ஹுவாங் யூ யென் என்பவரே நுளம்புப் பிடிக்கும் போட்டியொன்றில் இவ்வாறு அதிக நுளம்புகளை பிடித்துள்ளார்.  இப்போட்டியில் 72  போட்டியாளர்களை அவர் தோற்கடித்தார். அவர் பிடித்த நுளம்புகளின் மொத்த எடை  1..5 கிலோகிராம்களாகும்.
நுளம்புப் பிடிக்கும் கருவிகளைத் தயாரிக்கும் இம்பிகட்ஸ் இன்டர்நெஷனல் எனும் நிறுவனம் இப்போட்டியை ஏற்பாடு செய்திருந்து.
அந்நிறுவனமானது ஹுவாங் யூ யென்னின் பெயரை  கின்னஸ் உலக சாதனை நூலில் பதிவு செய்வதற்காக  அனுப்பிவைத்துள்ளது.
தாய்வானில் நுளம்புகளால் பல நோய்கள் பரவி வந்தன. குறிப்பாக, 1965 ஆம் ஆண்டு வரை மலேரியா நோய் அங்கு பரவியிருந்தது. தற்போதும்  டெங்கு நோய் பரப்பும் நுளம்புகள் குறித்து மிகவும் அவதானத்துடன் இருக்கி;றார்கள்.

சாண எரிவாயுவில் ஓடும் ரெயில்.

வேகமாக தீர்ந்து வரும் பெட்ரோல், டீசல் மாற்று எரிபொருள் தேவையை அதிகரித்திருக்கிறது. இதன் எதிரொலியாக காட்டாமணக்கில் இருந்து பயோடீசல் உள்பட பலவிதமான மாற்று எரிபொருட்கள் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இதில் ஒரு முன்னோடி நிகழ்வாக மாட்டுச் சாண எரிவாயுவைக் கொண்டு முதல்முதலாக ரெயில் இயக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஒக்லகோமா – போர்ட் வொர்த் நகரங்களுக்கு இடையே இந்த ரெயில் இயக்கப்படுகிறது. ஒரு ஆண்டு காலத்துக்கு பயணிகள் ரெயிலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ள அந்த ரெயில் சமீபத்தில் சோதனை ஓட்டமாக விடப்பட்டது. முதற்கட்ட ஆய்வில் 20 சதவீத எரிவாயுவும் 80 சதவீத டீசலும் சேர்த்து இயக்கிப் பார்க்கப்பட்டது. அதன்பிறகு அதிகப்படியான எரிவாயு சேர்த்து தற்போது ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த ரெயிலுக்கு `ஹார்ட்லேண்ட் பிளையர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. `பொதுவாக உயிரி எரிபொருளை பயன்படுத்தும்போது என்ஜினுக்குள் அழுத்தம் அதிகரித்து பாதிப்புகள் ஏற்படும். எனவே சில மாற்றங்களுடன் இந்த என்ஜின் தயாரிக்கப்பட்டு உள்ளது. தேசிய அளவில் முதல்முதலாக சாண எரிவாயுவில் இயங்கும் வகையில் ரெயில் விடப்பட்டுள்ளது’ என்று அங்குள்ள ரெயில்வே துறை தெரிவித்துள்ளது.

