Monday, August 2, 2010

தனிப்பட்ட விவரங்களை தராதீர்கள் கூகுள் நிறுவனம் எச்சரிக்கை


ஜி-மெயில் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, ரகசிய எண் போன்ற விவரங்களை கேட்டு வரும் செய்திகளுக்கு பதில் அனுப்ப வேண்டாம் என, கூகுள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கூகுள் நிறுவனத்தின் ஜி-மெயில் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, சில தினங்களுக்கு முன் கூகுள் நிறுவனத்தின் பெயரில் அவசர கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. அதில் கூறப்பட்டிருந்ததாவது: பாதுகாப்பு காரணங்களுக்காக, வாடிக்கையாளர்கள் தங்களது பெயர், வங்கி கணக்கு ரகசிய எண், வேலை, எந்த நாடு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கடிதத்தில் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் பூர்த்தி செய்து உடனடியாக பதில் அனுப்ப வேண்டும்.
கடிதம் கிடைத்து ஏழு நாட்களுக்குள் மறுபதிவு செய்யாவிட்டால் ஜி-மெயில் கணக்கு நிரந்தரமாக காலாவதி ஆகிவிடும். இவ்வாறு குறிப்பிட்டிருந்த கடிதத்தைப் பார்த்த வாடிக்கையாளர்கள், குழம்பினர். சில நாட்களுக்குப் பின்னரே, இக்கடிதம் போலியானது என தெரிந்தது. இதுகுறித்து, கூகுள் நிறுவன செய்தி தொடர்பாளர் கூறியதாவது: கூகுள் நிறுவனம் சார்பில், அது போன்ற கடிதம் எதுவும் அனுப்பப்படவில்லை. சில விஷமிகள் மோசடி செய்யும் எண்ணத்தில், கூகுள் நிறுவன பெயரில் தவறான கடிதத்தை அனுப்பியுள்ளனர்.
வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு விவரங்கள், ரகசிய எண் ஆகியவற்றை தெரிந்து கொண்டு, பண மோசடிகளில் ஈடுபடும் எண்ணத்துடன் அவர்கள், ஏராளமான வாடிக்கையாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிகிறது. இதுபோன்று தனிப்பட்ட விவரங்கள் கேட்டு, நாங்கள் ஒருபோதும் கடிதம் அனுப்புவது கிடையாது. தனிப்பட்ட விவரங்கள் கேட்டு வரும் கடிதங்களுக்கு பதில் அனுப்ப வேண்டாம் என, வாடிக்கையாளர்களை அவ்வப்போது நாங்கள் எச்சரித்து வருகிறோம்.
இதுபோன்ற கடிதங்களை வாடிக்கையாளர்கள் நம்ப வேண்டாம். கடிதங்கள் குறித்து சந்தேகம் எழுந்தால், http://mail.google.com/support/bin/answer என்ற முகவரியில் வெளியிடப்பட்டிருக்கும் தகவல்களை கொண்டு, போலியான கடிதங்களை தெரிந்து கொள்ளலாம். இன்டர்நெட் பயன்படுத்துவோர், இதுபோன்று வரும் மோசடி கடிதங்களை விசாரணை மையங்கள் உதவியுடன் அறிந்துகொண்டு செயல்படுவது அவசியம்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.