Saturday, August 7, 2010

பால் மட்டும் குடித்து உயிர் வாழும் மனிதர்!

தெற்கு மும்பையில் ஒருவர், பிறந்தது முதல், பால் மட்டுமே குடித்து உயிர் வாழ்கிறார்.தெற்கு மும்பையில் உள்ள கிர்காம் கிராமத்தில் வசிக்கும் தீபக் சோக்சி (69) என்பவர், பிறந்தது முதல், திட உணவு எதுவும் சாப்பிடாமல், பால், கோபி, டீ, போன்ற பானங்கள் மட்டுமே பருகி, உயிர் வாழ்கிறார்.
புகைப்படம் பிடிப்பாளராக தொழில் செய்யும் இவர், சிறு வயதில் 5 அல்லது 6 லிட்டர் பால் குடித்தார். வயது உயர உயர, அளவு குறைந்து, தற்போது 2 அல்லது 3 கிளாஸ் மட்டுமே குடிக்கிறார்.இவருடைய உணவு முறை குறித்து, டாக்டரிடம் சான்றிதழும் வாங்கி வைத்திருக்கிறார்.
உடலில் சத்து குறைபாட்டுக்காக, விட்டமின் மாத்திரைகளை மட்டும் உட்கொள்கிறார்.
இது குறித்து தீபக் கூறியதாவது: என் வாழ்நாளில் இதுவரை திட உணவுகளை உண்டதில்லை. நான் திட உணவு உட்கொள்ள வேண்டுமென்று கோரி, பெற்றோர், டாக்டர்களிடம் அழைத்து சென்றனர். ஒரு டாக்டர் என்னை ரொட்டி சாப்பிட வைக்க முயன்றார்.
ஆனால், நான் நாக்கைக் கடித்துக் கொண்டதால், டாக்டர் என்னை பால் மட்டுமே பருகுமாறு கூறினார்.பின் என் பெற்றோர், டாக்டர்களிடம் அழைத்து போவதை விட்டு விட்டு, கோவில் கோவிலாக ஏறத் தொடங்கினர்.ஆனால், எந்தவித பலனில்லை. தற்போது, 93 வயதாகும் என் தாயார், தான் இறப்பதற்குள், நான் உணவு உட்கொள்வதை பார்த்துவிட வேண்டுமென்று கடவுளிடம் வேண்டிக் கொள்கிறார்.
எனது திருமணத்தில் கூட, மற்றவர்கள் விருந்து சாப்பிட்ட போது, நான் ஒரே ஒரு கிளாஸ் டீ தான் குடித்தேன். காய்கறிகள், பழங்கள் பற்றியோ அதன் சுவை பற்றியோ கூட எனக்கு எதுவும் தெரியாது. ஒரு முறை என் தாய், வெண்டைக்காய் வாங்கி வருமாறு கூறினார்;.
நான் கத்தரிக்காய் வாங்கிக் கொடுத்து, "பாட்டு' வாங்கிக் கொண்டேன்! இதுவரை எனக்கு திட உணவை சாப்பிட வேண்டுமென்ற எண்ணமே தோன்றியதில்லை. அதை பற்றி நினைத்தாலே எனக்கு வாந்தி வரும்.இவ்வாறு தீபக் கூறினார்.
இது குறித்து தீபக்கின் மருமகள் எலீசா கூறியதாவது:திருமணத்திற்கு முன்பு, எனது கணவர், தனது தந்தை இதுவரை உணவே உண்டது இல்லையென்றும், வெறும் பால் தான் குடிப்பார் என்றும் கூறினார். அதை நான் நம்பவில்லை. திருமணமாகி புகுந்த வீட்டிற்கு வந்து, மாமனாரை பார்த்த பின் தான் நம்பினேன். அவர் உணவே உண்பதில்லை; நாங்கள் சாப்பிடுவதை, வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்.இவ்வாறு எலீசா கூறினார்.

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.