Monday, August 2, 2010

தனிப்பட்ட விவரங்களை தராதீர்கள் கூகுள் நிறுவனம் எச்சரிக்கை


ஜி-மெயில் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, ரகசிய எண் போன்ற விவரங்களை கேட்டு வரும் செய்திகளுக்கு பதில் அனுப்ப வேண்டாம் என, கூகுள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கூகுள் நிறுவனத்தின் ஜி-மெயில் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, சில தினங்களுக்கு முன் கூகுள் நிறுவனத்தின் பெயரில் அவசர கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. அதில் கூறப்பட்டிருந்ததாவது: பாதுகாப்பு காரணங்களுக்காக, வாடிக்கையாளர்கள் தங்களது பெயர், வங்கி கணக்கு ரகசிய எண், வேலை, எந்த நாடு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கடிதத்தில் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் பூர்த்தி செய்து உடனடியாக பதில் அனுப்ப வேண்டும்.
கடிதம் கிடைத்து ஏழு நாட்களுக்குள் மறுபதிவு செய்யாவிட்டால் ஜி-மெயில் கணக்கு நிரந்தரமாக காலாவதி ஆகிவிடும். இவ்வாறு குறிப்பிட்டிருந்த கடிதத்தைப் பார்த்த வாடிக்கையாளர்கள், குழம்பினர். சில நாட்களுக்குப் பின்னரே, இக்கடிதம் போலியானது என தெரிந்தது. இதுகுறித்து, கூகுள் நிறுவன செய்தி தொடர்பாளர் கூறியதாவது: கூகுள் நிறுவனம் சார்பில், அது போன்ற கடிதம் எதுவும் அனுப்பப்படவில்லை. சில விஷமிகள் மோசடி செய்யும் எண்ணத்தில், கூகுள் நிறுவன பெயரில் தவறான கடிதத்தை அனுப்பியுள்ளனர்.
வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு விவரங்கள், ரகசிய எண் ஆகியவற்றை தெரிந்து கொண்டு, பண மோசடிகளில் ஈடுபடும் எண்ணத்துடன் அவர்கள், ஏராளமான வாடிக்கையாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிகிறது. இதுபோன்று தனிப்பட்ட விவரங்கள் கேட்டு, நாங்கள் ஒருபோதும் கடிதம் அனுப்புவது கிடையாது. தனிப்பட்ட விவரங்கள் கேட்டு வரும் கடிதங்களுக்கு பதில் அனுப்ப வேண்டாம் என, வாடிக்கையாளர்களை அவ்வப்போது நாங்கள் எச்சரித்து வருகிறோம்.
இதுபோன்ற கடிதங்களை வாடிக்கையாளர்கள் நம்ப வேண்டாம். கடிதங்கள் குறித்து சந்தேகம் எழுந்தால், http://mail.google.com/support/bin/answer என்ற முகவரியில் வெளியிடப்பட்டிருக்கும் தகவல்களை கொண்டு, போலியான கடிதங்களை தெரிந்து கொள்ளலாம். இன்டர்நெட் பயன்படுத்துவோர், இதுபோன்று வரும் மோசடி கடிதங்களை விசாரணை மையங்கள் உதவியுடன் அறிந்துகொண்டு செயல்படுவது அவசியம்.இவ்வாறு அவர் கூறினார்.

60 ஆண்டுகளுக்குப் பின்னர் அரியவகை தேவாங்கு.

'ப்ளைன்ஸ் ஸ்லெண்டர் லோரிஸ்'
'ப்ளைன்ஸ் ஸ்லெண்டர் லோரிஸ்'
இலங்கையில் முற்றாக அழிவடைந்துவருவதாக கருதப்படும் அரிய வகை விலங்கினமொன்று இன்னும் உயிர்வாழ்வதை நிழற்படமொன்றின் மூலம் ஆய்வாளர்கள் முதற்தடவையாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
தேவாங்கு வகையைச் சார்ந்த இந்த விலங்கினம் இலங்கையில் சுமார் 60 வருடங்களின் பின்னர் முதற்தடவையாக பார்வைக்கு கிட்டியுள்ளதாக கருதப்படுகின்றது.
முதிர்ச்சியடைந்த ஆண் விலங்கொன்று, இரவு வேளையில் மரக்கிளையொன்றில் கமராவை உற்று நோக்கியபடி அமர்ந்திருக்கும் காட்சியே இங்கு பதிவாகியுள்ளது.
குறுகிய கால்களையும் நீளமான ரோமங்களையும் கொண்டுள்ள இந்த விலங்கு 'ப்ளைன்ஸ் ஸ்லெண்டர் லோரிஸ்' என்றழைக்கப்படும் மிக அரிய வகை தேவாங்கினமென அடையாளம் காணப்பட்டுள்ளது.
கடந்த நூற்றாண்டிலேயே அழிந்துவிட்டதாக கருதப்பட்டது
இலங்கையின் மலைகளை அண்டிய காட்டுப்பகுதிகளிலேயே வாழக்கூடிய இந்த தேவாங்கினம் தேயிலை மற்றும் பயிர்ச்செய்கைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட காடழிப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த நூற்றாண்டிலேயே பெரும்பாலும் அழிவடைந்துவிட்டதாக கருதப்படுகின்றது.
ஆனால் லண்டன் விலங்கியல் சங்கம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த கூட்டு ஆய்வாளர்கள் குழுவொன்று, இரவு வேளைகளில் நடத்தியுள்ள நூற்றுக்கணக்கான தேடல்களின் பின்னர், தற்போது இந்த விலங்கினத்தின் இருப்பு ஆவண ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொனிக்கல் மலை, ஹோர்ட்டன் பிளேஸ் மற்றும் ஹக்கல ஆகிய மூன்று வெவ்வேறு மலைப்பிரதேசங்களில் மட்டுமே தற்போது உயிர்வாழக்கூடிய இந்தத் தேவாங்கு வகை உயிரினம் இடத்துக்கு இடம் மாறுவதில் பிரச்சனைகள் இருப்பதால், அவற்றின் எதிர்கால இருப்பு பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளதாக ஆய்வுகளை நடத்திய குழுவின் தலைமை ஆய்வாளர் சமன் கமகே கூறுகிறார்